Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/குற்றம் குற்றமே! (21)

குற்றம் குற்றமே! (21)

குற்றம் குற்றமே! (21)

குற்றம் குற்றமே! (21)

PUBLISHED ON : ஏப் 21, 2024


Google News
Latest Tamil News
முன்கதைச் சுருக்கம்: தன் அக்காவை பெண் பார்க்க, ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் வந்தபோதுதானா, ராமகிருஷ்ணனுக்கு, 'ஹார்ட் அட்டாக்' வரணும். இதில், தாமோதருக்கும், அவர் மகன் விவேக்குக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்று முதலில் சந்தேகப்படுகிறான், தனஞ்ஜெயன்.

'ஆரம்பமே அபசகுனமாக இருக்கிறதே...' என்று கவலைப்படுகின்றனர், தனஞ்ஜெயனின், அம்மாவும், அக்கா சாந்தியும். அவர்களை சமாதானப்படுத்தி, மருத்துவமனைக்கு செல்கின்றனர், தனஞ்ஜெயனும், நண்பன் குமாரும்.

தாமோதர் சொல்லிக் கொடுத்தபடி, டாக்டரும், ராமகிருஷ்ணனும் உடனடியாக சாந்தியின் திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். தாமோதர் மீது சந்தேகம் இருந்தாலும், சமாளித்துக் கொள்ளலாம் என்று திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்து, தன் அம்மாவிடமும் தகவல் தெரிவிக்கிறான், தனஞ்ஜெயன்.

'ஆக்சிஜன் மாஸ்க்'குடன், ராமகிருஷ்ணன் குரூரமாக பார்த்தபடி இருக்க, அய்யரும் மந்திரம் சொல்லிக் கொண்டிருந்த நிலையில், மாப்பிள்ளை மோகனின் மொபைல் போனில், சிணுங்கல். எடுத்து, திரையைப் பார்த்தான். ஏதோ ஒரு புதிய எண். உடனேயே முடக்கி, பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

போட்ட சில வினாடிகளில் திரும்ப ஒலித்தது.

சலிப்போடு எடுத்து திரையை பார்த்தான். தாமோதர் அங்கிள் என்ற பெயர். வேகமாய் நகர்ந்து சென்று, காதை கொடுத்தான்.

''மோகன், நான் தான் தாமோதர். இந்த கல்யாணத்தை, 'வீடியோ' எடுக்க மறந்துடாத. நாளைக்கே உண்மை தெரிய வரும்போது, அந்த தனா, கல்யாணம் நடக்கலேன்னோ, இல்ல மிரட்டி, தாலி கட்டினாங்கன்னோ சொல்வான். அப்ப நமக்கு இந்த, 'வீடியோ' தான் சாட்சி,'' என்றார்.

''சரி, அங்கிள். இங்க ஒரு நர்ஸ், தன் மொபைல் போன்ல, 'வீடியோ' எடுத்துக்கிட்டிருக்காங்க.''

''நீயும், உன் போன்ல எடுத்து வெச்சுக்கோ.''

''சரி அங்கிள்.''

''அது சரி, எப்ப தாலி கட்டப் போற?''

''இதோ இப்ப, ஒரு ரெண்டு நிமிஷத்துல முடிஞ்சிடும். அய்யர் மந்திரம் சொல்லிக்கிட்டிருக்கார்.''

''ஐ.சி.யு.,வுக்குள்ள எதுக்கு மந்திரமெல்லாம்? நீ வேகமா தாலி கட்ற வழியை பார். அதிகபட்சம் அரை மணி நேரத்துல, நீ தாலி கட்டி, தனஞ்ஜெயன் அக்காவோட, அதாவது, உன் மனைவியோட உடனேயே கோவிலுக்கு போகணும்ன்னு கிளம்பிடு.

''அப்ப தான், என் ஆட்கள் வந்து, உன் அப்பாவை, என் ரகசிய இடத்துக்கு கூட்டிக்கிட்டு போக முடியும்.''

