'பிளிப்கார்ட்' ஏகபோக வர்த்தகம் உச்ச நீதிமன்றம் காட்டம் ஆலோசகரை நியமித்து உத்தரவு
'பிளிப்கார்ட்' ஏகபோக வர்த்தகம் உச்ச நீதிமன்றம் காட்டம் ஆலோசகரை நியமித்து உத்தரவு
'பிளிப்கார்ட்' ஏகபோக வர்த்தகம் உச்ச நீதிமன்றம் காட்டம் ஆலோசகரை நியமித்து உத்தரவு
ADDED : மே 21, 2025 11:42 PM

புதுடில்லி:பிளிப்கார்ட் நிறுவனம், வர்த்தகத்தில் போட்டித்தன்மையை பாதிப்பதுடன், ஏகபோகத்துக்கு பெயர் பெற்றது. இதனால் சிறு வணிகர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என, உச்ச நீதிமன்றம் காட்டமாக தெரிவித்து உள்ளது.
பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு எதிரான தனியுரிமை தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ சட்ட ஆலோசகர் ஒருவரை நியமித்துஉள்ளது.
பிளிப்கார்ட் தன் சந்தை ஆதிக்கத்தை தவறாகப் பயன்படுத்துவதாக, அகில இந்திய ஆன்லைன் விற்பனையாளர்கள் சங்கம் கடந்த 2018ல் இந்திய போட்டி ஆணையத்தில் புகார் அளித்திருந்தது. இதை விசாரித்த ஆணையம், பிளிப்கார்ட்டுக்கு ஆதரவாக, புகாரை தள்ளுபடி செய்தது.
ஆணையத்தின் முடிவை ஏற்க மறுத்த தேசிய சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம், கடந்த 2020ல் மறு விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதை எதிர்த்து பிளிப்கார்ட் உச்ச நீதிமன்றம் சென்றது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நிறுவனத்தின் மீதான தனியுரிமை புகாரை விசாரிக்க விரும்புவதாக தெரிவித்தது.
பெரிய நிறுவனங்களின் முதலீடு அவசியம் என்ற போதிலும், சிறு வணிகர்கள் மற்றும் நுகர்வோரின் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த விவகாரம் குறித்து விரிவாக விசாரிக்க விரும்புவதாகவும், இதில் நீதிமன்றத்துக்கு ஆலோசனை வழங்க ஆலோசகர் ஒருவரை நியமிப்பதாகவும் கூறி, வழக்கை வரும் ஆகஸ்ட் மாதத்துக்கு ஒத்தி வைத்தது.