அர்ஜென்டினா லித்தியம் இருப்பு இந்தியா - அமெரிக்கா ஆய்வு
அர்ஜென்டினா லித்தியம் இருப்பு இந்தியா - அமெரிக்கா ஆய்வு
அர்ஜென்டினா லித்தியம் இருப்பு இந்தியா - அமெரிக்கா ஆய்வு
ADDED : ஜூன் 18, 2024 11:00 PM

புதுடில்லி:அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து அர்ஜென்டினாவில் உள்ள லித்தியம் கனிம வளங்கள் குறித்த ஆய்வை, மத்திய பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா மேற்கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.
பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு என்ற இலக்கை அடைய தேவையான கனிம தாதுப் பொருட்களை பெறுவதற்காக, கடந்த ஆண்டு அமெரிக்கா தலைமையிலான எம்.எஸ்.பி., எனப்படும் 'மினரல் செக்யூரிட்டி பார்ட்னர்ஷிப்' இயக்கத்தில் உறுப்பினராக இந்தியா இணைந்தது.
இதையடுத்து, கார்பன் உமிழ்வை குறைக்க பெருமளவு உதவும் லித்தியம் கனிமங்களை செயலாக்கத்திற்கு பயன்படுத்த ஒத்துழைக்கவும், சீனாவை சார்ந்திருப்பதை தவிர்க்கவும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுடன் இணைந்து செயலாற்ற, இந்தியா பேச்சு நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, தென் அமெரிக்காவில் லித்தியம் கனிமம் மற்றும் ஆப்ரிகாவில் உள்ள முக்கிய கனிம வளங்கள் குறித்த ஆய்வை இணைந்து மேற்கொள்ள, முதலீடு செய்வதாக இந்தியாவும், அமெரிக்காவும் தெரிவித்துள்ளன.
இதன் தொடர்ச்சியாக, அர்ஜென்டினாவில் உள்ள காச்சி பகுதியில் உள்ள சுரங்கங்களை ஆய்வு செய்ய, இந்தியா முன் வந்துள்ளது.
இந்த ஆய்வில், ஒரு அமெரிக்க நிறுவனமும், வேறு இரு நாடுகளும் இணைந்து, செயல்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இதற்கான முதற்கட்ட ஆய்வு தற்போது நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வு குறித்த கேள்விகளுக்கு, கோல் இந்தியா நிறுவனமும், மத்திய சுரங்க அமைச்சகமும் பதில் அளிக்கவில்லை. மேலும், கனிம வளங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சம்பந்தமாக, இரு நாடுகளும் பேச்சு நடத்தி வருவதாக இரு தரப்பும் தெரிவித்துள்ளன.