கிலோ 100 ரூபாய் எகிறும் பச்சை மிளகாய்
கிலோ 100 ரூபாய் எகிறும் பச்சை மிளகாய்
கிலோ 100 ரூபாய் எகிறும் பச்சை மிளகாய்
ADDED : ஜூன் 13, 2024 01:41 AM

சேலம்:கடந்த சில நாட்களாக காய்கறி விலை உயர்ந்து வரும் நிலையில், கோடை மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, பச்சை மிளகாய் உள்ளிட்டவற்றின் விலை, கிலோ 100 ரூபாயை தொட்டுள்ளது. அத்துடன், தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் சில நாட்களாக தக்காளி, சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கு விளைச்சல் குறைவே காரணம். நேற்று முன்தினம், சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில் தக்காளி கிலோ, 45 முதல் 55 ரூபாயாக இருந்த நிலையில், வெளிமார்க்கெட்டில், 60 ரூபாய்க்கு விற்றது. நேற்று தக்காளி வரத்து குறைந்து, உழவர் சந்தையில் கிலோ, 60 - 80 ரூபாய்; வெளி மார்க்கெட்டில், 80 - 90 ரூபாய் வரை விலைபோனது.
அதேபோல் கிலோ, 90க்கு விற்ற பச்சை மிளகாய் நேற்று 100 ரூபாயாக உயர்ந்தது. இதே போல் முருங்கைக்காய் துவங்கி கொத்தமல்லி கட்டு வரை விலை உயர்ந்துள்ளது.
வெயிலுக்கு பின் கோடை மழையால் விலை குறையும் என எதிர்பார்த்த நிலையில், காய்கறிகள் விலை, 'சதம்' அடித்துள்ளது.
விவசாயிகள், வேளாண் அலுவலர்கள் கூறுகையில், 'கோடை வெயிலில் காப்பாற்றிய தக்காளி செடிகள், அதன் பின் பெய்த கோடை மழையால் அழுகி உதிர்ந்தன. அதேபோல் கத்தரி பிஞ்சிலேயே கொட்டியது. வெண்டைக்காய் சுருண்டும், மிளகாய் பிஞ்சாக கொட்டியும், சுருண்டும் விட்டது. கோடை மழைக்கு பின் நடவு செய்யப்பட்டுள்ள காய்கறிகள் ஓரிரு வாரத்தில் விற்பனைக்கு வரும். மழை தொடர்ந்தால் காய்கறி விளைச்சலில் பாதிப்பு ஏற்படும்' என்றனர்.