தானியங்களுக்கு ஈரப்பத மீட்டர் பயன்படுத்த அரசு முடிவு
தானியங்களுக்கு ஈரப்பத மீட்டர் பயன்படுத்த அரசு முடிவு
தானியங்களுக்கு ஈரப்பத மீட்டர் பயன்படுத்த அரசு முடிவு
ADDED : ஜூலை 21, 2024 02:53 AM

புதுடில்லி:வேளாண் விளைபொருட்கள் பரிவர்த்தனையில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் நடவடிக்கையாக, உணவு தானியங்கள், எண்ணெய் வித்துகளின் ஈரப்பத அளவை குறிப்பிடும், புதிய நடைமுறையை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.
ஈரப்பத மீட்டரை பயன்படுத்தி, விளைபொருட்களின் ஈரப்பதத்தை அளவிடும் புதிய வரைவு விதிகள் தொடர்பாக உற்பத்தியாளர்கள், நுகர்வோர், மாநில அளவியல் துறையைச் சேர்ந்த அதிகாரிகளுடன் மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது.
கடந்த மே மாதம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வரைவு விதிகள் தொடர்பாக, ஜூன் இறுதிக்குள் தங்களது கருத்துகளை அரசுக்கு அனுப்பலாம் என கூறியிருந்தது.
இதில், பெறப்பட்ட கருத்துகள் தொடர்பாக ஆலோசனை நடத்திய பின், மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுஉள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஈரப்பத மீட்டர்களை பயன்படுத்தி, உணவு தானியங்கள், எண்ணெய் வித்துகளின் ஈரப்பத அளவை அளவிடும் நடைமுறைக்கு, அனைத்து தரப்பினரும் முழு ஆதரவு வழங்கியுள்ளனர்.
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, இதனை அமல்படுத்துவது மிகவும் அவசியம் என தெரிவித்துள்ளனர்.
இதற்கு தேவையான தொழில்நுட்பம், பரிசோதனை முறைகள் மற்றும் அதிகபட்சமாக அனுமதிக்கப்படும் பிழைகள் உள்ளிட்டவை தொடர்பாக, விரைவில் அறிவிப்பு வெளி யிடப்படும். ஈரப்பத மீட்டர் வாயிலாக, தானியங்களின் ஈரப்பதத்தை அளவிடுவதால், தானியத்தின் தரத்துடன், அதனை சேமிக்கும் முறையை தீர்மானிக்கவும் உதவும்.
ஈரப்பத அளவை குறிப்பிடுவதன் வாயிலாக, விவசாயிகளும், வியாபாரிகளும் தானியங்களை பாதுகாப்பதுடன், வீணாவதை குறைக்க முடியும். மேலும், தானியங்களை சேமிக்கவும், பரிவர்த்தனை செய்வதற்கும் உகந்த சூழலை பராமரிக்க இயலும்.
இவ்வாறு கூறப்பட்டுஉள்ளது.