முதலீட்டாளர் விழிப்புணர்வுக்காக 'செபி'யின் புதிய செயலி அறிமுகம்
முதலீட்டாளர் விழிப்புணர்வுக்காக 'செபி'யின் புதிய செயலி அறிமுகம்
முதலீட்டாளர் விழிப்புணர்வுக்காக 'செபி'யின் புதிய செயலி அறிமுகம்
ADDED : ஜூன் 04, 2024 06:53 AM
புதுடில்லி : பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் அமைப்பான 'செபி', முதலீட்டாளர்களுக்கு தங்கள் நிதியை கையாள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், 'சார்தி 2.0' என்ற மொபைல் செயலியை நேற்று அறிமுகப்படுத்தியது. ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 'சார்தி' செயலியின் மேம்பட்ட வடிவமாக, இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நிதி தொடர்பான சிக்கலான விஷயங்களை எளிதாக விவரிக்கும் வகையில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக செபி தெரிவித்துள்ளது.
மேலும், பங்குச் சந்தை வர்த்தகம், கே.ஒய்.சி., செயல்முறை, மியூச்சுவல் பண்டு முதலீடுகள், முதலீட்டாளர் குறைகளை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள் போன்ற அடிப்படை விஷயங்களை முதலீட்டாளர்களுக்கு அறிமுகப்படுத்தவும்; விளக்கமளிக்கவும் இந்த செயலி உதவும்.
கூடுதலாக, தங்களது சொந்த நிதியை எப்படி கையாள்வது என்பது குறித்து முதலீட்டாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் வகையில் காணொலிகளும் இடம்பெற்றிருக்கின்றன.
இதுதொடர்பாக, செபியின் முழு நேர உறுப்பினர் அனந்த் நாராயண் தெரிவித்ததாவது:
இன்றைய காலகட்டத்தில், சமூக வலைதளங்கள் வாயிலாக தவறான தகவல்கள் எளிதாக பரப்பப்படும் சூழலில், நம்பத்ததகுந்த தகவல்களை வழங்கி, முதலீட்டாளர்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு, சார்தி 2.0 செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வேகமாக மாறி வரும் சந்தை சூழலை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி, தற்போது முதலீடு செய்யத் துவங்கியுள்ள இளம் முதலீட்டாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு தெரிவித்தார்.
சார்தி 2.0 செயலியை, கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.