நீலகிரியில் பீட்ரூட் உற்பத்தி குறைவு
நீலகிரியில் பீட்ரூட் உற்பத்தி குறைவு
நீலகிரியில் பீட்ரூட் உற்பத்தி குறைவு
ADDED : ஜூன் 12, 2024 12:30 AM

கோத்தகிரி:நீலகிரி மாவட்டத்தில், மலை காய்கறி விவசாயம் அதிக நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படுகிறது. கோத்தகிரி பகுதியில், நுாற்றுக்கணக்கான ஏக்கரில், மலை காய்கறிகள் பயிரிடப்படுகின்றன.
நடப்பாண்டு, மழை பெய்த போதும், பிற மலை காய்கறிகளை ஒப்பிடும் போது, பீட்ரூட் குறைந்த பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது.
இதனால், ஊட்டி மற்றும் கோத்தகிரி உள்ளூர் மார்க்கெட்டுகளில் பீட்ரூட் வரத்து குறைந்துள்ளது. இதனால் கிராக்கி ஏற்பட்டு, 1 கிலோ பீட்ரூட், 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது.
இனிவரும் நாட்களில், தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில், தண்ணீர் தேங்கும் நிலங்களில், அறுவடைக்கு தயாரான பீட்ரூட் அழிய வாய்ப்புள்ளது. இதனால், மழை தீவிரமடைவதற்கு முன்பாக, விவசாயிகள் ஆர்வத்துடன் பீட்ரூட் அறுவடையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலாமேரி கூறுகையில், “நடப்பாண்டு கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. மற்ற காய்கறிகளை விட, பீட்ரூட் விளைச்சலுக்கு முதலீடு குறைவு.
“நடப்பாண்டு மழை பெய்தபோது, வரத்து குறைந்துள்ள நிலையில், நல்ல விலை கிடைப்பதால், சிறு விவசாயிகள் லாபமடைகின்றனர்,” என்றார்.