''சரி அங்கிள்.''

''கமான் குயிக். நேரமில்லை. போலீசும், உன் அப்பாவை தேடி, நீங்க தங்கியிருந்த ஹோட்டலுக்கு போயிருக்காங்க. மோப்பம் பிடிச்சு, ஹாஸ்பிட்டலுக்கு வந்துடப் போறாங்க.''

''புரியுது அங்கிள், போனை, 'கட்' பண்ணிட்டு முதல்ல தாலிய கட்றேன்,'' என்ற மோகன், தன் மொபைலை யாரிடம் தந்து, 'வீடியோ' எடுப்பது என்று விழிகளால் தேடினான்.

''மாப்ள, என்ன வேணும்?'' என்று, தானாக முன் வந்து கேட்டான், குமார்.

''இல்ல... என் மொபைல்ல, 'வீடியோ' எடுக்கணும். நானும், யு.எஸ்.,ல இருக்கிற, என் நண்பர்களுக்கு, 'பார்வேர்ட்' பண்ணிடுவேன்.''

''கொடுங்க நான் எடுக்கிறேன்; நீங்க போய் தாலிய கட்டுங்க. அய்யர் காத்திட்டிருக்கார்,'' என்றான், குமார்.

அவன் கையில் மொபைல் போனை கொடுத்துவிட்டு, தாலி கட்டத் தயாரானான், மோகன். அருகில் இருந்த டாக்டர், நர்ஸ், மோகனின் அம்மா ரஞ்சிதம், கார்த்திகா, தனஞ்ஜெயன், அவன் அம்மா சுசீலா மற்றும் தங்கைகள் கீர்த்தி, ஸ்ருதி அனைவர் கைகளிலும் பூவும், அட்சதையும் வழங்கப்பட்டது.

சுசீலாவின் கண்களில் ஆனந்த கண்ணீர்!

தங்கைகளிடமும் கலக்கம். மோகனும் தாலி கட்டத் தயாரானான். கைக்கு தாலி வந்து அவன் அதை கட்டத் தயாரானபோது, சட்டென்று மின்சாரம் போய், வார்டு முழுக்க கும்மென்று ஒரே இருள்!

இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. டாக்டர் பதற ஆரம்பித்தார்.

''ஹேய், 'வாட் நான்சென்ஸ்... இன்வெர்ட்டர் ஆன்' பண்ணுங்க,'' என்று படபடத்தார்.

''இன்வெர்ட்டர் ரிப்பேர் டாக்டர்,'' என்றாள், நர்ஸ்.

''அப்ப, ஜெனரேட்டரை, 'ஆன்' பண்ணச் சொல்லுங்க, கமான் குயிக்.''

வேகமாய் அங்கிருந்து நகர்ந்தாள், நர்ஸ்.

''என்ன டாக்டர் இது, 'பவர் கட்'டானா, 'ஆட்டோமேட்டிக்'கா, ஜெனரேட்டர் வேலை செய்யாதா?'' என்று கோபமாக கேட்டான், மோகன்.

''சாரி சார்... வேற ஏதோ பிராப்ளம். நான், ஈ.பி.,க்கு போன் பண்ணி விசாரிக்கிறேன்,'' என்று டாக்டரும், தன் மொபைல் போனுடன் நகர்ந்தார்.

சுசீலாவுக்கு அது அபசகுனமாகப் பட்டது.

ஆரம்பத்தில் இருந்தே இப்படி கல்யாணம் நடப்பதில் உடன்பாடில்லாத நிலையில், இப்போது மின்சாரம் போகவும்,

''தனா, என்னாடா இதெல்லாம்? சகுனம் சரியில்லடா. எனக்கு மனச என்னவோ பண்ணுதுடா,'' என்றாள்.

மோகனையும் படபடப்பு தொற்றிக் கொண்டது.

