Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!

திண்ணை!

PUBLISHED ON : பிப் 11, 2024


Google News
Latest Tamil News
க. அருச்சுனன் எழுதிய, 'பெரியோர் வாழ்வில் சுவையானவை' நுாலிலிருந்து:

தன், 24வது வயதில் அமெரிக்காவில் உள்ள, ஒரு ஊரில், போஸ்ட் மாஸ்டராக பணியாற்றினார், ஆப்ரஹாம் லிங்கன். அந்த தபால் நிலையம், 1836ல் மூடப்பட்டது.

பல ஆண்டுகள் கழித்து தபால் துறையைச் சார்ந்த ஒரு முகவர், அந்த தபால் நிலையத்தின் முன்னாள் போஸ்ட் மாஸ்டராக இருந்த, லிங்கனிடம், கணக்குகளை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வாஷிங்டன் வந்தார். அச்சமயம், வக்கீலாக இருந்தார், ஆப்ரஹாம் லிங்கன்.

'நீங்கள், போஸ்ட் மாஸ்டராக இருந்த சமயம், மூடப்பட்ட போஸ்ட் ஆபிசில், அக்கவுன்ட்ஸ் சரிபார்த்ததில், 17 டாலர் அரசுக்கு தரவேண்டியிருக்கிறது...' என்றார், முகவர்.

உள் அறைக்கு சென்று, பெரிய, 'டிரங்க்' பெட்டியை எடுத்து வந்தார், ஆப்ரஹாம் லிங்கன். அதிலிருந்த பை ஒன்றில், பல ஆண்டுகளாக பத்திரமாக வைக்கப்பட்டிருந்த, 17 டாலர்களை எடுத்து, அவரிடம் கொடுத்தார், லிங்கன்.

அமெரிக்க உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த சமயம். அப்போது, அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த, ஆப்ரஹாம் லிங்கன், தன் ராணுவ தளபதி ஒருவர், விவரமான போர் முனைச் செய்திகளை கொடுப்பதில்லை என்று கோபப்பட்டு, அவருக்கு கடுமையான கடிதம் ஒன்று எழுதினார்.

கடிதத்தை கண்டு கோபமடைந்து, 'ஆறு பசு மாடுகளை கைப்பற்றி இருக்கிறோம். அவற்றை என்ன செய்வது என்ற உத்தரவிற்காக காத்திருக்கிறோம்...' என்று குறிப்பிட்டு, தன் எரிச்சலை காட்ட, அவ்வாறு தந்தி கொடுத்தார், தளபதி.

கோபப்படவில்லை, ஆப்ரஹாம் லிங்கன்.

'ஆறு பசு மாடுகளை பிடித்த உங்கள் தீரச்செயலை பாராட்டுகிறேன். அவற்றை என்ன செய்வது என கேட்டுள்ளீர்கள். தவறாது பால் கறக்க ஏற்பாடு செய்யுங்கள்...' என, பதில் தந்தி கொடுத்தார்.

தந்தியைக் கண்ட தளபதியின் நிலையை சொல்ல வேண்டியதில்லை. கோபத்திலும் நகைச்சுவை பட பேசியவர், ஆப்ரஹாம்.

         

ஒருமுறை, முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, சென்னைக்கு வந்திருந்தார், நேரு.

கவர்னர் மாளிகையில் ஒருநாள் இரவு தங்கி, மறுநாள் புதுடில்லி புறப்படுவதாக ஏற்பாடு. நிகழ்ச்சிகளை எல்லாம் முடித்து, கவர்னர் மாளிகையில் தங்கியிருந்தார்.

அன்று இரவு படிக்க, புத்தகம் தேவைப்பட்டது. அந்த சமயத்தில், உலக அளவில் முக்கியமான பொருளாதாரம் சம்பந்தமான புத்தகம் வெளியான விஷயம், நேருவுக்கு தெரிய வந்தது.

'அந்த புத்தகம் மெட்ராசுக்கு வந்துருக்குமா... அது இங்கே கிடைக்குமா?' என, விசாரித்தார்.

உடனே, அங்கிருந்தவர்கள் எல்லாம், ரொம்ப பரபரப்பாக செயல்பட ஆரம்பித்தனர்.

'அந்தப் புத்தகம் உங்ககிட்ட இருக்கா...' என, முக்கியமான இடங்களில் எல்லாம் விசாரித்தனர்.

சென்னையில உள்ள கன்னிமாரா நுால் நிலையத்துக்கு எப்படியும் அந்த புத்தகம் வந்திருக்கும் என்ற நம்பிக்கையில் அங்கேயும் விசாரித்தனர்.

அந்த புத்தகம், ரெண்டு நாளைக்கு முன்பு தான் அங்கே வந்த விஷயம் தெரிந்தது.

அந்த புத்தகத்தை வேறு யாரும் படிக்க எடுத்து போகாமல் இருக்க வேண்டுமே என்று எண்ணினர்.

மேலும், 'இப்படி ஒரு புத்தகம் வெளி வந்த விஷயமே, நேரு சொல்லித்தான் நமக்கே தெரியும். உலகப் பொருளாதாரம் சம்பந்தமான அந்த புத்தகத்தை இந்த நேரத்தில் அவ்வளவு ஆர்வமாக யாரும் எடுத்து போயிருக்க மாட்டார்கள்...' என்ற தைரியத்தில், அந்த நுால் நிலையத்துக்கு சென்றனர்.

ஆனால், அந்த புத்தகத்தை யாரோ எடுத்து போயிருந்தனர். உடனே, ரிஜிஸ்டரில் புத்தகத்தை எடுத்து சென்றது யார் என தேடினர். அதில், சி.என்.அண்ணாதுரை என, கையெழுத்திட பட்டிருந்தது.

நேரு படிக்க விரும்பிய புத்தகத்தை, அதே நேரம் படிக்க விரும்பிய இன்னொரு தலைவர் அண்ணாதுரை.

படிப்பதில் அவருக்கிருந்த ஆர்வத்தை தெரிந்து கொள்ள, இதுபோல் நிறைய சம்பவங்கள் இருக்கின்றன.

- நடுத்தெரு நாராயணன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us