சில்லரை விலை பணவீக்கம் ஓராண்டில் இல்லாத சரிவு
சில்லரை விலை பணவீக்கம் ஓராண்டில் இல்லாத சரிவு
சில்லரை விலை பணவீக்கம் ஓராண்டில் இல்லாத சரிவு
ADDED : ஜூன் 13, 2024 01:40 AM

புதுடில்லி:நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலான சில்லரை விலை பணவீக்க விகிதம், கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு மே மாதம் 4.75 சதவீதமாக குறைந்துஉள்ளது.
பணவீக்கம் 4 சதவீதத்துக்கு கீழே வந்தால் மட்டுமே, ரெப்போ வட்டி விகிதத்தை குறைப்பது குறித்து சிந்திக்கப்படும் என, சமீபத்தில் நடந்து முடிந்த ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு கூட்டத்தில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்து இருந்தார்.
அதன் அடிப்படையில் பார்க்கும்போது, தற்போதைக்கு வட்டி விகிதம் குறைக்கப்படாது என்றே தெரிகிறது.
மே மாத பணவீக்கம் தொடர்பாக, தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்து உள்ளதாவது:
கடந்த ஏப்ரல் மாதத்தில் 4.83 சதவீதமாக இருந்த சில்லரை விலை பணவீக்கம், மே மாதத்தில் 4.75 சதவீதமாக குறைந்துள்ளது. எனினும், இது கடந்தாண்டு மே மாதத்தின் 4.31 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், அதிகமாகும்.
கடந்த மாதம் சில சமையல் பொருட்களின் விலை சற்றே குறைந்ததை அடுத்து, பணவீக்கம் குறைந்துள்ளது.
கடந்த ஏப்ரலில் உணவுப் பொருட்களின் பணவீக்கம் 8.70 சதவீதமாக இருந்த நிலையில், மே மாதம் 8.69 சதவீதமாக சற்றே குறைந்துள்ளது.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் முதலே பணவீக்கம் படிப்படியாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதியாண்டுக்கான நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 4.50 சதவீதமாக இருக்கும் என, ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.