Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!

திண்ணை!

PUBLISHED ON : மார் 03, 2024


Google News
Latest Tamil News
நாகை தருமன் எழுதிய, 'மறக்க முடியாத திரை உலக மாமணிகள்' நுாலிலிருந்து:

'பானுமதி என்றாலே பலருக்கு பயம். லைலா மஜ்னு படத்தில், பானுமதி அம்மாவுடன் நடித்தேன். எனக்கு பயிற்சி கொடுத்ததே பானுமதி அவர் தான். லைலா மஜ்னு படம் எடுக்கப்பட்ட சமயத்தில், குழப்பம் ஏற்பட்டு விட்டது. அந்த அம்மா கையைப் பிடிக்கிறதுன்னாலே எனக்கு பயம். அப்போது, கேமராவை எடுத்துக் கொண்டு, என்னையும் கடற்கரைக்கு அழைத்துச் சென்று, தன் கையை பிடிக்கச்சொல்லி, ஓடு, ஓடு, ஓடுன்னு பயிற்சி கொடுத்தாங்க...' என்றார், நாகேஸ்வரராவ்.

* எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் இருவருமே, பானுமதியை அம்மா, அம்மா என்று தான் அழைப்பர். நாகேஸ்வரராவ் தான், முதன் முதலில், 'மேடம்' என, அழைத்தார். இதனால், 'நான், 28 வயதிலேயே அம்மா ஆகிவிட்டேன்...' என்றார், பானுமதி.

* 'எனக்கு தமிழ் கற்றுக்கொள்ள ஒரு டீச்சர் வெச்சாங்க. ஆனால், அவங்க சொல்லிக் கொடுத்து எனக்கு, தமிழ் வரவில்லை. சின்ன வயசிலிருந்து எனக்கு ஒரு பழக்கம். சொன்னா வராது, கேட்டால் தான் வரும்.

'ஒரு வரியை பத்து தடவை படித்தாலும் வராது. யாராவது ஒரு தடவை சொல்ல கேட்டால், உடனே அதை திருப்பி சொல்லி விடுவேன். ஒரு பாட்டு பெரியதானாலும் கேட்டுவிட்டு உடனே பாடுவேன். தமிழ் கற்றதும் இப்படித்தான்...' என்றார், பானுமதி.

    

எம்.வி. வெங்கட்ராம் எழுதிய, 'கோபாலகிருஷ்ண கோகலே' என்ற நுாலிலிருந்து:

இளம் வயதில், தந்தையை இழந்து, வறுமையில் வாடியவர், கோபாலகிருஷ்ண கோகலே. பள்ளி விடுதியில் அவர் தங்கியிருந்த போது, சாப்பாட்டில் கூடுதலாக தயிர் சாப்பிட ஆசை. அதற்கு, 'மாதம் எட்டணா, கூடுதலாக தரவேண்டும்...' என்றார், சமையற்காரர்.

தினமும், இரண்டு வேளை மட்டுமே அவருக்கு உணவு. அதில், ஒரு வேளை உணவை குறைத்தால் தான், தயிர் பரிமாறும் நாட்களில் அதை சாப்பிட இயலும்.

தயிர் சாப்பிடும் தினங்களில் மட்டும், ஒருவேளை சாப்பாட்டுடன் நிறுத்திக் கொள்வார், கோகலே.

மற்றொரு சம்பவம்...

கோகலேவின் வகுப்பில் பணக்கார சிறுவன் ஒருவன் படித்துக் கொண்டிருந்தான்.

ஒருநாள், 'நாடகம் பார்க்கச் செல்கிறேன். நீயும் வருகிறாயா. நல்ல நாடகம், சின்னவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும். அப்பா, என்னை போகச் சொன்னார். நீயும் வா, உனக்கும் நான் டிக்கெட் வாங்குகிறேன்...' என்றான், அந்த பணக்கார சிறுவன்.

வரவில்லை எனக்கூறியும், கோகலேவின் கையை பிடித்து, நாடகத்துக்கு அழைத்துச் சென்றான்.

நாடகம் பார்த்து வந்த மறுநாள், 'நீ, டிக்கெட் காசு தரவில்லையே...' எனக் கேட்டு, கோகலேவிற்கு அதிர்ச்சியை தந்தான், பணக்கார நண்பன்.

தயிருக்கு, ஒருவேளை சாப்பாட்டை விட்டாச்சு. இதற்கு என்ன செய்வது என்று யோசித்தார்.

ஒவ்வொரு நாளும், இரவில் படிக்க, மண்ணெண்ணை விளக்கு ஏற்றி படிப்பார், கோகலே.

அதற்குரிய சில்லரையை கொடுக்காமல் நிறுத்தி, தெரு விளக்கில் படிக்க முடிவெடுத்து, அவ்வாறே செய்தார். அப்படி சேமித்த பணத்தை, அந்த பணக்கார நண்பரிடம் கொடுத்து, கடனை அடைத்தார், கோகலே.     

- நடுத்தெரு நாராயணன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us