Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

PUBLISHED ON : ஜூன் 01, 2025


Google News
Latest Tamil News
மகன் படிப்புக்கு கை கொடுத்த மனைவி!

என், பால்ய நண்பர் ஒருவரை, சமீபத்தில் சந்தித்தேன். தன் மகனை, இந்த ஆண்டு பொறியியல் கல்லுாரியில் சேர்த்திருப்பதாக, பெருமையாக கூறினார்.

தனியார் நிறுவனம் ஒன்றில், குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் அவர், எப்படி மகனை என்ஜினியரிங் படிப்பில் சேர்த்தார் என, வியந்தேன்.

என் எண்ணத்தை புரிந்து கொண்டவர், 'பையனை ஏதாவது ஒரு, 'டிகிரி' படிப்பில் சேர்க்கத்தான் நினைத்தேன். பிளஸ் 2வில், நல்ல மதிப்பெண் வாங்கியிருந்தான். பி.இ., படிக்கவும் விரும்பினான்.

'முதலில் தயங்கி, பின், துணிந்து, நல்ல கல்லுாரியில் பி.இ., படிப்பில் சேர்த்து விட்டேன். பணப் பிரச்னை வந்தபோது, மனைவி தான் உதவினாள்...' என்றார், நண்பர்.

'பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த உன் மனைவியா?' எனக் கேட்டேன்.

'என் மனைவிக்கு, தையல் தெரியும். திருமணமான புதிதில், என் சம்பளத்தில் மட்டுமே குடும்பம் நடத்த முடியாது என, தெரிந்து கொண்டாள். குழந்தை பிறந்தால், பணத்தேவை அதிகரிக்குமே என்றெண்ணி, வீட்டிலிருந்தபடியே துணி தைக்க ஆசைப்பட்டாள்.

'அவளது நச்சரிப்பு தாங்காமல், கடன் வாங்கி, தையல் மிஷின் ஒன்றை வாங்கிக் கொடுத்தேன். உறவினர்களின் குதர்க்கப் பேச்சுக்களையும் பொருட்படுத்தாமல், வேலையைத் தொடர்ந்தாள்.

'வீட்டு வேலைகள் முடித்து, தையல் மிஷினே கதியாக இருந்தாள். அதற்கேற்ப, நிறைய பேர் துணி தைக்க கொடுத்தனர். ஜாக்கெட்டுகளில் எம்ப்ராய்டரி மற்றும் பட்டு நுாலில் தைக்கப்படும் ஆரி ஒர்க் என, பல வேலைகள் கற்று, சிறுக சிறுக சேமிக்க துவங்கினாள்.

'மகன் படிப்புக்கு இப்போது, 2 லட்ச ரூபாயை, என்னிடம் கொடுத்த போது தான், அவள் உழைப்பு மற்றும் சேமிப்பின் உன்னதம் தெரிந்தது...' என, பூரிப்பாக நண்பர் கூறியதும், ஆச்சரியமடைந்தேன்.

உழைப்பு என்றுமே கைவிடாது என்பதை உணர்ந்து, நண்பரின் மகனுக்கு சிறு அன்பளிப்பை கொடுத்து விட்டு வந்தேன்.

— பி.சந்திரசேகர், மதுரை.

குழந்தையும், தெய்வமும்!

என் உறவுக்கார பெண் ஒருவருக்கு சமீபத்தில், குழந்தை பிறந்திருந்தது. குழந்தையைப் பார்க்க மருத்துவமனைக்கு சென்றிருந்த போது, பச்சிளம் குழந்தையை மடியில் வைத்து, ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது, ஒரு கூட்டம்.

குழந்தை அமாவாசையன்று பிறந்திருப்பதால், திருடனாவானென்று ஆருடம் கூறினர், சிலர். அத்துடன், குழந்தையின் தலையில் இரட்டைச் சுழி இருப்பதால், குடும்பத்துக்கு அடங்க மாட்டான்; குடும்பத்துக்கு கெடுதல் என்றும், எதையெதையோ பிதற்றிக் கொண்டிருந்தனர்.

இது போன்ற பேச்சுக்கள், குழந்தையின் தாயை எந்தளவு பாதிக்கும் என்பதை நினைத்துப் பார்க்காமல், ஆளாளுக்கு எதிர்மறையாகவே பேசினர்.

தாங்க முடியாமல், நான் அங்கிருந்த நர்சிடம், 'இவ்வளவு பேர் ஆளாளுக்கு குழந்தையை துாக்கிக் கொண்டிருந்தால், 'இன்பெக்ஷன்' ஆகிவிடும் என்று சொல்லுங்கள்...' எனக்கூறி, அவர்களை அங்கிருந்து வெளியேற்ற செய்தேன்.

குழந்தையின் தாயிடமும், 'அவர்கள் பேசியதை மனதில் வைத்துக் கொள்ளாமல், சந்தோஷமாக குழந்தையை பார்த்துக் கொள்...' என, கூறிவிட்டு வந்தேன்.

குழந்தையும், தெய்வமும் ஒன்று அல்லவா! இதுபோன்ற நபர்கள் இனியாவது, தங்கள் பேச்சை மாற்றிக் கொள்ள வேண்டும்.

— சந்திரமோகன், துாத்துக்குடி.

இப்படியும் செய்யலாமே!

நெருங்கிய நண்பர் ஒருவர், தன் பிறந்தநாளை, எங்கள் பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் கொண்டாட முடிவு செய்து, என்னை அழைத்தார். அங்கு சென்று, 'கேக்' வெட்டி, உணவு பகிர்ந்து, முதியவர்களுடன் உரையாடினோம்.

அப்போது, 'எங்கள் வாழ்க்கை கதைகளை பதிவு செய்ய ஏதாவது வழி இருந்தால் நன்றாக இருக்கும். எங்கள் அனுபவங்கள், இளைய தலைமுறைக்கு பயன்படலாம்...' என்றார், ஒரு முதியவர்.

'நாங்கள் கதைகள் சொல்வோம். அதையும் பதிவு செய்ய வேண்டும்...' என்றார், மற்றொரு பாட்டி.

அவர்களின் விருப்பத்தை ஊக்குவிக்க, அன்றே ஒரு சிறிய டிஜிட்டல் வாய்ஸ் ரெகார்டரும், நோட்டுப் புத்தகங்களும் வாங்கிக் கொடுத்தேன். மேலும், கல்லுாரியில் படிக்கும் உள்ளூர் மாணவர் குழுவைத் தொடர்பு கொண்டு, வார இறுதியில், முதியோர் இல்ல பெரியவர்களின் கதைகளை பதிவு செய்து, எழுத்து வடிவில் மாற்ற உதவி கேட்டேன். மாணவர்கள் ஆர்வமாக ஒப்புக் கொண்டனர்.

இந்த முயற்சி, முதியவர்களின் வாழ்க்கை அனுபவங்களை பதிவு செய்வது மட்டுமல்லாமல், அவர்களுக்கு மன நிறைவையும், இளைய தலைமுறையுடன் தொடர்பையும் ஏற்படுத்தியது. மாணவர்களுக்கும், முதியவர்களிடம் இருந்து, பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது.

— வி. முருகன், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us