முடிவுக்கு வந்த 50 ஆண்டுகால சவுதி - அமெரிக்க ஒப்பந்தம்
முடிவுக்கு வந்த 50 ஆண்டுகால சவுதி - அமெரிக்க ஒப்பந்தம்
முடிவுக்கு வந்த 50 ஆண்டுகால சவுதி - அமெரிக்க ஒப்பந்தம்
ADDED : ஜூன் 15, 2024 01:03 AM

புதுடில்லி:சவுதி அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த 50 ஆண்டுகளாக நீடித்து வந்த 'பெட்ரோடாலர்' ஒப்பந்தம், கடந்த ஜூன் 9ம் தேதி காலாவதியானது. இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்கப் போவதில்லை என, சவுதி அரேபியா முடிவெடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல கட்ட பேச்சுகளுக்குப் பின், கடந்த 1974ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி, அமெரிக்க அதிபர் ரிச்சர்டு நிக்சன் மற்றும் சவுதி அரச குடும்பத்தினர் இடையே பெட்ரோடாலர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் படி, சவுதி அரேபியாவின் பாதுகாப்புக்கு உறுதி அளிக்கவும்; ராணுவ உதவிகளை வழங்கவும் அமெரிக்கா சம்மதித்தது.
இதற்கு கைமாறாக சவுதி அரேபியா அதன் எண்ணெய் வியாபாரத்தை, அமெரிக்க டாலர்களில் மட்டுமே மேற்கொள்ள ஒப்புக்கொண்டது. இது சர்வதேச பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்த அமெரிக்காவுக்கு மிகவும் உதவியது.
மேலும், எண்ணெய் வளம் நிறைந்த மத்திய கிழக்கு நாடுகளில் அதன் இருப்பையும் வலுப்படுத்தியது.
தற்போது இந்த ஒப்பந்தம் காலாவதியாகியுள்ள நிலையில், இதனை புதுப்பிக்க சவுதி அரேபியா விருப்பம் தெரிவிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. சவுதியின் இந்த முடிவு உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
ஏனென்றால், இவ்வளவு காலமாக, சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே உலகின் பல்வேறு நாடுகள் அதிகளவிலான எண்ணெய்யை இறக்குமதி செய்து வந்தன.
இந்நிலையில், திடீரென அந்நாடு இவ்வாறு முடிவெடுத்திருப்பது, சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடும்.
இதுவரை, எண்ணெய் ஏற்றுமதிக்கான கட்டணத்தை அமெரிக்க டாலர்களில் பெற்று வந்த நாடுகள், இனி வெவ்வேறு நாடுகளின் நாணயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும்.
பொதுவாக, மற்ற நாணயங்களைக் காட்டிலும் அமெரிக்க டாலர் சற்றே அதிக ஸ்திரத்தன்மையுடன் இருக்கும் என்ற காரணத்தால், உலகளவிலான வர்த்தகத்தில் பெரும்பாலும் டாலரே பயன்படுத்தப்படுகிறது.
மேலும், சவுதி அரேபியாவின் இந்த முடிவு, அமெரிக்காவின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், உலக பொருளாதாரத்தில் அதன் ஆதிக்கத்தை குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இது புவிசார் அரசியல் சூழலிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். ஏனென்றால், இதன்பின் ரஷ்யா மற்றும் சீனாவுடனான தன்னுடைய உறவை சவுதி வலுப்படுத்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதியாக, உலக வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கம் குறைந்து விடும். இதன் காரணமாக ஐரோப்பிய யூனியன் நாடுகளின் நாணயமான 'யூரோ', சீன 'யுவான்' மற்றும் கிரிப்டோ நாணயங்களின் பயன்பாடு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.