Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி: அன்னை இல்லத்தில் ஓர் அருமையான சந்திப்பு (2)

அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி: அன்னை இல்லத்தில் ஓர் அருமையான சந்திப்பு (2)

அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி: அன்னை இல்லத்தில் ஓர் அருமையான சந்திப்பு (2)

அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி: அன்னை இல்லத்தில் ஓர் அருமையான சந்திப்பு (2)

PUBLISHED ON : ஜூன் 01, 2025


Google News
Latest Tamil News
குமுதம் இதழின் நிறுவனர் மற்றும் முன்னாள் ஆசிரியருமான எஸ். ஏ. பி. அண்ணாமலையின் மகன் டாக்டர் எஸ். ஏ. பி. ஜவஹர் பழனியப்பனின் அனுபவ தொடர்.

என்னுடைய அமெரிக்க பேஷன்ட் ஜான், சிவாஜி குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான துரையை, சிங்கப்பூர் மருத்துவமனையில் சந்தித்தார்.

சிவாஜி எப்போது சிங்கப்பூர் சென்றாலும், துரை குடும்பத்தினருடன் தான் தங்குவார். மகன்கள் ராம்குமார், பிரபுவின் அளவிற்கு சிவாஜியின் உடல்நலனில் மிகவும் அக்கறை கொண்டவர். சிங்கப்பூரில், 'நேஷனல் கிட்னி பவுண்டேஷனின்' தலைவர், துரை.

'சிவாஜி, நமக்கு ஓர் அரிய பொக்கிஷம்! அவரை கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பது, நம்முடைய கடமை...' என, அடிக்கடி சொல்வார், துரை.

என்னுடைய பேஷன்ட் மூலமாக, தொலைபேசி எண்ணை வாங்கி, உடனடியாக அமெரிக்காவில் இருந்த என்னுடன் தொடர்பு கொண்டார், துரை.

தன்னை அறிமுகப்படுத்தி, அடுத்து தனக்கும், சிவாஜி குடும்பத்துக்கும் இடையிலான நெருக்கமான உறவு பற்றி தெரிவித்தார்.

தொடர்ந்து, சிவாஜியின் உடல் நலம் பற்றி சுருக்கமாக சொல்லி, 'பிரான்ஸ் நாட்டு டாக்டர், சிவாஜிக்கு உடனடியாக இதயத்தில் ஆபரேஷன் செய்யணும் என்கிறார். கண்டிப்பாக ஆபரேஷன் அவசியமா? ஆபரேஷன் செய்யாவிட்டால் சிக்கல் ஏதாவது வருமா என, பதட்டமாக இருக்கிறது.

'ஆபரேஷன் செய்வதா, வேண்டாமா என்ற கவலையிலும், குழப்பத்திலும் இருக்கின்றனர், சிவாஜி குடும்பத்தினர். எனவே, இதய சிகிச்சை நிபுணர் என்ற முறையில், சிவாஜியை நீங்கள் பரிசோதிச்சு பார்க்கணும்; அவரது உடல் நலம் குறித்து, உங்க கருத்தைத் தெரிவிக்கணும். அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கணும் என்றெல்லாம், தாங்கள் முடிவு செய்யணும்.

'அவரை நாங்கள், அமெரிக்காவுக்கு அழைத்து வருவதா அல்லது அடுத்த சில மாதங்களில் நீங்கள் இந்தியாவுக்கு சென்னைக்கு வர ஏதாவது வாய்ப்பு இருக்கா?' என்றும் கேட்டார்.

'அடுத்த மாதம் நானே, இந்தியா வரப் போகிறேன். அப்போது, சிவாஜியை கண்டிப்பாக சந்தித்து, பரிசோதிக்கிறேன்...' என்றேன், நான்.

என் இந்தியப் பயணத் தேதி முடிவானதும், துரைக்கு தகவல் தெரிவித்தேன்.

அடுத்து, சென்னை வந்தவுடன், சிவாஜி வீட்டுக்கும் தகவல் தெரிவித்தேன்.

குறிப்பிட்ட நாளன்று, தி.நகர் தெற்கு போக் ரோடில், 'அன்னை இல்லத்திற்கு' சென்றேன்.

மாடியில் அவருடைய படுக்கை அறைக்கு அழைத்து சென்றனர்.

மலர்ந்த முகத்துடன் என்னை வரவேற்றார், சிவாஜி.

அவருக்கு வணக்கம் சொல்லி, அவரோடு கை குலுக்கினேன்.

சிவாஜியுடனான அந்த கைகுலுக்கலிலேயே, எனக்கு ஒரு விஷயம் மிக நன்றாகப் புரிந்து விட்டது. அதாவது, அவரது உடல் மிகவும் பலவீனமாகத்தான் இருக்கிறது. கம்பீரமான சிங்கம் போன்று இருந்த சிவாஜி, மெலிந்து காணப்பட்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், கண்களில் இருந்த கூர்மை மட்டும், கொஞ்சம் கூட குறையவில்லை.

