தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி மே மாதத்தில் சற்றே சரிவு கண்டது
தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி மே மாதத்தில் சற்றே சரிவு கண்டது
தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி மே மாதத்தில் சற்றே சரிவு கண்டது
ADDED : ஜூன் 04, 2024 06:55 AM

புதுடில்லி : இந்தியாவின் தயாரிப்புத்துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், மே மாதத்தில் சற்றே குறைந்துள்ளது. எனினும், 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த மாதத்தில் ஏற்றுமதிகள் அதிகரித்து உள்ளன.
உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின் ஒவ்வொரு மாத தயாரிப்பு நிலவரம் குறித்து எச்.எஸ்.பி.சி., வங்கி ஆய்வு நடத்தி, பி.எம்.ஐ., குறியீடு குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. 'எஸ் அண்டு பி., குளோபல் இந்தியா' எனும் நிறுவனம், இதற்கான தரவுகளை திரட்டி வருகிறது.
இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான எஸ் அண்டு பி., - பி.எம்.ஐ., குறியீடு, கடந்த மே மாதத்தில் 57.50 புள்ளிகளாக இருந்தது. இதற்கு முந்தைய ஏப்ரல் மாதத்தில் பி.எம்.ஐ., குறியீடு, 58.80 புள்ளிகளாக இருந்தது.
இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும்; 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும். ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், மே மாத உறபத்தி சற்றே குறைவு என்றாலும், வளர்ச்சிப் பாதையிலேயே தொடர்ந்தது.
கடுமையான வெப்பம் காரணமாக பணி நேரம் குறைந்தது; தேர்தல் கால போக்குவரத்து கட்டுப்பாடுகள்; மற்றும் உற்பத்தி செலவுகள் தொடர்ந்து அதிகரித்தது ஆகியவையே வளர்ச்சி குறைய முக்கிய காரணங்களாகும்.
எனினும், கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த மே மாதம் ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரித்தன. வலுவான விற்பனை செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி குறித்த கண்ணோட்டங்களால், கடந்த மாதம் வேலை வாய்ப்புகளும் அதிகரித்தன. குறிப்பாக, தயாரிப்புத் துறையில், இதுவரை இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரித்தன.
மூலப் பொருள், சரக்கு போக்குவரத்துக்கான செலவு அதிகரிப்பால் உள்ளீட்டு பொருட்களின் விலை அதிகரித்தது. இதனால் தயாரிப்பாளார்களின் லாபம் சற்றே குறைந்தது. எனினும், வருங்கால செயல்பாடுகள் குறித்து தயாரிப்பு நிறுவனங்கள் அதீத நம்பிக்கையுடனே உள்ளனர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.