அப்போது, குமார் கையிலிருந்த மோகனின் மொபைல் போனில், அழைப்பொலி. முதல் சிணுங்கலிலேயே தாமோதர் அங்கிள் என்ற பெயருடன் அவரது புகைப்படமும் தெரியவும், அதிர்ந்து போய், 'ஆன்' செய்து, காதை கொடுத்தான்.

''மோகன், நான் தாமோதர் அங்கிள் தான் பேசறேன். போலீஸ், உன் அப்பன் ஆஸ்பத்திரியில இருக்கிறதை மோப்பம் பிடிச்சிட்டு, அங்க தான் வந்துகிட்டிருக்காங்க. நீ, தாலி கட்டிட்டியா?'' என்று கேட்கவும், குமாரிடம் திகைப்பு பல மடங்கானது.

''கமான் மேன், குயிக்... நீ, உடனே தாலிய கட்டி, உன் பொண்டாட்டிய கூட்டிக்கிட்டு புறப்படு. போலீஸ் வரதுக்கு முன், என் ஆட்களை விட்டு, உன் அப்பனை, என், 'கண்ட்ரோலு'க்கு கொண்டு வந்துடறேன்,'' என, தாமோதர் பதறிட, கச்சிதமாக மின்சாரமும் வந்திட, மோகனும் தாலி கட்ட தயாரானான்.

அடுத்த வினாடி, ''ஸ்டாப் இட்...'' என்று, உரத்த குரலில் தடுத்தான், குமார்.

அவன் கையில், மொபைல் போன், 'ஆன்' செய்த நிலையிலேயே இருந்தது.

குமாரை அதிர்வோடு பார்த்தான், தனா.

''தனா, இவன், அந்த தாமோதர் ஆள். உன்னை மடக்க தான் இந்த கல்யாணம். இதோ, 'லைன்'ல அந்த தாமோதர். இங்க பெருசா, 'டிராமா' நடந்துகிட்டிருக்கு,'' என்றான், வேகமான குரலில்.

மோகன் முகமும் மிரளத் துவங்கியது.

சட்டென்று, 'ஸ்பீக்கர் ஆன்' செய்த குமார், ''ஏய் தாமோதர், கடவுள் எங்க பக்கம்தான்யா இருக்கான். 'பவர் கட்' மூலமா கடைசி நிமிஷத்துல, எங்க பொண்ணை காப்பாத்திட்டான். நீ பேசினது மாப்பிள்ளை மோகன்கிட்ட இல்ல. தனாவோட நண்பனான குமார்கிட்ட.

''நீதான் ஒரு, 'ஸ்மக்ளர்'ன்னா, டாக்டர்களுமா? பாவிகளா, நீங்க விளையாட ஒரு அப்பாவி பொண்ணு வாழ்க்கைதானா கிடைச்சது?'' என்று, ஆக்ரோஷமாக கேட்டான்.

''டாட், நீங்க உடனேயே கிளம்புங்க. போலீஸ் இங்க வந்துகிட்டிருக்காங்க,'' என்று, 'ஆக்சிஜன் மாஸ்க்'கோடு படுத்திருந்த, ராமகிருஷ்ணனை வேகமாக எழுப்பினான், மோகன்.

அவரும் எழுந்து ஓடத் தயாரானார். ஆனால், குமாரும், தனாவும் விடவில்லை. இருவரும் ஓடிச்சென்று, அந்த வார்டு கதவை வேகமாக தாழிட்டனர்.

''டாக்டர், இதுக்கெல்லாம் நீங்களும் தானே உடந்தை. உங்களுக்கு வெட்கமாயில்லையா?'' என்று, மிகக் கோபமாக கத்தினான், தனா.

டாக்டர் முகமும் இருண்டது. நர்சும் பதைக்க ஆரம்பித்தாள்.

எல்லாமே தலைகீழாக மாறி விட்டதில், மோகனிடம் எரிச்சல். அதைவிட ஆவேசம் ராமகிருஷ்ணனிடம்.

