காபித்துாள் விலை அதிகரிப்பு அதிர்ச்சியில் காபி பிரியர்கள்
காபித்துாள் விலை அதிகரிப்பு அதிர்ச்சியில் காபி பிரியர்கள்
காபித்துாள் விலை அதிகரிப்பு அதிர்ச்சியில் காபி பிரியர்கள்
ADDED : ஜூன் 12, 2024 12:33 AM

சேலம்:காபி கொட்டை விளைச்சல் பாதிக்கப்பட்டதால், காபித்துாள் விலை கிலோவுக்கு, 100 முதல் 200 ரூபாய் வரை உயர்ந்து, காபி பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்தியாவில், கர்நாடகா, கேரளா, தமிழகத்தில் தான் காபி விளைச்சல் அதிக அளவில் உள்ளது. ஆனாலும், சர்வதேச அளவில் காபி விளைச்சலில், இந்தியாவின் பங்களிப்பு, 5 சதவீதம் அளவுக்குத்தான் உள்ளது. அதே சமயம் இந்தியாவில் காபி நுகர்வும் அதிகமாக உள்ளது.
இதன் காரணமாக, உலக அளவில் காபி மார்க்கெட்டில் நிர்ணயிக்கப்படும் விலையே, இங்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச மார்க்கெட்டில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு, இங்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால், தற்போது காபித்துாள் விலை கிலோவுக்கு, 100 முதல், 200 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பிரபல காபி துாள் தயாரிப்பு நிறுவனங்கள், ஏற்கனவே விலையை உயர்த்தி உள்ளன. சிறு நிறுவனங்கள் காபித்துாள் விலையை உயர்த்த துவங்கியுள்ளன. இதனால் காபி பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சேலம் லட்சுமி காபி உரிமையாளர் ராகவன் கூறியதாவது:
காபியில் இரு வகை உள்ளது. வாசனை, ருசிக்கு அராபிகாவும், திடத்துக்கு ரொபாஸ்டாவும் மிகச்சிறந்ததாக உள்ளன.
இதனால், இந்தியாவில் ஒவ்வொரு காபித்துாள் நிறுவனமும் தங்கள் ருசிக்கேற்ப, அராபிகாவுடன், 30 முதல் 50 சதவீதம் வரை ரொபாஸ்டா காபியை கலந்து பயன்படுத்துகின்றனர்.
உலக அளவில் ரொபாஸ்டா காபி விளைச்சலில், வியட்நாம் பெரும்பங்கு வகிக்கிறது. நடப்பாண்டு அங்கு விளைச்சல் பாதிக்கப்பட்டதால், விலை அதிகரித்துள்ளது.
இரு ஆண்டுகளுக்கு முன் கிலோ, 175 ரூபாய்க்கு விற்கப்பட்ட ரொபாஸ்டோ காபி, தற்போது, 420 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.
அராபிகாவும், 420 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ காபி கொட்டையை வறுக்கும் போது, 20 சதவீதம் எடை குறைவு ஏற்படும் என்பதால், அதன் அசல் விலையே, 500 ரூபாயை தாண்டிவிடும்.
விலை குறைவாக இருக்கும் என்பதால், சிறு வியாபாரிகள் ரொபாஸ்டாவை அதிகம் பயன்படுத்துவர். ஆனால், தற்போது அதன் விலையேற்றத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
ரொபாஸ்டா விளைச்சல், அடுத்த ஆண்டு வரை அதிகரிக்க வாய்ப்பில்லை என்பதால், விலை குறையவும் வாய்ப்பில்லை. இதனால், காபி உற்பத்தியாளர்கள், 100 முதல் 200 ரூபாய் வரை விலையை அதிகரித்துள்ளனர்
பியூர் காபித்துாள் கிலோ, 700 முதல் 850 ரூபாய் வரையும், 20 சதவீதம் சிக்கரி கலந்த காபித்துாள் கிலோ, 550 முதல் 700 ரூபாய் வரையும் விற்பனையாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
காபி விளைச்சல் பாதிக்கப்பட்டதால், காபித்துாள் விலை கிலோவுக்கு, 100 முதல் 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.