உணவு பொருள் தயாரிப்பு தொழில் ரூ.86 கோடி மானியம் விடுவிப்பு
உணவு பொருள் தயாரிப்பு தொழில் ரூ.86 கோடி மானியம் விடுவிப்பு
உணவு பொருள் தயாரிப்பு தொழில் ரூ.86 கோடி மானியம் விடுவிப்பு
ADDED : ஜூன் 18, 2024 10:50 PM

சென்னை:தமிழக குறு, சிறு, நடுத்தர தொழில் துறையின் கீழ், உணவுப் பொருட்கள் தயாரிப்பு தொழில் துவங்க வழங்கப்படும் மானியத்திற்காக, மத்திய, மாநில அரசுகள் இணைந்து 86 கோடி ரூபாயை விடுவித்துள்ளன.
மத்திய அரசு, உணவு சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள நபர்களை ஊக்குவிக்க, உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துகிறது.
இத்திட்டத்தின் கீழ் மசாலா வகைகள், ஊறுகாய், மாவு வகைகள், ஊட்டச்சத்து மாவு தயாரிப்பு போன்ற தொழில்களை துவங்க மானியத்துடன், கடன் உதவி வழங்கப்படுகிறது.
தமிழகத்தில், 'பிரதமர் உணவு பதப்படுத்தும் திட்டத்தை' செயல்படுத்தும் முகமையாக, மாநில அரசின் உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம், தனிநபர், மகளிர் குழுக்கள் தொழில் துவங்க இயந்திர தளவாடங்களுக்கான மதிப்பில், 35 சதவீதம் அல்லது 10 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்குகிறது.
வேளாண் உற்பத்தி அமைப்புகள் போன்ற மற்ற பிரிவினருக்கு கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது. பயனாளிக்கு வழங்கப்படும் மொத்த மானிய தொகையில், மத்திய அரசு, 60 சதவீதம்; மாநில அரசு, 40 சதவீதம் வழங்குகின்றன.
மத்திய அரசு, தமிழகத்தில், 2021ல் இருந்து, நடப்பு நிதியாண்டு வரை, 12,128 தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க அனுமதி அளித்துள்ளது. இதுவரை, 12,000 நிறுவனங்களுக்கு, 231 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள், 177 கோடி ரூபாய் மானியத்தை, ஏற்கனவே விடுவித்திருந்தன.
நாட்டிலேயே, பிரதமர் உணவு பதப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் தான் முன்னணியில் உள்ளது. எனவே, மானியத்தை விரைந்து விடுவிக்குமாறு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை உயரதிகாரிகள் சமீபத்தில் டில்லி சென்று, மத்திய அரசு அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.
இதையடுத்து, இந்த நிதியாண்டிற்காக மத்திய அரசு, 50 கோடி ரூபாயும்; தமிழக அரசு, 36 கோடி ரூபாயும் தற்போது விடுவித்துள்ளன. இந்த நிதி, பயனாளிகளுக்கு ஒவ்வொரு பகுதியாக வழங்கப்படும்.