Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

PUBLISHED ON : மார் 10, 2024


Google News
Latest Tamil News
அன்புள்ள அம்மாவுக்கு -

நான், 26 வயதுள்ள ஆண். ரயில்வே பணியில் உள்ளேன். அம்மா, அப்பா, தங்கை என, அழகான குடும்பம் என்னுடையது. கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாள், தங்கை.

அப்பா, மத்திய அரசு ஊழியர்; அம்மா, ஸ்கூல் டீச்சர். சொந்த பந்தங்கள் அதிகம் பேர். அவர்கள் குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவரை தான் எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர், என் பெற்றோர்.

ஆனால், எனக்கு உறவின பெண்கள் மீது அதிகம் ஈடுபாடு ஏதுமில்லை. ஏதாவது விசேஷ தினங்களில், சந்திப்பதோடு சரி அவ்வளவே!

என் தங்கையுடன் படிக்கும் தோழி ஒருவள், அடிக்கடி என் வீட்டுக்கு வருவாள். தங்கையுடன் நீண்ட நேரம் பேசி, அரட்டை அடித்துவிட்டு செல்வாள்.

என்னை, 'அண்ணா... அண்ணா...' என்று தான் அழைப்பாள்.

ஒருமுறை, தங்கை இல்லாத நேரத்தில், என் வீட்டுக்கு வந்த அந்த பெண்ணிடம், 'இனி, என்னை அண்ணன் என்று கூப்பிடாதே...' என்றேன்.

முகம் மாறி, சந்தேகமாக பார்த்து, உடனே வெளியே சென்று விட்டாள். அதன்பின் கொஞ்ச நாட்களாக வீட்டுக்கு வரவில்லை.

சமீபத்தில், வீட்டில், அம்மா அல்லது யாராவது இருக்கின்றனரா என்று கேட்டு விட்டு, தங்கையை பார்க்க வர ஆரம்பித்தாள். அப்பெண்ணை நான் விரும்புகிறேன். என்னை அண்ணனாக பாவிக்கும் அவளிடம் என் விருப்பத்தை எப்படி சொல்வது என்று தயக்கமாக இருக்கிறது.

ஏதாவது ஏடாகூடமாகி, அமைதியான, சந்தோஷமான குடும்ப சூழ்நிலையை கெடுத்து விடுவேனோ என்று பயமாக இருக்கிறது. அப்பெண் வரும்போதெல்லாம் மனம் சஞ்சலப்படுகிறது.

அவள் வரும்போது, வீட்டில் இருக்கக் கூடாது என்று நினைத்து வெளியே சென்று விடுகிறேன். அப்பெண் போன பின்னரே வீடு திரும்புகிறேன். என் தடுமாற்றம் அம்மாவுக்கு புரிந்ததோ என்னவோ, 'ஏன்டா ஒரு மாதிரி இருக்கிறாய்?' என்று துளைத்து எடுக்கிறாள்.

பதில் சொல்ல முடியாமலும், மன சஞ்சலத்தை கட்டுப்படுத்த முடியாமலும் தவிக்கிறேன். நிம்மதி பெற நல்ல ஆலோசனை கூறுங்கள், அம்மா.

— இப்படிக்கு,உங்கள் மகன்.

அன்பு மகனுக்கு--

உன் காதலை, தங்கையின் தோழி ஏற்றுக் கொள்ள சாதகமான விஷயங்கள்...-

* ரயில்வேயில் நீ நிரந்தரப் பணியில் உள்ளாய். நல்ல சம்பளம். கணவனும், மனைவியும் இந்தியா முழுக்க இலவச பாஸ் மூலம் சுற்றி வரலாம்

* நாத்தனாரே தோழியாய்

* வருங்கால மாமனார்- மாமியார் நல்ல பணிகளில். சொந்தக்காலில் நிற்கும் அவர்கள் பொருளாதார ரீதியாய் மகனை சார்ந்து வாழமாட்டார்கள்.

உன் காதலை தங்கையின் தோழி மறுதலிக்க கீழ்க்கண்ட விஷயங்கள் காரணங்களாக இருக்கலாம்

* அவள் தீவிரமாக வேறு யாரையும் காதலித்து கொண்டிருக்கிறாளோ என்னவோ?

* நீ சுமார் மூஞ்சி குமாராக, 'பிலோ ஆவரேஜ் பெர்சனாலிட்டி'யுடன் இருக்கிறாயோ?

* உனக்கு குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பதாக அரசல்புரசலாக கேள்விபட்டிருப்பாளோ?

* உனக்கும் அவளுக்கும் வயது வித்தியாசம் அதிகமோ!

* இவன் நம்மை காதலிக்கும் எண்ணத்துடன் இல்லை என எண்ணுகிறாளோ?

இனி, நீ செய்ய வேண்டியது-...

உன் விருப்பத்தை அம்மாவிடம் கூறு. அதே விஷயத்தை அம்மா, அப்பாவிடம் பதவிசாக கூறி, அவரை சம்மதிக்க வைப்பார். பெற்றோரை, அவள் வீட்டுக்கு அனுப்பி, பெண் கேட்கச் சொல்.

சில பெண்களுக்கு காதல் கத்திரிக்காய் எல்லாம் பிடிக்காது. நேரடியாக திருமணம் என்றால் சம்மதித்து விடுவர். உன் தங்கை தோழியின் பெற்றோருக்கு உன்னை பிடித்திருந்தால் தானும் ஓ.கே., சொல்லி, மகளையும் ஓ.கே., சொல்ல வைப்பர்.

உன் மனதுக்கு பிடித்த பெண்ணை பெரியவர்கள் பார்த்து திருமணம் செய்து வைப்பது நேரான வழி.

பெண் கேட்டு போன உன் பெற்றோரிடம் தங்கை தோழி, 'நோ' சொல்லி விட்டால் என்ன செய்வது?

பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள கப்பல் எதுவும் கவிழ்ந்து விடவில்லை. உனக்கு தான் உறவினர்கள் அதிகமாயிற்றே.

உன் உறவுக்கார பெண்களில் திருமணத்துக்கு தகுதியாக இருக்கும் பெண்கள் பட்டியல் எடு. அறிவிலும், படிப்பிலும், அழகிலும் சிறப்பான பெண்ணை தேர்ந்தெடு. அவளை ஒரு சுபயோக சுபதினத்தில் திருமணம் செய்து வாழ்க்கையில், 'செட்டில்' ஆகு.

என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us