எடுத்தவுடனே, அவரது உடல் நிலையைப் பற்றி பேசாமல், நாங்கள் இரண்டு பேரும் முதலில் பொதுவான விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.

அப்போது, 'சிவாஜி என்ற கம்பீரமான ஆளுமைக்கு ஏற்றபடி, இந்த வீடு பிரமாண்டமாகவும், பொருத்தமாகவும் இருக்கிறது...' என, பாராட்டினேன்.

'டாக்டர், இந்த வீட்டை வாங்கிய காலத்தில், நான் சினிமாவில் மிகவும் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தேன். ஒரு நாளைக்கு, மூன்று, 'ஷிப்ட்' படப்பிடிப்புகள் நடக்கும். நான் வீட்டுக்கு வரவே இரவு, 10:00 மணிக்கு மேல் ஆகிவிடும்.

'அதனால், எனக்கு குடும்ப விஷயங்களில் அக்கறைக் காட்ட நேரமில்லை. எல்லாமே என் தம்பி சண்முகம் தான் பார்த்துக் கொள்வான். அவன் தேர்ந்தெடுத்திருந்த வீட்டை பிரியமுடன் நான் வாங்கினேன்...' என, மகிழ்ச்சியுடனும், பெருமிதத்துடனும் சொன்னார், சிவாஜி.

மிஸ்டர் போக் என்ற, ஒரு பிரிட்டிஷ்காரருக்கு சொந்தமானது தான், அந்த பங்களா. அவருடைய பெயரில் தான், அந்த ரோடுக்கே, 'போக் ரோடு' என, பெயர் வந்தது.

சிவாஜிக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்பட்டபோது, அவரை கவுரவிக்கும் வகையில், அவர் வசித்த சாலையின் பெயரை, 'செவாலியே சிவாஜி கணேசன் சாலை' என, பெயர் மாற்றம் செய்தனர்.

கே.சி.ரெட்டி என்ற முன்னாள் கவர்னர், பிரிட்டிஷ்காரர் போகிற்கு பின், இந்த பங்களாவில் வசித்தார்.

மொத்தம், 1.5 ஏக்கர் நிலத்தில், அரண்மனை போன்ற பங்களா.

இந்த மிகப் பெரிய பங்களாவை வாங்கி புதுப்பித்து, தன் தாயின் மீது கொண்ட பற்றின் காரணமாக, 'அன்னை இல்லம்' என, பெயர் சூட்டினார், சிவாஜி.

சிவாஜி குடும்பத்தினர், பெரிய கூட்டுக் குடும்பமாக இங்கே வசித்தனர்.

பொதுவான விஷயங்களைப் பேசிய பின், அடுத்து சிவாஜியின் உடல் நலம் பற்றி விசாரித்தேன்.

'என்னை ஒரு பிரெஞ்சுகார டாக்டர், பாரிஸ் நகரில், 'டெஸ்ட்' பண்ணினார். இதய செயல்பாடு ரொம்ப மோசமாக இருக்கு. உடனே இதயத்துல ஆபரேஷன் பண்ணணும் என்றார்.

'அவருக்கு ஆபரேஷன் பண்ணறதுல, 'லேட்டஸ்ட் டெக்னிக்' எல்லாம் தெரியுமாம்! தோள் பக்கத்தில் இருக்கிற தசைப் பகுதியை எடுத்து, இதயத்தை சுற்றி தைத்து, 'பேஸ்மேக்கர்' வைத்து இதயத்தின் செயல்பாட்டை பலப்படுத்தலாம் எனக் கூறினார்...' என்றார்.

இப்படி சிவாஜி சொன்னதை வைத்து, அந்த பிரெஞ்சு இதயச் சிகிச்சை நிபுணர், என்ன மாதிரியான, 'சர்ஜரி'யை கூறியுள்ளார் என்பது, எனக்கு புரிந்து விட்டது.

'அது ரொம்ப சிக்கலான, 'சர்ஜரி!' அதுல, 'ரிஸ்க்' அதிகமாச்சே...' என்றேன், நான்.

'அந்த பிரெஞ்சுகாரரை எனக்கு பிடிக்கவே இல்லை...' எனச் சொல்லி, சற்றே நிறுத்தினார்.

'டாக்டர்! நான் ஒரு விஷயத்துல உறுதியாக இருக்கேன். எனக்கு ஒரு இந்தியன், அதுவும், தமிழகத்தை சேர்ந்த இதய மருத்துவர் தான் சிகிச்சை அளிக்கணும் என்பது, என் ஆசை...' என்றார், ஒரு குழந்தையைப் போல.

அவரது முகபாவத்தை சில விநாடிகள் ரசித்த நான், 'என்னது! உங்களுக்கு ஒரு தமிழன் தான், 'டிரீட்மென்ட்' குடுக்கணுமா? ஏன் அப்படிச் சொல்றீங்க?' என, சீரியசாகக் கேட்டேன்.



— தொடரும்.

எஸ். சந்திரமவுலி




      Our Apps Available On




      Dinamalar

      Follow us