
மர்ம முடிச்சுகள் நிறைந்த, சூத்திரதாரி திரைப்படம் நேற்று முன் தினம் திரைக்கு வந்தது. திரையரங்குகளின் இருக்கைகள் நிரம்புவதால், படக்குழுவினரின் மனமும் நிறைந்துள்ளது. சிலர் மர்ம கும்பலால் கடத்தப்படுகின்றனர்; மீட்கப்பட்டு வீடு திரும்பியவர்கள், மர்ம்மான முறையில் இறக்கின்றனர். இவர்களை கடத்தியது யார், இவர்களின் இறப்புக்கு காரணம் என்ன, பின்னணியில் இருக்கும் மாஸ்டர் மைண்ட் யார் என்பதை கண்டுபிடிப்பதே கதையின் சாராம்சமாகும். எதிர்பாராத திருப்பங்கள் உள்ளன. மக்களை இருக்கை நுனிக்கு கொண்டு வரும் கதையாகும். சிறிதும் அலுப்பு தட்டாமல் கதையை கொண்டு சென்றதில், இயக்குனர் கிரண்குமாரின் கை வண்ணம் தெரிகிறது.
நடிகை ராகினி திரிவேதிக்கு, மவுசு அதிகரித்துள்ளது. கன்னடம் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாள மொழிகளிலும் நடிக்கிறார். தற்போது ஏழு படங்களை கையில் வைத்துள்ளார். சிந்துாரி, சர்க்காரி நியாய பெலே அங்கடி, ஜாவா உட்பட, பல படங்களில் இவரே நாயகி. மலையாளத்தில் மோகன்லாலுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இது மட்டுமின்றி தமிழ், ஹிந்தியிலும் தலா ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். இவைகள் திரைக்கு வர, தயார் நிலையில் உள்ளன. இதற்கிடையே சமஸ்கிருத மொழி படம் ஒன்றிலும் முக்தியை நாடும் சன்னியாசினி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தனக்கு நல்ல காலம் பிறந்துள்ளது என, மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.
தென்னக திரையுலகின் பிரபல நடிகர் சுமன் தல்வார். தமிழ், தெலுங்கு உட்பட 11 மொழிகளில் நடித்துள்ளார். பல வெற்றி படங்களை கொடுத்தவர். ஹீரோவாக நடித்த இவர், வில்லன் கதாபாத்திரங்களையும் விட்டு வைத்தது இல்லை. மங்களூரை பூர்வீகமாக கொண்டவர். கன்னடத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின், இவர் கன்னடத்துக்கு வந்துள்ளார். 'ஸ்னேகத கடலல்லி' தொடரில், நாயகன் சந்திர கவுடாவின் தந்தையாக, மாதவ் அர்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கன்னட தொலைக்காட்சி ஒன்றில், நாளை முதல் இரவு 8:30 மணிக்கு ஒளிப்பரப்பாக உள்ளது.
கன்னட நடிகை ஸ்ரீலீலா, பாலிவுட் மற்றும் தெலுங்கில் பிசியாக நடிக்கிறார். தெலுங்கில் இவர் நாயகியாக நடித்த சில படங்கள் ஓடவில்லை. ஆனால் வாய்ப்புக்கு பஞ்சமில்லை. நாயகியாக மட்டுமின்றி, ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போடுகிறார். புஷ்பா 2 படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டார். இப்பாடல் சூப்பர் ஹிட்டானது. இதனால் தங்கள் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வைக்க, இயக்குனர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது ராம்சரண் நடிக்கும் புதிய படத்தில், ஆட்டம் போட பேச்சு நடக்கிறதாம். இதற்காக பெரிய தொகையை ஊதியமாக கொடுக்கவும், தயாரிப்பாளர் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவை சேர்ந்த சரண்ராஜ், பிரகாஷ் ராய், அர்ஜுன் சர்ஜா, ராஷ்மிகா மந்தண்ணா உட்பட, பலர், கன்னடத்தை விட, தமிழ், தெலுங்கில் அதிகம் அடையாளம் காணப்படுகின்றனர். போனால் போகிறது என, எப்போதாவது தாய் மொழியில் நடிப்பதுண்டு. தற்போது இளம் நடிகர் தர்ம கீர்த்தி ராஜ், தெலுங்குக்கு செல்ல தயாராகிறார். ரஞ்சித்ராம் என்ற பெயரில் அறிமுகமாகிறார். சமுதாயத்தில் நடந்துள்ள தற்போது நடந்து கொண்டிருக்கும் சில உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. அறிமுகமாகும் முதல் படத்திலேயே அவருக்கு, வெயிட்டான கதை கிடைத்துள்ளது.
அரசியலில் நடக்கும் ஊழல்கள் பற்றிய கதை உள்ள படங்கள் வெளி வந்தன. தற்போது போலீஸ் துறையின் ஊழல்கள் குறித்த கதை உள்ள, சேஷா 2016 என்ற படம் திரைக்கு வரவுள்ளது. அரசு பள்ளி, மருத்துவமனை சரியில்லை என்றால், தனியார் பள்ளி, மருத்துவமனைக்கு செல்லலாம். ஆனால் போலீஸ் துறைக்கு மாற்றே கிடையாது. இத்தகைய துறையில் நடக்கும் ஊழலால், மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகின்றனர், இதை எப்படி சமாளிக்கின்றனர் என்பதை, திரையில் பார்க்க வேண்டும். படம் சென்சாருக்கு சென்று வந்துள்ளது. வரும் ஜூனில் திரைக்கு வரவுள்ளது. கன்னடம், மலையாளம் மொழிகளில் திரையிடப்படும். இதில் அர்ச்சனா கொட்டிகே, நாயகியாக நடித்துள்ளார்.