தமிழகத்தின் 50 சதவீதம் 'ஸ்டார்ட் அப்'களின் தலைமை அதிகாரிகளாக பெண்கள்
தமிழகத்தின் 50 சதவீதம் 'ஸ்டார்ட் அப்'களின் தலைமை அதிகாரிகளாக பெண்கள்
தமிழகத்தின் 50 சதவீதம் 'ஸ்டார்ட் அப்'களின் தலைமை அதிகாரிகளாக பெண்கள்
ADDED : ஜூன் 12, 2024 12:27 AM

சென்னை:தமிழகத்தில் உள்ள, 8,669 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களில், 4,259 நிறுவனங்கள் பெண்களின் தலைமையின் கீழ் செயல்படுகின்றன.
தமிழக அரசின், 'ஸ்டார்ட் அப் டி.என்' நிறுவனம், புத்தொழில் நிறுவனங்கள் துவங்க நிதியுதவி, முதலீடு திரட்டி தருதல் உட்பட பல உதவிகளை செய்கிறது. இதனால், தகவல் தொழில்நுட்பம், வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டுதல், உணவு என, பல துறைகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவக்கப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில், 8,669 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறையில் பதிவு செய்துள்ளன.
அதில், 4,259 நிறுவனங்கள், பெண்களின் தலைமையின் கீழ் செயல்படுகின்றன.
சென்னை மட்டுமின்றி கோவை, ஈரோடு என, பல நகரங்களிலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவக்கப்படுகின்றன.
ஸ்டார்ட் அப் டி.என்., யு டியூப் சானல் வாயிலாக, புத்தொழில் துவங்குவது, அரசு திட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பாக, விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் தெரிவித்துள்ளார்.