Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/மகளாக மாறிய மனைவி!

மகளாக மாறிய மனைவி!

மகளாக மாறிய மனைவி!

மகளாக மாறிய மனைவி!

PUBLISHED ON : பிப் 25, 2024


Google News
Latest Tamil News
பூம்பாவை... இந்த அழகான பெயர் போல, அவளும் நல்ல அழகு. இவளது தந்தை பெயர், சிவநேசர்.

சென்னை மயிலாப்பூரில் இவர்கள் வசித்து வந்தனர். இவளுக்கும், சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர் மகன் ஞான சம்பந்தனுக்கும் திருமணம் நிச்சயமானது. சம்பந்தர் இளமையிலேயே, பார்வதியால் பாலுாட்டப்பட்ட பெருமைக்குரியவர்.

'அடியே! இவ்வுலகில் ஒரு மாமியாரை சமாளிப்பதே கஷ்டம். நீ இரண்டு மாமியார்களிடம் சிக்கிக் கொள்ளப் போகிறாய். சம்பந்தருக்கு இரண்டு தாயல்லவா! ஒருத்தி பெற்றவள். இன்னொருத்தி அவருக்கு பாலுாட்டியவள்...' என்று கேலி செய்தனர், பூம்பாவையின் தோழிகள்.

முகம் சிவந்து நாணினாள், பூம்பாவை.

'இதுபோல், ஒரு திருமணம் இவ்வூரில் நடந்திருக்கவும் கூடாது; இனி நடக்கவும் கூடாது...' என, தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தார், சிவநேசர். ஆடம்பரமான ஏற்பாடுகள் நடந்தன.

மணமகன் வந்து கொண்டிருந்தார்.

'அடியே! அவர் இன்னும் சில மணி நேரங்களில் வந்து விடுவார். நீ தான் அவருக்கு பரிமாற வேண்டும். சமையலறையில் எல்லாம் இருக்கிறதா என சோதித்துக் கொள். சரி...சரி... அவர் வரும் வேளையில் மணக்கும் மல்லிகையை தலையில் சூடிக்கொள். புத்தம் புது மலர்கள் நம் தோட்டத்தில் உள்ளன. பறித்து வரட்டுமா?' என்றனர், தோழிகள்.

தானும் வருவதாக அவர்களுடன் சென்றாள்.

பூக்களைப் பறித்ததும், சம்பந்தருக்கு உணவு பரிமாற, புத்தம் புது வாழை இலை எடுக்க, மரத்தினருகே சென்றாள். சுருக்கென்று ஏதோ காலைக் கடித்தது. அலறியபடியே சுருண்டு விழுந்தாள்.

சத்தம் கேட்டு பெற்றவரும், மற்றவர்களும் ஓடி வந்தனர். அதற்குள் அவளது உயிர் பிரிந்து விட்டது.

மயங்கி விட்டார், சிவநேசர்.

ஒருவழியாய் இறுதிச்சடங்கு முடிந்து, சாம்பல் ஒரு கலசத்தில் வைக்கப்பட்டது.

ஞானசம்பந்தர் எல்லாம் தெரிந்தவர். இருந்தாலும், தெரியாதவர் போல என்ன ஏதென்று விசாரித்தார். நடந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. கலசத்தின் அருகில் சென்று, பதிகம் பாடினார். கலசத்திலிருந்து பூம்பாவை எழுந்து வந்தாள்.

'இனியவரே! உங்களை விட்டு என்னால் தனியாக செல்ல முடியாது. அதனால் தானே மீண்டும் பிறவி எடுத்துள்ளேன். என்னை மணம் செய்து கொள்ளுங்கள்...' என்றாள்.

'மகளே...' என, அவளை அழைத்த சம்பந்தர், 'நான் உன் கணவனாக வந்தவன் தான். ஆனால், வந்த இடத்தில் உனக்கு ஒரு பிறப்பைக் கொடுத்து, தந்தையாக மாறி விட்டேன். நான் குடும்ப வாழ்க்கைக்கென பிறக்கவில்லை.

'அதுபோல், நீயும் குடும்ப வாழ்வை மறந்து விடு. சிவப்பணியே சிறந்த பணியென ஏற்றுக்கொள். நம் காலம் முடிந்ததும், கைலாயம் செல்வோம்...' என்றார். பூம்பாவையும் அதை ஏற்றாள்.

இருவரும் தெய்வப்பணி செய்து, சிவத்துடன் கலந்தனர்.

மனைவியாக இருந்து, மகளாய் மாறிய இந்த மயிலைப் பெண்மணிக்கு, கபாலீஸ்வரர் கோவில் மேற்கு கோபுரம் அருகில் சன்னிதி உள்ளது. அருகில் சம்பந்தர் இருக்கிறார்.

திருமணத்தில் விருப்பமில்லாத பெண்கள், பாதுகாப்பான தனிமை வாழ்க்கைக்காக, பூம்பாவையை வணங்கி வரம் பெறலாம்.

தி. செல்லப்பா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us