கடன் வளர்ச்சியில் தனியாரை விஞ்சிய பொதுத்துறை வங்கிகள் 14 ஆண்டுகளில் முதல்முறை
கடன் வளர்ச்சியில் தனியாரை விஞ்சிய பொதுத்துறை வங்கிகள் 14 ஆண்டுகளில் முதல்முறை
கடன் வளர்ச்சியில் தனியாரை விஞ்சிய பொதுத்துறை வங்கிகள் 14 ஆண்டுகளில் முதல்முறை
ADDED : ஜூன் 11, 2025 01:04 AM

புதுடில்லி:கடந்த 14 ஆண்டுகளில் முதன் முறையாக, கடன் வளர்ச்சியில் தனியார் வங்கிகளை பொதுத்துறை வங்கிகள் விஞ்சியுள்ளன.
கடந்த நிதியாண்டில், பொதுத்துறை வங்கிகளின் கடன் வளர்ச்சி 13.10 சதவீதமாக இருந்த நிலையில், தனியார் வங்கிகளின் கடன் வளர்ச்சி 9 சதவீதமாக இருந்தது.
இதற்கு முன்பாக, கடந்த 2011ல் தான் தனியார் வங்கிகளைக் காட்டிலும் பொதுத்துறை வங்கிகளின் கடன் வளர்ச்சி அதிகமாக இருந்தது. அப்போதும் 4 சதவீதம் அளவுக்கே வித்தியாசம் இருந்தது. இதன் பின், இரண்டுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்துக் கொண்டே வந்தது.
கடந்த 2016ல், பொதுத்துறையை காட்டிலும் தனியார் துறை வங்கிகளின் கடன் வளர்ச்சி 20 சதவீதம் அதிகமாக இருந்தது. கொரோனா காலகட்டத்தில் இந்த இடைவெளி குறையத் துவங்கியது. இந்நிலையில், தற்போது பொதுத்துறை வங்கிகள் மீண்டும் முந்தியுள்ளன.
குறிப்பிட்ட ஒரு பிரிவு என்றில்லாமல், அடமான கடன், நிறுவன கடன், வாகனம் போன்ற சில்லரை கடன் உள்ளிட்ட பெருவாரியான பிரிவுகளில் பொதுத்துறை வங்கிகள் சிறப்பான கடன் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
தனியார் துறை வங்கிகள் தொடர்ந்து சராசரியை விட அதிக லாபம் ஈட்டி வந்தாலும், கடன் வளர்ச்சி மந்தமடைவது வங்கிகளின் பங்கு விலையில் பாதிப்பை ஏற்படுத்தும் என, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், தனியார் துறையில் போட்டித்தன்மை அதிகரித்து வருவதும் ஒரு சவாலாக பார்க்கப்படுகிறது.