சென்னையில் புதிய திட்டங்கள் அதிகரித்தாலும் வீடுகளின் விற்பனை சரிவு: 'கிரெடாய்' அறிக்கை
சென்னையில் புதிய திட்டங்கள் அதிகரித்தாலும் வீடுகளின் விற்பனை சரிவு: 'கிரெடாய்' அறிக்கை
சென்னையில் புதிய திட்டங்கள் அதிகரித்தாலும் வீடுகளின் விற்பனை சரிவு: 'கிரெடாய்' அறிக்கை
ADDED : ஜூன் 13, 2024 01:39 AM

சென்னை:சென்னை பெருநகரில் புதிதாக அறிவிக்கப்படும் குடியிருப்பு திட்டங்களில், வீடுகள் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்து காணப்பட்டாலும், விற்பனையில் சரிவு காணப்படுவதாக, 'கிரெடாய்' அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை பெருநகரில், ரியல் எஸ்டேட் துறை நிலவரம் குறித்து, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய் அமைப்பின் சென்னை பிரிவு, ஆய்வு அறிக்கை வெளியிடுகிறது. அந்த வகையில், 2024 ஆண்டின் முதல் காலாண்டுக்கான அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
அதில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது:
தமிழக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகள் அடிப்படையில், புதிய திட்டங்களின் வருகை கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த வகையில், முதல் காலாண்டில் 78 புதிய திட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில், 59 சதவீத திட்டங்கள் கிரெடாய் உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. முந்தைய காலாண்டில் பதிவான புதிய திட்டங்களை காட்டிலும், 28 சதவீதம் அதிகம்.
40 சதவீதம் அதிகம்
முதல் காலாண்டில் பதிவு செய்யப்பட்ட புதிய திட்டங்கள் வாயிலாக, 7,218 வீடுகள் வர வாய்ப்புள்ளது. இது, முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 40 சதவீதம் அதிகம்.
இதில், தென்சென்னை புறநகர் பகுதிகளில் அதிகபட்சமாக, 3,808 வீடுகள் கட்டுவதற்கான திட்டங்கள் பதிவாகி உள்ளன. தென் சென்னையில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி அதிகரிப்புக்கு இது நல்ல உதாரணம்.
கடந்த 2023 இறுதி காலாண்டில், 5,332 வீடுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், 2024 முதல் காலாண்டில், 2,983 வீடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. 89 சதவீத வீடுகள், கிரெடாய் உறுப்பினர்களால் கட்டப்பட்டன.
வீடுகள் விற்பனை, சென்னையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 44 சதவீதம் வரை குறைந்துள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து, கிரெடாய் சென்னை பிரிவு தலைவர் முகமது அலி கூறியதாவது:
பத்திரப்பதிவு கட்டணங் களில் அடிக்கடி மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களால், சென்னையில் வீடுகள் விற்பனை 44 சதவீதம் வரை குறைந்துள்ளது. அரசிடம் இருந்து தெளிவான உத்தரவுகள் வராததால், வீடுகள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.
சவால்
நடப்பு ஆண்டின் முதல் காலாண்டு இறுதியில், 7,717 வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன. இது, புதிய திட்டங்களை செயல்படுத்துவோருக்கு சவாலாக அமைந்துஉள்ளது.
இந்த விஷயத்தில் அரசுடன் ஒத்துழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இதில், நேர்மறையான முன்னேற்றங்களை எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.