Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

PUBLISHED ON : பிப் 25, 2024


Google News
Latest Tamil News
திருடுவதற்கு, இப்படி ஒரு வழியா?

சமீபத்தில், முன் பின் தெரியாத ஒருவர், எங்கள் வீட்டிற்கு வந்து, 'மொபைல்போனில் சார்ஜ் இல்லை. போட்டு தர முடியுமா...' என்று, கேட்டார்.

'நீங்கள் யார்...' என்றேன்.

'ஜோசியம் பார்க்க வந்துள்ளோம்; பக்கத்தில் உள்ள கோவிலில் இருக்கிறோம்...' என்றார்.

'சரி...' என, போனை வாங்கி, 'சார்ஜ்' போட்டேன்.

ஒரு மணி நேரம் ஆகியும், அவர் வரவில்லை. வரும்போது வரட்டும் என்று காத்திருந்தேன்.

இரண்டு மணி நேரம் கழித்து வந்தவர், நன்றி சொல்லி வாங்கிப் போனார்.

அப்போது, காவல்துறையைச் சேர்ந்த உறவினர் ஒருவர், என் வீட்டிற்கு வந்து, வந்தவரைப் பற்றி விசாரித்தார்.

நாங்கள் கூறியதை கேட்டதும், 'இதுபோன்ற நபர்களிடம் மொபைல்போனை வாங்காதீர்கள். அவர்கள், மொபைல்போன் கேமரா மூலம், உங்கள் வீட்டை நோட்டமிட்டு, விலை உயர்ந்த பொருட்களை திருட வாய்ப்புள்ளது. இனி, அறிமுகமில்லாதவர்களின் மொபைல் போன்களை வாங்காதீர்கள்...' என்றார்.

மனிதாபிமான முறையில், உதவி செய்பவர்களை ஏமாற்ற எப்படியெல்லாம் வழி கண்டுபிடிக்கின்றனர். நாம் தான் உஷாராக இருக்க வேண்டும்.

— எம். முருகலட்சுமி, அய்யலுார், திண்டுக்கல்.

பட்டதாரியின் பழைய இரும்புக்கடை!

பட்டப்படிப்பு முடித்த, நண்பரின் மகன், வேலை தேடி, 'இண்டர்வியூ'வுக்கு போய் வந்தான். மேலும், 'டூ--வீலரில்' தெருத் தெருவாகச் சுற்றி, வீடுகளில், பழைய பேப்பர், புத்தகங்கள், பழைய இரும்பு, பிளாஸ்டிக், அட்டை மற்றும் பாட்டில்கள் என, அனைத்தையும் நியாயமான விலைக்கு வாங்குவான்.

பழைய இரும்புக்கடையில் அவற்றை எடைக்குப் போட்டு, அதில் வரும் லாபத்தை, அவன் செலவுக்கும், வீட்டுச் செலவுக்கும் பயன்படுத்திக் கொள்வான்.

இந்நிலையில், சரியான வேலை கிடைக்காததால், நகரின் முக்கிய வீதியில், வாடகைக்கு ஓர் இடம் பிடித்து, பழைய இரும்புக்கடை தொழில் துவங்கினான்.

ஆரம்பத்தில் மந்தமாக இருந்த வியாபாரம், சில மாதங்களில் வேகமெடுக்க, ஆட்களை வேலைக்கு அமர்த்தி, அவர்களுக்கும் நிறைவான ஊதியம் கொடுக்குமளவிற்கு, தொழிலில் வளர்ச்சி அடைந்துள்ளான்.

தோழர்களே... கவுரவம் பார்க்காமல் உழைக்க தயாராக இருந்தால், வேலையில்லை என்று கவலைப்படத் தேவையில்லை; வறுமை என்று வருந்தவும் அவசியமில்லை. முயன்று ஆராய்ந்தால், வாழ்க்கையில் உயர்வடைய, ஆயிரம் தொழில்கள் இங்கே உள்ளன.

—ஆர்.செந்தில்குமார், மதுரை.

வீடு தேடி வரும் வில்லங்கம்!

-உறவினர் வீட்டு காதணி விழாவுக்கு வந்திருந்த, எனக்கு தெரிந்த பெண் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் பகிர்ந்த தகவல், அதிர்ச்சியை அளித்தது.

அவரின் எதிர் வீட்டுப் பெண் உடை மாற்றும்போது எடுத்த, வீடியோக்களை, 'வாட்ஸ்- ஆப்'பில் அனுப்பி, பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கிறான், ஒருவன்.

அந்தப் பெண் மிரளாமல், கணவரிடம் விபரத்தை கூறியுள்ளார். அந்த வீடியோ காட்சிகளை ஆராய்ந்ததில், வீடியோ எடுக்கப்பட்ட கோணம் ஒன்று போலவே இருந்துள்ளது. இதையடுத்து தேடிப் பார்த்ததில், 'டிவி'யில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதை கண்டறிந்து, உடனே போலீசில் புகார் அளித்துள்ளார்.

விசாரணையில், அண்மையில் அவர் வீட்டுக்கு, 'டிவி' பழுது பார்த்த மெக்கானிக் தான், இந்த இழிவான காரியம் செய்தது தெரிந்தது. அவனை நையப்புடைத்து, அவனிடமிருந்த பல பெண்களின் ஆபாச வீடியோக்களை அழித்து, கம்பி எண்ண வைத்துள்ளார்.

சகோதரிகளே... வீடு தேடி, இப்படியும் வில்லங்கம் வருகிறது என்ற எச்சரிக்கை உணர்வோடு, 'டிவி'யில் பழுது ஏற்பட்டால், பழுது நீக்குவதற்கென்றே இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட மெக்கானிக்குகளை அணுகுங்கள்.

மேலும், ஆபாச வீடியோவோ, படமோ எடுத்து, யார் மிரட்டினாலும், பயப்படாமல், போலீசில் புகாரளித்து, பிரச்னையிலிருந்து மீளுங்கள்!

-ஆர்.ஜெயசங்கரன், விழுப்புரம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us