அய்யர் தேங்காய் பழத் தட்டோடு நடுங்கிக் கொண்டிருக்க, கார்த்திகா, சாந்தியை நெருங்கி ஆறுதலாக அவள் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

குமாரையும், தனாவையும் தள்ளிவிட்டு, ராமகிருஷ்ணனும், மோகனும், ரஞ்சிதமும் கதவைத் திறந்து ஓடினர்.

அவர்கள் தள்ளி விட்டதில், பக்கவாட்டில் விழுந்து, தலையில் காயம் ஏற்பட்டது, தனாவுக்கு. சுசீலா ஓடிப்போய் தனாவை துாக்கினாள்.

டாக்டர் வேகமாய் நெருங்கி வந்து, ''வெரி சாரி சார். எனக்கு உங்க பிரச்னை என்னன்னே தெரியாது. மிஸ்டர் தாமோதர், இந்த ஹாஸ்பிட்டலுக்கு நிறைய, 'டொனேட்' பண்ணியிருக்கார். அந்த நன்றிக்காக நான், அவர் விருப்பப்படி நடந்தேன். ஐ ஆம் ரியலி வெரி சாரி,'' என்றார்.

அதே வேளை, வெளியே, ராமகிருஷ்ணன், மோகனுடன், ரஞ்சிதமும் காரில் ஏறி, ஆஸ்பத்திரி மெயின் ரோட்டை கடக்க முற்பட்டனர். அப்போது, எதிரில், போலீஸ் கார், ஒன்றுக்கு மூன்றாக சுற்றி வளைத்து நின்றது.

''கடவுளே, என் பொண்ணு வாழ்க்கையை, 'கரன்ட் கட்' வடிவத்துல வந்து காப்பத்திட்ட...'' என்று உருகினாள், சுசீலா.

கார்த்திகாவிடம், ''மேடம், என் தம்பியை விட்றுங்க. உங்க பகை, எங்க வாழ்க்கையில எப்படி எதிரொலிச்சதுன்னு இப்ப பார்த்தீங்க தானே?'' என்று கண்ணீரோடு கேட்டாள், சாந்தி.

''ஐ ஆம் சாரி, சாந்தி. உங்க தம்பி இனி வேலைக்கு வர வேண்டாம். எங்க கஷ்டம் எங்களோட போகட்டும். முதல்ல இங்க இருந்து புறப்படுங்க. உங்களை நானே வீட்ல அழைத்து போய் விட்டுட்டு போறேன்,'' என்று, தன் முடிவையும் உடனேயே சொன்னாள், கார்த்திகா.

ஆனால், தனஞ்ஜெயன் அதை ஏற்கவில்லை.

''மேடம், இப்ப இங்க எதையும் பேச வேண்டாம். முதல்ல வீட்டுக்கு போவோம்,'' என்று புறப்பட்டனர்.

டாக்டரும், நர்சும் பரிதாபமாக பார்க்க, அவர்களும் புறப்பட்டனர்.

வீட்டுக்குள் நுழைந்த நொடி, சுசீலா, தன் கணவரின் போட்டோ அருகில் நின்று, ''உங்க மக, ஒரு பெரிய ஆபத்திலிருந்து தப்பிச்சிட்டாள்,'' என்றாள்.

குமாரின் கையை இறுகப் பற்றியிருந்தான், தனா.

''குமார், நீ ரொம்ப, 'டைமிங் சென்ஸ்'சோட நடந்துகிட்டேடா. நல்ல வேளை, அந்த மோகன், மொபைல் உன் கையில இருந்து, உண்மை தெரிஞ்சது. சாந்தி வாழ்க்கை, மயிரிழையில் தப்பிச்சது,'' என்றான்.

கார்த்திகாவும், குமாரை நெருங்கி வந்து, ''வெரி குட் குமார். நல்ல, 'டைமிங் சென்ஸ்' உங்களுக்கு...'' என்றதும், தனாவின் மொபைல் போனில் அழைப்பொலி.

அழைத்தவன், விவேக்.

