அதீத வெப்ப அலைக்கு டில்லியில் 20 பேர் பலி
அதீத வெப்ப அலைக்கு டில்லியில் 20 பேர் பலி
அதீத வெப்ப அலைக்கு டில்லியில் 20 பேர் பலி
ADDED : ஜூன் 20, 2024 01:57 AM

புதுடில்லி:தேசிய தலைநகரில் மட்டும் இந்த கோடையில் வெப்ப அலையால் 20 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வெப்பத்தால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
டில்லியில் வரலாறு காணாத வெப்ப அலை வீசுகிறது. மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்களுக்கு வீடுகளுக்குள் நிலவும் வெப்பத்தை விரட்டுவதற்கு குளிர்சாதன பெட்டிகளே வரப்பிரசாதம்.
இதனால் இந்த கோடை காலத்தில் மின்நுகர்வு தினமும் உச்சத்தை எட்டி, சாதனை படைத்து வருகிறது. குளிக்கக் கூட தண்ணீர் இல்லாத கோடையை தேசிய தலைநகர் மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
அதிகாரப்பூர்வ தகவலின்படி, அரசு நடத்தும் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில், மே 27 முதல் கடந்த வாரம் வரை மட்டும் வெப்பம் தொடர்பான பிரச்னைகளுடன் 45 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுஉள்ளனர்.
இந்த மருத்துவமனையில் வெப்ப அலையால் அனுமதிக்கப்பட்ட ஒன்பது பேர் இதுவரை இறந்துள்ளனர். சப்தர்ஜங் மருத்துவமனையில் ஒன்பது பேரும் லோக் நாயக் மருத்துவமனையில் இருவரும் வெப்ப அலை பாதிப்புகளால் உயிரிழந்துள்ளனர்.
ஹீட்ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் பல்வேறு மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தேசிய தலைநகர் முழுவதும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் அல்லது உயிரிழந்தனர் என்ற தகவல் மாநகராட்சியிடம் இல்லை.
கடந்த வாரத்தில் மட்டும் அதிகபட்ச பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசின் சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தலைநகரில் வீசும் வெப்ப அலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கக்கூடும் என, பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த வெப்பத்தால் முதியோரும் நோயாளிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து வெப்ப அலையில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகாட்டுதலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க எந்நேரமும் தயாராக இருக்கும்படி, நகரில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.