Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சினிகடலை

சினிகடலை

சினிகடலை

சினிகடலை

ADDED : மார் 22, 2025 08:37 PM


Google News
Latest Tamil News
* அதிர்ஷ்ட காற்று

பொதுவாக கன்னடத்தில் அறிமுகமாகும் நடிகையர், வேறு மொழிகளில் வாய்ப்பு பெறுகின்றனர். அடுத்தடுத்த படங்களில் நடித்து அங்கேயே செட்டில் ஆகின்றனர். 2021ல் நடிகர் ரவிச்சந்திரன் மகன் மனோரஞ்சன் நாயகனாக நடித்த, முகில்பேட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை கயாது லோஹர், தமிழ் திரையுலகுக்கு சென்றார். சமீபத்தில் திரைக்கு வந்த டிராகன் வெற்றி பெற்றது. படம் வெற்றி பெற்றதால், நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக தேர்வு செய்யப்பட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அத்வாவுக்கு ஜோடியாக படம் ஒன்றில் நாயகியாக நடிக்கறார். அது மட்டுல்ல, தெலுங்கில் விஸ்வக் சேன் நடிக்கும் பங்கி திரைப்படத்திலும், நடிகை கயாதுவை நாயகியாக தேர்வு செய்துள்ளனர்.

* சென்சிடிவ்

நடிகை ஹர்ஷிகா பூனச்சா, இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இதை அவரது கணவர் புவன் பூனச்சா தயாரிக்கிறார். படத்துக்கு சவுஜன்யா என பெயர் சூட்டியுள்ளனர். இந்த பெயரை கேட்டால், தர்மஸ்தலா அருகில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி, கொல்லப்பட்ட சவுஜன்யா நினைவுக்கு வருவார். ஆனால் அவருக்கும், படத்துக்கும் சம்பந்தம் இல்லை. நாடு முழுதும் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள், அடக்கு முறை, கொலை போன்ற குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் கதை கொண்டது. முதல் படத்திலேயே மிகவும் சென்சிடிவான விஷயத்தை ஹர்ஷிகா கையில் எடுத்துள்ளார். கிஷோர் நாயகனாக நடிக்கிறார்.

* எட்டு ஏக்கர் செட்

கணேஷ் நடிக்கும் பினாகா திரைப்படத்தில், பிரபல நடிகர் ஜெகபதி பாபு, சுனில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படக்குழுவினர் இவர்களுடன் பேசி, கதையை கூறினர். இருவரும் நடிக்க சம்மதித்துள்ளனர். 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பழங்குடியின அரசர் ஒருவரின் கதையாம். கணேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். பெங்களூரு புறநகர், நெலமங்களா அருகில் எட்டு ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான செட் போட்டு படப்பிடிப்பு நடக்கிறது. முங்காரு மலே படத்துக்கு பின், பினாகா அவரது தொழில் வாழ்க்கையில் பெரிய திருப்பு முனையாக இருக்கும் என, எதிர்பார்க்கிறார்.

* கிளைமாக்ஸ் பாடல்

நடிகர் விஜய்ராகவேந்திரா நாயகனாக நடிக்கும், ருத்ராபிஷேகா திரைப்படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சிக்கபல்லாபூரின் ரங்கநாத சுவாமி கோவிலில், கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்குகின்றனர். தேவனஹள்ளியின், சிக்கதமங்களா கிராமத்தில் செட் போட்டு, கிளைமாக்ஸ் பாடல் காட்சி படமாக்கப்படுகிறது. இதில் நுாற்றுக்கணக்கான கிராமிய கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். வீரபத்ர சுவாமியின் வரலாற்றை படத்தில் காட்டுகின்றனர். இந்த படத்தை வசந்தகுமார் இயக்குகிறார்.

* பழிக்கு பழி

கன்னடத்தில் பழிக்கு பழி வாங்கும் கதை கொண்ட, பல படங்கள் திரைக்கு வந்தன; வசூலையும் அள்ளி தந்தன. அந்த வரிசையில் முகில மல்லிகே திரைப்படமும் சேர்ந்துள்ளது. தன் தம்பியின் இறப்புக்கு காரணமான நாயகியை பழிவாங்க, வில்லன் துடிக்கிறார். இவரிடம் இருந்து நாயகியை காப்பாற்ற, நாயகன் எப்படி போராடுகிறார் என்பதே, கதையின் சாராம்சமாகும். சனத், சஹனா கவுடா நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்துள்ளது. ஹொஸ்கோட் சுற்றுப்பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் மூத்த நடிகை பவ்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

* டைட்டில் பரபரப்பு

சில திரைப்படங்கள், டைட்டில் மூலமாகவே, எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். தற்போது கங்கிராஜுலேஷன் பிரதர் என்ற படமும், சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்துகிறது. இதில் பெரும்பாலும் புதுமுகங்களே நடித்துள்ளனர். நாயகனின் தந்தை கதாபாத்திரத்தில், மூத்த நடிகர் சசிகுமார் நடித்துள்ளார். ரக்ஷித் நாக் நாயகனாகவும், ஜோடியாக அனுஷா, சஞ்சனா தாஸ் நடித்துள்ளனர். அடுத்த மாதம் துபாயில் முதல் பாடலை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். பெங்களூரு, கார்வார் உட்பட பல இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us