சிட்பண்ட் நிறுவன மோசடி: ரூ.37 கோடி பறிமுதல்
சிட்பண்ட் நிறுவன மோசடி: ரூ.37 கோடி பறிமுதல்
சிட்பண்ட் நிறுவன மோசடி: ரூ.37 கோடி பறிமுதல்
ADDED : ஜூன் 24, 2024 11:06 PM

மும்பை: அதிக வட்டி தருவதாக கூறி, 600 கோடி ரூபாய் திரட்டி மோசடி செய்த ஆடிட்டர் ஒருவர் நடத்திய சிட்பண்ட் நிறுவனத்தில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில், 37 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் முதலீட்டு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த அம்பர் தலால் என்ற ஆடிட்டர், 'ரிட்ஸ் கன்சல்டன்சி' என்ற பெயரில் நிதி சேவை நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர், பல்வேறு முதலீட்டு திட்டங்களையும் நடத்தி வந்தார். அதிக வட்டி தருவதாகக் கூறி, 1,300க்கும் மேற்பட்டோரிடம் இருந்து, 600 கோடி ரூபாய் வரை திரட்டிஉள்ளார்.
பங்கு தரகர்கள், முதலீட்டு ஆலோசகர்களுக்கு கமிஷன் தருவதாகக் கூறி, அவர்கள் வாயிலாக இந்த திட்டங்களுக்கான முதலீடுகளை பெற்று வந்துள்ளார். அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் இவ்வாறு நிதியை திரட்டியுள்ளார்.
முதலில் சில மாதங்களில் உரிய முறையில் வட்டியைக் கொடுத்துள்ளார். அதுபோல, முதலீட்டாளர்களை அழைத்து வந்தவர்களுக்கு கமிஷனும் கொடுத்துள்ளார். மொத்த முதலீடு, 600 கோடி ரூபாயைத் தாண்டியபோது, அவர் திடீரென தலைமறைவானார்.
இது தொடர்பாக முதலீட்டாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக, அமலாக்கத் துறையும் விசாரணையை துவக்கியது. இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த அவர், சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
சிட்பண்ட் திட்டங்களை துவக்கி, அதன் வாயிலாக திரட்டிய தொகையில், 51 கோடி ரூபாய் வரை, தன் சொந்த வங்கி கணக்குகளுக்கு அவர் மாற்றியுள்ளார். அதில் இருந்து குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பியும், சொத்துகளை வாங்கியும் குவித்துள்ளார்.
மும்பையில் உள்ள அம்பர் தலாலின் அலுவலகத்தில், அமலாக்கத் துறை நேற்று முன்தினம் சோதனை நடத்தியது. அதில், 37 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் பல முதலீட்டு ஆவணங்கள் சிக்கியுள்ளன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.