Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/மருமகள் அல்ல!

மருமகள் அல்ல!

மருமகள் அல்ல!

மருமகள் அல்ல!

PUBLISHED ON : மார் 10, 2024


Google News
Latest Tamil News
பள்ளிக்கூடம் விட்டு கிளம்பினாள், கோமதி. 'ஹோ'வென்ற கூச்சலுடன் சைக்கிள் ஸ்டாண்ட் நோக்கி ஓடினர், மாணவர்கள்.

பன்னிரெண்டாம் வகுப்புக்கான நாளைய கணக்குப் பாடத்தை மனதில் நினைத்தபடியே, கோமதி வெளியில் வந்தபோது, பின்னால் காலடி ஓசை கேட்டது. வேகமாக வந்து கொண்டிருந்தாள், வந்தனா டீச்சர்.

''ஒரு நிமிஷம், கோமதி டீச்சர்... உங்ககிட்ட ஒரு, 'ரெசிபி' கேட்கணும்.''

''என்ன டீச்சர்?''

''கடலை மாவுல, டோக்ளா பண்ணுகிற மாதிரி, அரிசி மாவுல கூட பண்ணலாமாம். உங்களுக்குத் தெரியும்ன்னு, சோபா டீச்சர் சொன்னாங்க,'' என்றாள், வந்தனா.

''ஆமாம் டீச்சர்... பச்சரிசியை நான்கு மணி நேரம் ஊற வெச்சு, அதோட தயிர் சேர்த்து அரைச்சு வைக்கணும். கொஞ்சம் ரவை, உப்பு சேர்த்து கலந்து ஏழு மணி நேரம் ஊற வைக்கணும். பிறகு, ஒரு தட்டில் நெய் தடவி, கலவையை பரத்தி விட்டு, 'ஸ்டீம் குக்' பண்ணினா, டோக்ளா ரெடி,'' என்று கூறி, புன்னகைத்தாள் கோமதி.

''சூப்பர் கோமதி டீச்சர். ம்... பாருங்க, 55 வயசுக்கு மேல புதுசு புதுசா கத்துக்க வேண்டியிருக்கு. இல்லேன்னா மருமககிட்ட, 'மக்கு'ன்னு தான் பட்டம் வாங்கணும்.''

''புரியல டீச்சர்?''

''உங்களுக்கும், கல்யாண வயசுல பையன் இருக்கான்ல? போகப் போக புரிஞ்சுக்குவீங்க,'' என்ற பெருமூச்சுடன் நகர்ந்தாள், வந்தனா டீச்சர்.

வீடு வந்து கோமதி சேர்ந்தபோது, அதிசயமாக வந்திருந்தான், தீபக்.

''ஹாய் மா... இன்னிக்கு ஒண்ணும், 'டின்னர்' பண்ணாத. 'ஆர்டர்' பண்ணிக்கலாம்,'' என்று, 'லேப்டாப்'பை மூடினான்.

''ஏம்பா, அடைக்கு அரைச்சு வெச்சிருக்கேனே!''

''இருக்கட்டும், நாளைக்கு பார்த்துக்கலாம். நீ, 'ரெப்ரெஷ்' பண்ணிட்டு வா... கொஞ்சம் பேசணும்.''

குளித்து, காட்டன் உடைக்கு மாறினாள். உள்ளே ஏதோ படபடத்தது. தீபக் நல்ல பையன் தான். ஆனால், இந்த தலைமுறையின் பிரதிநிதி. கேட்ட கேள்விக்கு பதில். மெல்லிய சிரிப்பு. எப்போதும் நண்பர்கள், கிரிக்கெட், புராஜெக்ட், கார்ப்பரேட் அவ்வளவு தான்.

கணவர் நந்தகோபால் போய் சேர்ந்தபோது, தீபக்குக்கு மூன்று வயது.

அரசாங்க ஆசிரியர் வேலை, பொறுமையான குணம், ஆர்ப்பரிக்காத மனது என்று, மலை ஏறுவது போல பாறைகளை, காடுகளை, காட்டருவிகளைக் கடந்து வந்து, அவனை ஆளாக்கி விட்டாள், கோமதி.

''உட்காரும்மா.''

''காபி, வேணுமா தீபக்?'' என்றாள்.

''பேசிட்டு அப்புறமா குடிக்கலாம்.''

''சரிப்பா.''

