Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (17)

ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (17)

ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (17)

ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (17)

PUBLISHED ON : பிப் 25, 2024


Google News
Latest Tamil News
கடந்த, 1937ல், சிந்தாமணி மற்றும் அம்பிகாபதி என, இரண்டு மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்தார், பாகவதர்.

சிந்தாமணி படத்தில், பாகவதருடன், கதாநாயகியாக நடித்தவர், அஸ்வத்தமா. எத்தனையோ பாடல்கள் இருந்தாலும், 85 ஆண்டுகள் கடந்து, இன்றும் இரண்டு பாடல்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளன.

அது, 'ராதே உனக்கு கோபம் ஆகாதடி...' மற்றும் 'ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே...' ஆகிய பாடல்கள். சிந்தாமணி படம் வெற்றி பெற்று, பண மழை பெய்தது. தயாரிப்பாளர்கள், படத்தின் லாபத்தில், மதுரையில் ஒரு தியேட்டர் கட்டினர். அதன் பெயர், சிந்தாமணி.

முதலில், இப்படத்தில், வேறு இருவரை தான் நடிக்க வைப்பதாக இருந்தது. ஆனால், எப்படி இதில் கதாநாயகனாக பாகவதர் வந்தார் என்பதில் தான், ருசிகரமான தகவல் உள்ளது.

'பாகவதர் தான் கதாநாயகனாக நடிக்க வேண்டும். வேறு யார் நடித்தாலும், என்னால் நடிக்க முடியாது, படத்திலிருந்து விலகிக் கொள்கிறேன்...' என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார், கதாநாயகி அஸ்வத்தமா. வேறு வழியின்றி, சிந்தாமணி படத்தின் கதாநாயகன் ஆனார், பாகவதர். அற்புதமாகப் பாடக்கூடிய நடிகை, அஸ்வத்தாமா.

சிந்தாமணி படம், பாகவதருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. எனவே, அப்படத்தின் முக்கியத்துவம் பற்றி கொஞ்சம் விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

கல்கி, இப்படத்தை பற்றி ஆனந்த விகடன் இதழில், விமர்சனம் செய்தபோது, 1937ம் ஆண்டின் மிகப்பெரிய அதிசயம், சிந்தாமணி படத்தின் பாடல்கள் தான் என்று எழுதினார்.

அது மட்டுமா, '-கர்நாடக சங்கீதக்காரர்களே... சிந்தாமணி படத்திலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. நல்ல தமிழில், அருமையான குரலில், தெளிவான உச்சரிப்பில், உங்கள் பாடலின் பொருள் உணர்ந்து மகிழும்படியாகப் பாடுங்கள்...' என்று எழுதியிருந்தார், கல்கி.

சிந்தாமணி படம், பாகவதரை உச்சத்திற்குக் கொண்டு சென்றது.

மீண்டும் ஒரு சொந்தப் படம் தயாரித்தால் என்ன என்ற எண்ணம், பாகவதருக்கு தோன்றியது. அதன் விளைவு, 1939ல் வெளியான, திருநீலகண்டர் திரைப்படம்.

ஏராளமான பாடல்கள். அதிலும் குறிப்பாக, 'பவளமால் வரை...' என்ற பாடலை கேட்டால், பாகவதர் ஒரு கந்தர்வன் தான் என்று சத்தியமே செய்வோம். அப்படியோர் அதியற்புதமான பாடல். அது, 'தீன கருணாகரனே, சிதம்பரநாதா, சராசரங்கள்...' மற்றும் 'ஒருநாள் ஒரு பொழுதாகினும்...' என்று, எல்லா பாடல்களுமே பிரபலம்.

அந்த ஆண்டின் சிறந்த படமாக, திருநீலகண்டரும், சிறந்த நடிகராக, பாகவதரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த படத்தில் பாகவதருக்கு ஜோடியாக, திருநெல்வேலி பாப்பா நடித்தார்.

பாகவதரின் அடுத்த படம், அசோக்குமார், 1941ல் வெளிவந்தது.

