வைப்பு நிதி முதலீடு உத்தி எப்படி இருக்க வேண்டும்?
வைப்பு நிதி முதலீடு உத்தி எப்படி இருக்க வேண்டும்?
வைப்பு நிதி முதலீடு உத்தி எப்படி இருக்க வேண்டும்?
ADDED : ஜூன் 08, 2025 06:49 PM

தற்போதைய வட்டி விகிதத்தில் முதலீடு செய்வது, ஏணிப்படி முறை, மாற்று வாய்ப்புகளை பரிசீலிப்பது உள்ளிட்ட வழிகள் பலன் தரும்.
ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு கடன் வழங்கும் ரெப்போ விகிதத்தை மேலும் 50 அடிப்படை புள்ளிகள் குறைத்திருப்பது, வைப்பு நிதி முதலீட்டாளர்களை தங்கள் முதலீடு உத்தி தொடர்பாக யோசிக்க வைத்துள்ளது.
இந்த ஆண்டு ஏற்கனவே இரண்டு முறை ரெப்போ விகிதம் குறைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் குறைக்கப்பட்டிருப்பது, வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைப்பதோடு, வைப்பு நிதிக்கான வட்டி விகித பலன் மீதும் தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறையும் சூழலில், முதலீட்டாளர்கள் முன் உள்ள வாய்ப்புகளை பார்க்கலாம்.
நீண்ட கால முதலீடு
ரெப்போ விகித குறைப்பிற்கு ஏற்ப உடனடியாக வங்கிகள் வட்டி விகிதத்தை அதிரடியாக குறைத்துவிடாது என்றாலும், படிப்படியாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும்.
மேலும், வட்டி விகிதம் குறையத் துவங்கியுள்ள சூழலில், முதலீட்டாளர்கள் தற்போதைய வட்டி விகிதத்தில் முதலீடு செய்வது ஏற்றதாக இருக்கும்.
அதிக பலன் தரக்கூடிய நீண்ட கால அளவிலான வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்யலாம். மூத்த குடிமகன்களை பொருத்தவரை, 50 அடிப்படை புள்ளிகள் கூடுதல் வட்டி விகித பலன் இருப்பதால், தற்போதைய அதிக வட்டி விகிதத்தில் முதலீடு செய்யலாம்.
குறுகிய கால அளவு முதலீடு மீது உடனடி தாக்கம் இருக்கும் என்பதால், மத்திய அல்லது நீண்ட கால அளவு முதலீட்டை நாடலாம் என வல்லுனர்கள் கருதுகின்றனர். அதே போல, மொத்தமாக முதலீடு செய்யாமல், தொகையை பிரித்து, ஒன்று, இரண்டு மற்றும் ஐந்தாண்டு என்பது போல பல்வேறு கால அளவுகளில் முதலீடு செய்யும் ஏணிப்படி முறையையும் பின்பற்றலாம்.
மாற்று வழிகள்
வட்டி விகிதம் குறையும் சூழலை எதிர்பார்த்து பலரும் இந்த உத்தியை ஏற்கனவே பின்பற்றி வரலாம். பணமாக்கலுக்கும் இந்த உத்தி கைகொடுக்கும் என கருதப்படுகிறது.
அதிக பலன் விரும்புகிறவர்கள் மாற்று வாய்ப்புகளையும் பரிசீலிக்கலாம். வைப்பு நிதிகளில், சிறிய வங்கிகள் அதிக வட்டி விகிதம் அளிக்கின்றன. இடர் தன்மைக்கு ஏற்ப இவற்றை பரிசீலிக்கலாம்.
பொதுவாகவே வர்த்தக வைப்பு நிதிகள் அதிக வட்டி பலன் அளிப்பவை என கருதப்படுகின்றன. ஆனால், இவற்றில் இடர் அம்சமும் கூடுதலாக உண்டு. நிதி இலக்குகளுக்கு ஏற்ப முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்புகளை பரிசீலிக்கலாம்.
மேலும், வைப்பு நிதிகளுக்கான காப்பீடு வசதியையும் மனதில் கொண்டு, ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் முதலீடு செய்வதும் ஏற்றதாக இருக்கும் என்கின்றனர்.
சிறு சேமிப்பு திட்டங்களையும் முதலீட்டாளர்கள் பரிசீலிப்பது ஏற்றதாக இருக்கும். வரி சேமிப்பு வைப்பு நிதி அல்லது மூத்த குடிமகன் சேமிப்பு திட்டம் கூடுதல் பலனளிக்கும் வாய்ப்புள்ளதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால், முதலீடு தரும் பலனோடு அவற்றுக்கான பாதுகாப்பு அம்சத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வர்த்தக டெபாசிட்கள் எனில், அவற்றுக்கான ரேட்டிங்கை கவனிக்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் மாறும் வட்டி விகித சேமிப்பு பத்திரங்கள் அல்லது மியூச்சுவல் பண்ட்களின் கடன்சார் நிதிகள் முதலீடு வாய்ப்புகளையும் கவனமாக பரிசீலிக்கலாம்.