''சுற்றி வளைக்காமல் நேரிடையாக சொல்லிடறேன். வீணான்னு ஒரு பெண். எங்க கம்பெனி தான். வேற பிராஞ்ச், வேற டிபார்ட்மென்ட். மூணு வருஷமா பழகறோம். இத்தனை நாளா உன்கிட்ட சொல்லணும்ன்னு ஏனோ தோணல. நீ, அவளைப் பார்க்கணும் அம்மா,'' என்றான். எதிரில் இருந்த டீப்பாய் மேல் நிலைத்திருந்தன, கண்கள்.

உமிழ்நீரை விழுங்கினாள், கோமதி. மெல்லிய படபடப்பு.

''நீ, எல்லா அம்மாவையும் போல இல்லை. உலகம் தெரியும் உனக்கு. என் மேல் நம்பிக்கையும் இருக்கு. நான் தேர்ந்தெடுக்கும் பெண், நல்ல குணத்தோடு தான் இருப்பாள்னு நீ நிச்சயம் நம்புவாய். சரியா அம்மா?'' என்றான்.

''ஆமாம், தீபக்!''

''தாங்க்ஸ் அம்மா... அவள் நல்ல பெண் தான். ஆனால், நிறைய விஷயங்களில் பிடிவாதமாக இருப்பாள். தன் துாக்கம், சாப்பாடு, சுதந்திரம் இதெல்லாம் எப்பவும் பாதிக்கப்படக் கூடாது என்று கவனமாக இருப்பாள். நானும் கூட அப்படித்தானே?''

''தப்பில்லையே... மனிதனுக்கு இயற்கையாய் இருக்கும் குணங்கள் தான் எல்லாம்.''

''தாங்க்ஸ்... நீயே சொல்லு, நீ சொல்லும் இடத்தில், அவளை சந்திக்கலாம்.''

''சரிப்பா,'' என்றாள்.

உரையாடல் முடிந்ததும், அவன் எழுந்து போய் விட்டான்.

அடுத்து வந்த தினங்களில் கோமதிக்கு, சங்கடங்கள் ஏற்பட்டன.

தீபக், அந்த வீணாவுடன் பேசுவது தானாகக் காதுகளில் விழுந்தது. சில சமயம் இனிமை, சில சமயம் வாக்குவாதம், சில சமயம் கோபம், சில சமயம் காதல்.

வீணா...

என்ன மாதிரியான பெண் அவள்?

மருமகள் வந்த பின், மகன் முழுமையாக மாறி விட்டதை, வீட்டில், தன் மரியாதை குறைவதை, தான் பிற்போக்கு போல காட்டப்படுவதை, நாட்டு நடப்பு தெரியாத பேதையாக சித்தரிக்கப்படுவதை பற்றி, வந்தனா டீச்சர், சோபா டீச்சர் எல்லாரும் பேசிக் கொள்வர்.

தனக்கும் அதே நிலை தான் வரப் போகிறதா? அவன் இப்போதே சொல்கிறானே, பிடிவாதக்காரி, சுதந்திரமானவள் என்று.

'உனக்கு சம்மதமா...' என்று கூட கேட்கவில்லையே!

அவன் அப்படிபட்டவன் இல்லை.

'அம்மா... இன்னிக்கு சப்பாத்தி பனீர் செய்ய முடியுமா; கம்ப்யூட்டர் எய்டட் டிராயிங் கோர்ஸ் சேரணும், 20 ஆயிரம் ஆகும், முடியுமா?' என்று கவலைப்படுவான். 'பிக்னிக் வரலைன்னு சொல்லிட்டேன். அந்த, 500 ரூபாய்க்கு உனக்குப் பிடிச்ச தொட்டிச்செடி வாங்கலாம்மா...' என்பான்.

அப்படியே கரைந்து போவாள், கோமதி. கஷ்டம் தெரிந்து வளர்கிறதே பிள்ளை என, ஒருபக்கம் வருத்தமாக இருந்தாலும், அதனால் தான் பொறுப்பாக வளர்வதாக தோன்றும்.

தன் அத்தனை கனவையும் நிறைவேற்றும் ராஜகுமாரன், கணவனின் இழந்த அன்பை ஈடுகட்ட வந்திருக்கும் தேவகுமாரன் என்றும் நினைப்பாள். கடைசி வரை அவன் முகம் பார்த்தபடியே வாழ்ந்து, உயிரை விட்டால் போதும் என்று நெஞ்சு கசியும்.

வரப் போகிறாள் ஒருத்தி. அவனுக்கு எல்லாமாகவும் இருக்கக் கூடிய ஒருத்தி தான். ஆனால், ஏதோ ஒரு நெருடல், சங்கடம். என்ன இது?

பள்ளி விட்டு கிளம்பினாள், கோமதி.

பன்னீர் மரம் தாண்டும்போது, எதிரில் அந்த இளம்பெண் வந்தாள்.

