Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ விண்வெளி துறையில் முதலீட்டை ஈர்க்க 'அக்னிகுல்' நிறுவனத்துடன் அரசு ஆலோசனை

விண்வெளி துறையில் முதலீட்டை ஈர்க்க 'அக்னிகுல்' நிறுவனத்துடன் அரசு ஆலோசனை

விண்வெளி துறையில் முதலீட்டை ஈர்க்க 'அக்னிகுல்' நிறுவனத்துடன் அரசு ஆலோசனை

விண்வெளி துறையில் முதலீட்டை ஈர்க்க 'அக்னிகுல்' நிறுவனத்துடன் அரசு ஆலோசனை

ADDED : ஜூன் 15, 2024 09:37 PM


Google News
Latest Tamil News
சென்னை:தமிழகத்தில் விண்வெளி துறையில், அதிக முதலீடுகளை ஈர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, 'அக்னிகுல்' நிறுவனத்துடன், தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் ஆலோசனை நடத்தியுள்ளது.

மத்திய அரசு, விண்வெளி துறையில், 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் போல், தனியார் நிறுவனங்களும் ஈடுபட அனுமதி அளித்துள்ளது. இதனால், பல்வேறு நிறுவனங்களும் ராக்கெட் வடிவமைப்பு, செயற்கைக்கோள் உருவாக்கம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட ஆர்வம் காட்டி வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக சென்னை ஐ.ஐ.டி.,யில் 'அக்னிகுல் காஸ்மோஸ்' என்ற 'ஸ்டார்ட் அப்' நிறுவனத்திலிருந்து 'அக்னிபான்' எனும் ராக்கெட் கடந்த மாதம் 30ம் தேதி விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இதையடுத்து, தமிழகத்தில் விண்வெளி துறையில் முதலீடுகளை ஈர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, சென்னையில், நேற்று முன்தினம் தமிழக தொழில் துறை அதிகாரிகள், அக்னிகுல் நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தினர்.

இதில், தொழில் துறை செயலர் அருண்ராய், 'கைடன்ஸ்' எனப் படும் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குனர் விஷ்ணு, அக்னிகுல் ஆலோசகர் சத்யநாராயணன் சக்கரவர்த்தி, இணை நிறுவனர் ஸ்ரீநாத் ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழக அரசு, வானுார்தி மற்றும் பாதுகாப்பு தொழிலில், அடுத்த பத்து ஆண்டுகளில், 75,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க, தமிழக வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கையை வெளியிட்டுள்ளது.

இதுதவிர, சென்னை, திருச்சி, கோவை, சேலம், கிருஷ்ணகிரி ஓசூரை உள்ளடக்கி, பாதுகாப்பு தொழில்துறை பெருவழித்தடம் செயல்படுத்தப்படுகிறது.

துாத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில், 'இஸ்ரோ' அமைத்து வரும் ராக்கெட் ஏவுதளம் அருகில், 'டிட்கோ' எனப்படும் தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம், விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா அமைக்க உள்ளது.

வருங்காலத்தில் விண்வெளி துறையின் வளர்ச்சி, அந்த துறையில் முதலீட்டை ஈர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை, அரசிடம் இருந்து நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் உள்ளிட்டவை தொடர்பாக, அக்னிகுல் நிறுவனத்திடம் ஆலோசனை கேட்கப்பட்டது.

அதில் கிடைத்த தகவல்கள், அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, திட்டங்களாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us