இதில் விசேஷம் என்னவென்றால், பிரபல தெலுங்கு நடிகர்களான, சித்துார் வி.நாகையாவும், கண்ணாம்பாவும் தமிழில் அறிமுகமானது, இப்படத்தின் மூலம் தான்.

பாடல்களை முன்பே ஒலிப்பதிவு செய்து, படப்பிடிப்பின் போது, வாயசைக்கும் முறை, அசோக்குமார் படத்திலிருந்து தான், தமிழ் திரையுலகில் பழக்கத்திற்கு வந்தது. இதுவும் வசூலில் பண மழை கொட்டியது.

எல்லா பாடல்களுமே அதியற்புதம் என்றாலும், 'தியானமே எனது... பூமியில் மானிட ஜென்மம்...' போன்ற பாடல்களை இன்றைக்கு கேட்டாலும், மானசீகமாக பாகவதரை கையெடுத்து கும்பிட தோன்றும்.

'சத்வகுணபோதன்...' எனும் பாடலை, மிகவும் உருகி உருகி பாடியிருப்பார், பாகவதர். 'எப்போ வருவாரோ...' எனும் பாடலை, சங்கீத வித்வான் மதுரை மணி ஐயர் பாடியிருப்பார். இரண்டுமே ஒரே ரகம் தான். பாகவதரின், 'சத்வகுணபோதன்...' பாடலை, மிகவும் விரும்பி கேட்பாராம், மணி ஐயர்.

'பூமியில் மானிட ஜென்மம்...' எனும் பாடல், பட்டி தொட்டிகளில் எல்லாம் பாடப்பட்டு, மக்களை பரவசப்படுத்தியது.

இதன் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், இப்பாடல், பிரபல ஆங்கில நடிகை, எலிசபெத் டெய்லர் நடித்த, எலிபென்ட் வாக் என்ற ஆங்கில படத்திலும் காட்டப்பட்டதாம்.

இன்னொரு செய்தி. இப்படத்தில், புத்தர் வேடத்தில் ரஞ்சன் நடித்துள்ளார்.

— தொடரும்

சிந்தாமணியின் மாபெரும் வெற்றி, இசைத்தட்டுத் தயாரிப்பாளர்களை ஆச்சர்யம் கொள்ள வைத்தது. பாடல்களை இசைத்தட்டில் வெளியிட்டால், நிறைய சம்பாதிக்க முடியுமே என்று நினைத்து, பாகவதரை அணுகினர்.இசைத்தட்டில் பாடி வெளியிட்டால், படத்தின் வசூல் பாதிக்குமோ என்று நினைத்த பாகவதர், மறுத்து விட்டார்.ஆனால், அவர்கள், கிட்டத்தட்ட பாகவதர் குரல் போல் சாரீரம் கொண்ட சங்கீத வித்வான், துறையூர் ராஜகோபால சர்மாவை பாட வைத்து, சிந்தாமணி படப்பாடல்கள் என்று போட்டு (பாடியது யார் என்று பெயர் போடாமல்) விற்பனை செய்தனர்.ரசிகர்களுக்குத் தெரியாதா என்ன, கண்டனக் கடிதங்கள் பறந்தன. தவறுக்கு வருத்தம் தெரிவித்தனர், கிராமபோன் ரிக்கார்டு கம்பெனிக்காரர்கள்.அவர்கள், மீண்டும் பாகவதரிடம் வந்து, 'பிளேட்டுகள் வந்தாலும், படத்தின் வசூல் குறையவில்லை. ஆகவே, தயவுசெய்து நீங்கள் பாடுங்கள், இசைத்தட்டுகள் தயாரிக்கிறோம்...' என்று மிகவும் பணிவாக கேட்டுக் கொண்டனர். அதற்கிணங்க, இசைத்தட்டுகள் வெளியிடுவதற்காகப் பாடினார், பாகவதர்.இசைத்தட்டுகள் விற்பனையில் சாதனை படைத்தன.     

கார்முகிலோன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us