சிங்கப்பூர், மொரீஷியஸ் நாடுகள் இந்தியாவில் அதிக முதலீடு
சிங்கப்பூர், மொரீஷியஸ் நாடுகள் இந்தியாவில் அதிக முதலீடு
சிங்கப்பூர், மொரீஷியஸ் நாடுகள் இந்தியாவில் அதிக முதலீடு
ADDED : ஜூன் 04, 2024 06:55 AM

புதுடில்லி : கடந்த நிதியாண்டில், கிட்டத்தட்ட 98,000 கோடி ரூபாய் முதலீட்டுடன், இந்தியாவில் அதிக முதலீடுகளை மேற்கொண்ட வெளிநாடுகளின் பட்டியலில், சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது.
அதிக முதலீடு மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில், சிங்கப்பூருக்கு அடுத்ததாக, 66,100 கோடி ரூபாய் முதலீட்டுடன், மொரீஷியஸ் இரண்டாவது இடத்திலும்; 41,400 கோடி ரூபாய் முதலீட்டுடன் அமெரிக்கா, மூன்றாவது இடத்திலும் உள்ளது.
இதுதொடர்பாக, பொருளாதார நிபுணர்கள் தெரிவித்ததாவது:
கடந்த 2016ம் ஆண்டு, மொரீஷியஸ் உடனான இந்தியாவின் வரி ஒப்பந்தத்தை தொடர்ந்து, அந்நாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரிச் சலுகை நிறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கடந்த சில ஆண்டுகளாகவே சிங்கப்பூர் தான் இந்தியாவின் அன்னிய முதலீட்டாளர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.
ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, கடந்த நிதியாண்டில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய முதலீடுகள் சரிந்தன.
எனினும், முதலீட்டு அறக்கட்டளைகள் தொடர்பான விதிமுறைகளில் 'செபி' மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதை அடுத்து, நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில் அன்னிய முதலீடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
இவ்வாறு தெரிவித்தனர்.
கடந்த நிதியாண்டில் சேவைகள், கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள், வர்த்தகம், தொலைதொடர்பு, வாகனம் போன்ற துறைகளில், அன்னிய நேரடி முதலீடு குறைந்துள்ளது.
மாறாக, கட்டுமானம் மற்றும் மின் துறைகளில் முதலீடுகள் ஆரோக்கியமான வளர்ச்சியைக் கண்டன.