கோவை பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா நிலம் எடுக்கும் பணி அரசு துவக்கம்
கோவை பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா நிலம் எடுக்கும் பணி அரசு துவக்கம்
கோவை பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா நிலம் எடுக்கும் பணி அரசு துவக்கம்
ADDED : ஜூன் 18, 2024 10:56 PM

சென்னை:கோவை மாவட்டம், சூளூர் அருகில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்க, நிலம் கையகப்படுத்தும் பணியை அரசு துவக்கியுள்ளது.
கோவை மாவட்டத்தில், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ளன. அவை, உற்பத்தி செய்யும் இன்ஜினியரிங் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள், பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தற்போது, மின் வாகனங்கள், பாதுகாப்பு மற்றும் வான்வெளி துறைகளுக்கு தேவைப்படும் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட, பல்வேறு நிறுவனங்களும் ஆர்வம் காட்டுகின்றன. எனவே, நிறுவனங்களுக்கு தடையின்றி மூலப்பொருட்கள் விரைந்து கிடைப்பதுடன், உற்பத்தி பொருட்களை விற்பனைக்கு அனுப்ப, கோவையில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்கப்பட உள்ளது.
இதை, தமிழக அரசின் 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம், என்.எச்.எல்.எம்.எல்., எனப்படும் தேசிய நெடுஞ்சாலை சரக்கு போக்குவரத்து மேலாண்மை நிறுவனம், ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம், துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகம் ஆகியவை இணைந்து அமைக்கின்றன.
இதற்காக, கோவையில் சூளுர் அருகில் உள்ள காரவள்ளி, மாதப்பூரில், 216 ஏக்கர் இடம் அடையாளம் காணப்பட்டு, அங்கு தற்போது, நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கியுள்ளது.
இப்பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காவில், சேமிப்பு மற்றும் குளிர்பதன கிடங்குகளை உள்ளடக்கிய ஏற்றுமதி, இறக்குமதிக்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்புகளும் இடம்பெறும். மேலும், இங்கிருந்து, சாலை மார்க்கமாக துாத்துக்குடி துறைமுகத்திற்கு விரைந்து பொருட்கள் அனுப்பப்பட்டு, ஏற்றுமதி, இறக்குமதி மேற்கொள்ளப்படும்.