Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!

திண்ணை!

PUBLISHED ON : மார் 10, 2024


Google News
Latest Tamil News
நாகை தருமன் எழுதிய, 'மறக்க முடியாத திரை உலக மாமணிகள்' நுாலிலிருந்து:

திருவருட்செல்வர் படத்தில், முத்துராமன் - சாவித்திரி, நாயகன், நாயகியாக நடித்தனர். பூஜை போடப்பட்டது.

அப்போது, முத்துராமனிடம், 'நீங்கள் இந்தப் படத்தில் என்னுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறீர்கள். என்னோடு இணைந்து, கதாநாயகனாக நடிக்க வேண்டுமென்றால், இப்படி இளைத்து இருக்கக் கூடாது.

'ஜோடிப் பொருத்தத்திற்காக, நீங்கள், நிறைய சாப்பிட்டு, உடல் பெருக்கணும். என்னைப் பாருங்கள். வஞ்சனையில்லாமல், எப்படி பெருத்திருக்கிறேன்.

'முத்துராமன் சார், நமக்குள் ஒரு போட்டி. நாம் இருவரும் சேர்ந்து நடிப்பதற்கு இடையில் இன்னும், 15 நாட்கள் உள்ளன. உங்களோடு நடிப்பதற்காக, முடிந்தவரையில் நான் இளைக்கப் பார்க்கிறேன். நீங்கள், எப்படியாவது பருமனாகப் பாருங்கள்...' என, வேடிக்கையாக கூறினார், சாவித்திரி.

ஆனால், இந்த போட்டியில் முத்துராமன் தான் வெற்றிப் பெற்றார்.

எம்.வி. வெங்கட்ராம் எழுதிய, 'திலகர்' என்ற நுாலிலிருந்து:

பாகிஸ்தான் பிரிந்த பின், ஹிந்து தலைவர்களின் சிலைகளை அங்கு உடைத்தெறிய ஆரம்பித்தனர்.

அப்போது, 'திலகரின் சிலையை உடைக்கக் கூடாது ஜாக்கிரதை; அவர் என் வாத்தியார்...' என எச்சரித்தார், பாகிஸ்தானின் தந்தை, ஜின்னா.

தன், 'கேசரி' இதழில், ஆங்கில அரசின் அடக்குமுறை குறித்து கடுமையாக எழுதினார், திலகர்.

இதனால், கோபம் அடைந்த ஆங்கிலேய அரசு, அவர் மீது வழக்கு தொடுத்தது. வழக்கு, எட்டு நாட்கள் நடந்தது.

தீர்ப்பில், 'சட்டப்படி, உங்களுக்கு ஆயுள் முடிய நாடு கடத்த வேண்டும். ஆனால், உங்கள் வயதையும், மற்ற காரணங்களையும் மனதில் கொண்டு, ஆறு ஆண்டுகள் நாடு கடத்தும் தண்டனையை வழங்குகிறேன்...' என்றார், நீதிபதி.

ஆறு ஆண்டுகள், பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார், திலகர்.

பல ஆண்டுகள், 'கேசரி' இதழில், திலகர் எழுதிய கட்டுரைகள், மொழிமாற்றம் செய்யப்பட்டு, தமிழிலும் வெளிவந்தன.

அதை படித்து தான், வ.உ.சிதம்பரம் பிள்ளை, பாரதியார் மற்றும் சுப்ரமணிய சிவா போன்றோர், தேசிய அரசியலில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

கல்கி ராஜேந்திரன் எழுதிய, 'அது ஒரு பொற்காலம்' நுாலிலிருந்து:

இறந்தவரின் உடலை படம் பிடித்து, தன் பத்திரிகையில் வெளியிடக் கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருந்தார், கல்கி. மிகப்பெரிய தலைவர்கள் காலமானால் கூட, அவர்கள் ஆரோக்கியமாக இருந்த நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் வெளியிட்டு,

அஞ்சலி செய்தி வெளியிடுவார்.

ஒரே ஒருமுறை இதற்கு விதி விலக்கு செய்தார். காந்திஜி காலமானபோது, அவரது இறுதி யாத்திரைப் படங்கள் வெளியிடும் போது, 'லாங் ஷாட்'டில், மக்கள் வெள்ளத்தையும், 'குளோஸ் - அப்'பில், காந்திஜி மீளா துயில் கொண்டிருக்கும் படத்தையும் வெளியிட்டார்.

'இதை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்...' என்று கேட்டனர்.

'காந்திஜி, மானுடர் அல்ல; அவதார புருஷர். அவருக்கு ஜனனமும் இல்லை; மரணமும் இல்லை...' என்றார், கல்கி.

- நடுத்தெரு நாராயணன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us