Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/விசேஷம் இது வித்தியாசம்: துஷாலா!

விசேஷம் இது வித்தியாசம்: துஷாலா!

விசேஷம் இது வித்தியாசம்: துஷாலா!

விசேஷம் இது வித்தியாசம்: துஷாலா!

PUBLISHED ON : ஜூன் 01, 2025


Google News
Latest Tamil News
மகாபாரதத்தில், துஷாலா என்ற பெண் பாத்திரம் இருக்கிறது தெரியுமா? இவள் அநேகமாக அதிகம் அறியப்படாதவள். தமிழில் துச்சலை என, இவளை சொல்வர். கவுரவ அரசரான திருதராஷ்டிரன் - காந்தாரி தம்பதியின் ஒரே செல்ல மகள். நுாறு ஆண் பிள்ளைகளுக்கு ஒரே சகோதரி.

என்ன தான் பத்து, பதினைந்து ஆண் குழந்தைகளைப் பெற்றாலும், ஒரே ஒரு மகள் இருக்க கூடாதா என்ற ஏக்கம், தாய்மார்களிடம் உண்டு. காந்தாரிக்கும் அப்படி ஒரு ஆசை ஏற்பட்டது.

தன் கொழுந்தன் பாண்டுவின் மனைவி குந்திதேவி, ஐந்து ஆண் குழந்தைகளை தனக்கு முன்னதாக பெற்றது கண்டு, காந்தாரிக்கு பொறாமை ஏற்பட்டது. அப்போது அவளும் கருவுற்றிருந்தாள்.

கோபத்தில் வயிற்றில் அடிக்க, கர்ப்பம் பல துண்டுகளாக கலைந்தது. அவற்றை நெய் நிரம்பிய பாத்திரங்களில் போட்டு வைத்தார், வேதங்களின் நாயகரான, வியாசர். 100 துண்டுளை இவ்வாறு போட்டார். 'உனக்கு 100 மகன்கள் பிறப்பர்...' என்றார். ஒரே ஒரு துண்டு மட்டும் மிஞ்சியது,

'வியாச பகவானே! எத்தனை ஆண் பிள்ளை இருந்தாலும், எனக்கொரு பெண் பிள்ளையும் வேண்டும். ஆண் பிள்ளைகள் பெறும் குழந்தைகளால் நான் என்னென்ன பலன்களை அனுபவிப்பேனோ, அதே போல் பெண் வழி குழந்தைகளாலும் நானும், என் கணவரும் பலன் பெற வேண்டும். நீங்கள் அருள் செய்ய வேண்டும்...' என்றாள், காந்தாரி.

அவ்வாறே செய்தார், வியாசர். அந்த துண்டு, ஒரு பெண் மகளாக பிறந்தது. அவளுக்கு, துஷாலா என்று பெயரிட்டனர். இந்த சொல்லுக்கு, திருப்திபடுத்துபவள், மனநிறைவு தருபவள் என, பொருள்.

எத்தனை ஆண் பிள்ளைகள் இருந்தாலும், தனக்கு மனநிறைவு தந்தவள் என்ற பொருளில், இந்த பெயரை மகளுக்கு சூட்டினாள், காந்தாரி.

இவளை சிந்து தேசத்தின் அரசன் ஜெயத்ரதனுக்கு திருமணம் செய்து வைத்தனர். அவளுக்கு சுரதா என்ற மகன் பிறந்தான். சுரதாவுக்கும் ஒரு மகன் உண்டு. துஷாலாவின் பேரனான இவனது பெயர் பற்றிய குறிப்பு இல்லை.

இந்த தங்கையின் மீது உடன் பிறந்த சகோதரர்கள் வைத்த பாசத்தை விட, பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனனுக்கு பாசம் அதிகம்.

பாரதப் போரில், அர்ஜுனனின் மகன் அபிமன்யு கொல்லப்பட காரணமாக இருந்தான், ஜெயத்ரதன். அவனைப் பழி வாங்கினான், அர்ஜுனன். தந்தை இறந்த அதிர்ச்சியில், மகன் சுரதனும் இறந்து விட்டான்.

உடனே துஷாலா, அர்ஜுனனிடம் வந்து, 'அண்ணா! நீ கருணை கூர்ந்து எங்கள் குலம் தழைக்க என் பேரனையாவது விட்டு விடு. என் மகனும் இறந்து விட்டான். இவனுக்காகத் தான் நான் வாழ்கிறேன்...' என்றாள்.

அர்ஜுனனும், தன் தங்கையை பாசத்துடன் அணைத்து, அவ்வாறே செய்வதாக வாக்களித்தான்.

தி. செல்லப்பா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us