''ஹலோ மிஸ்டர் வில்லன், எங்க இன்னும் போன் வரலையேன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன். நீயே போன் பண்ணிட்ட. என்னை மடக்க நீயும், என்னென்னமோ பண்ணிப் பார்க்கிற. ஆனா, எல்லாமே மண்ணைக் கவ்விடுது.

''இதுக்கு மேலயும் நீ திருந்தலேன்னா, உன்னை அந்த கடவுளால கூட காப்பாத்த முடியாது, விவேக்,'' என்று துவங்கினான், தனா.

''தனா, ரொம்ப அலட்டிக்காத. உங்க அக்கா வரையில, தாலி கட்டற வரை வந்து, அது தடைபட்டு போனதை நினைச்சு பார். எங்க மாப்பிள்ளை மோகனுக்கு, பொண்ணு கிடைக்கிறது பெரிய விஷயமில்லை.

''ஆனா, உன் அக்காவுக்கு மாப்பிள்ளை கிடைக்கிறது இனி அவ்வளவு சுலபமில்லை. ஒரு சுப காரியம், ஒருமுறை தடைபட்டா, மூன்று முறை தொடர்ந்து தடைபடுமாமே?''

''இதைச் சொல்லத்தான் கூப்பிட்டியா?''

''இதை சொல்ல மட்டுமல்ல, உன் அக்கா கல்யாணத்தை நீ எப்படி நடத்திடறேன்னு நானும் பார்க்கிறேன். முன்ன, உன் மேல எனக்கிருந்தது கோபம் மட்டும் தான். ஆனா, இப்ப அதோட பழி உணர்வும் சேர்ந்திடுச்சு.

''உன் அக்காவை கட்ட, எந்த மாப்பிள்ளை எங்க இருந்து வரான்னு நானும் பார்க்கிறேன்,'' என்று சொல்லி, போனை துண்டித்தான்.

அவன் பேசியதை, 'ஸ்பீக்கர் போனில்' எல்லாருமே கேட்டிருந்த நிலையில், ''இந்த வேலை வேண்டாம். பணக்கார பகை நமக்கெதுக்குன்னு சொன்னேனே கேட்டியா?'' என்று, மார்பில் அடித்துக் கொண்டு முன் வந்தாள், அம்மா சுசீலா.

கார்த்திகாவிடம், ''அம்மா தாயே, உனக்கு கோடி கும்பிடு. என் தம்பியை விட்டுடு. முதல்ல புறப்படு,'' என்றாள், மணக்கோலத்தில் இருந்த, சாந்தி.

தனஞ்ஜெயனிடம் ஒரு மவுன இறுக்கம்; ஆனால், குமாரிடம் ஒரு தெளிவு.

''தனா, இவங்க பேசறத எல்லாம் கேட்டு கலங்காத. நாம எந்த தப்பும் பண்ணல. தப்பு செய்த குற்றவாளி, திருந்தி வாழ நினைக்கிறார். அதுக்கு துணையா இருக்கோம். இதுக்கு நாம பெருமை தான் பட்டுக்கணும்.

''சில சோதனைகள் இதுக்கு நடுவுல வரத்தான் செய்யும். அதுக்காக, சோர்ந்து பின் வாங்கிடக் கூடாது. இப்ப கூட எதுவும் கெட்டுப் போயிடல. நாம நினைச்சா, இப்பவே அந்த விவேக் முகத்துல கரியை பூசலாம்.

''சாந்தி கழுத்துல நான் தாலிய கட்றேன். அதை, 'வீடியோ' எடுத்து, விவேக்குக்கு அனுப்பு. இதுக்கு, சாந்தி சம்மதிச்சா போதும். என்ன சொல்ற?'' என்ற குமாரை, விரிந்த விழிகளோடு பார்த்தாள், சாந்தி.

— தொடரும்.

இந்திரா சவுந்தர்ராஜன்






      Our Apps Available On




      Dinamalar

      Follow us