வாடகை தாய்க்கு 180 நாட்கள் பேறுகால விடுமுறை அறிவிப்பு
வாடகை தாய்க்கு 180 நாட்கள் பேறுகால விடுமுறை அறிவிப்பு
வாடகை தாய்க்கு 180 நாட்கள் பேறுகால விடுமுறை அறிவிப்பு
ADDED : ஜூன் 24, 2024 11:09 PM

புதுடில்லி: வாடகை தாய் வாயிலாக குழந்தை பெற்றுக் கொள்ளும் அரசு பெண் ஊழியருக்கு, 180 நாட்கள் பேறுகால விடுமுறை அளிக்க மத்திய அரசு சட்ட திருத்தம் செய்துள்ளது.
அரசுப் பணியில் இருக்கும் பெண் மற்றும் ஆண் ஊழியர்கள் மகப்பேறு, குழந்தைகளின் கல்வி, உடல்நலன் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை கவனிக்க தங்கள் பணிக்காலம் முழுதுமான காலகட்டத்தில் அதிகபட்சமாக, 730 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ள தற்போதைய விதிகள் அனுமதிக்கின்றன.
இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே இந்த விடுமுறை அளிக்கப்படுகிறது. வாடகை தாய் வாயிலாக குழந்தை பெற்றுக் கொள்ளும் அரசு ஊழியருக்கு பேறுகால விடுப்பு அளிக்கப்படுவதில்லை.
கடந்த 50 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் இந்த விதியில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இதன்படி, வாடகை தாய் வாயிலாக குழந்தை பெற்றுக் கொள்பவர் அல்லது வாடகை தாயாக இருந்து குழந்தை பெற்றுத் தருபவர் அரசு ஊழியராக இருந்தால், அவருக்கு 180 நாட்கள் வரை பேறுகால விடுமுறை அளிக்க விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.
மேலும், வாடகை தாய் வாயிலாக குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்ணின் கணவர் அரசு ஊழியராக இருந்தால், குழந்தை பிறந்த ஆறு மாதத்திற்குள் 15 நாட்கள் வரை அவர் விடுப்பு எடுத்துக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர்கள் நலத்துறை வெளியிட்டுள்ளது.