''ஒரு நிமிடம் அம்மா, நான் வீணா. கொஞ்சம் பேசலாமா?''

துாக்கி வாரிப்போட்டது கோமதிக்கு.

''சாரிம்மா... சொல்லாமல் வந்துட்டேன்,'' என்று முறுவலித்தவளை, கவனித்துப் பார்த்தாள், கோமதி.

எழிலான முகம், பளீர் விழிகள், மெல்லிய கண்மை இட்டதில் தெரியும் கூடுதல் ஒளி. அளவான நாசி, மெல்லிய தேகம், கண்ணியமான தோற்றம்.

''வீணாவா?'' என்றாள்.

''ஆமாம் அம்மா... அஞ்சு நிமிஷம் ப்ளீஸ்!''

''தாராளமாக... வாம்மா, உட்காரலாம்!''

பெஞ்சில் உட்கார்ந்தபடி, ''தீபக், உங்களைப் பற்றி உயர்வாக பேசுவார். உங்கள் உழைப்பு, நிதானமான குணம், புத்திசாலித்தனம் எல்லாம் பெருமையாகச் சொல்வார். என் அம்மாவும் உங்களைப் போலத்தான்.

''அப்பா, என் மூன்று வயதிலேயே போய் விட்டார். என்னையும், அண்ணனையும், அம்மா தான் தையல் வேலை செய்து ஆளாக்கினாள். அண்ணன் பெரிய, ஐ.டி., கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கிறான்.''

''அப்படியா!''

''ஆமாம்... அண்ணனுக்கு கல்யாணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. காதல் திருமணம் தான். ஆனால், அண்ணிக்கும், அம்மாவுக்கும் ஒத்து வரவில்லை. அம்மாவுக்கு அண்ணன் மேல் ரொம்ப ரொம்ப பாசம்.

''அண்ணிக்கு தான் தான் முதல் என்ற எண்ணம். அண்ணனை பங்கு போடுவது போல் நினைத்தாள். முழு அன்பும் தனக்கு தான் உரிமை என்று பிடிவாதமாக நின்று, சண்டைகள் போட்டு, இப்போது அவர்கள் தனியாகப் போய் விட்டனர்.

''அம்மா, தினம் தினம் கண்ணீர் விடுகிறாள். தினம் பார்க்கிறேன். நிறைய பாடங்கள் கற்கிறேன்.''

பொறுமையாக, ஒவ்வொரு வார்த்தையாக உச்சரிக்கும் அந்த இளம் பெண்ணை வியப்புடன் பார்த்தாள், கோமதி.

''தனியொரு தாயாக மகனை வளர்க்கும் அம்மாக்கள், மலை போல பாசத்தை வைத்து விடுகின்றனர். 'சைக்கலாஜி'கலாக அது நியாயம் தான். ஆனால், ஒவ்வொருவரும் தனி மனிதர் இல்லையா?

''மகனும், ஒரு தனித்தன்மையான ஆள். அவனுக்கு என்று ஒரு உலகம், மனைவி என்பவளால் தான் புதியதாக உருவாகிறது. வாழ்வின் நோக்கம் தெளிவாகிறது. குழந்தை, வேலை, வீடு, பயணம் என்று, அவன் புது உறவுகளுடன் வாழ ஆரம்பிக்கிறான்.

''இதை புரிந்து கொள்ளவில்லை, அம்மா. அண்ணியும் உரிமைச் சண்டையாக நினைத்து விட்டாள். இருவருக்கும் தனித்தனியான, 'ஸ்பேஸ்' இருக்கிறது. இருவருக்கும் பிரத்யேக கடமைகள், உரிமைகள், பொறுப்புகள் இருக்கின்றன.

''அவரவர் இடத்தில் நின்று வேலைகளைச் செய்யும்போது, எல்லாமே இனிமையாக மாறி விடும். இதை நான் கண்கூடாக பார்க்கிறேன்.

''தீபக் மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பு, நான் வைத்திருக்கும் காதல் இரண்டும் அவரை மேலும் மேலும் உற்சாகப்படுத்தட்டும். நான் சொல்வது சரியா? தவறு இருந்தால் சொல்லுங்கள் அம்மா,'' என்றாள்.

''கண்ணே வீணா... இதைவிட அழகாக உறவுகள் பற்றி எப்படி சொல்ல முடியும்? இந்த நிமிடத்திலிருந்து, மகள் போலத்தான் உன்னை நினைக்கிறேன்,'' என்ற கோமதியின் கரங்கள் நீண்டு, வீணாவை மெல்ல அணைத்துக் கொண்டன.     

வி. உஷா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us