Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

PUBLISHED ON : பிப் 11, 2024


Google News
Latest Tamil News
அன்புள்ள அம்மா -

நான், 30 வயது பெண். கணவர் வயது: 36. தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். வங்கியில் பணிபுரிகிறார், கணவர். எங்களுக்கு, 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

கணவரின் பெற்றோர், கிராமத்தில் உள்ளனர். அவர்களுக்கு இவர் ஒரே மகன். விவசாய குடும்பத்தை சேர்ந்த கணவர், கஷ்டப்பட்டு படித்ததால், இந்த வேலைக்கு வந்துள்ளார்.

எனக்கு ஒரு தம்பி. தம்பியுடன் இதே ஊரில் வசிக்கின்றனர், என் பெற்றோர்.

குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக, தற்சமயம், அம்மா, என்னுடன் தங்கியுள்ளார்.

மிகவும் பிடிவாத குணமுள்ளவர், கணவர்; முன்கோபியும் கூட. சின்ன சின்ன விஷயத்திற்கு கூட, 'டென்ஷன்' ஆவார். கொஞ்சம் கூட, அனுசரித்து போக மாட்டார். இது, என் அம்மாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

மேலும், குழந்தையிடமும் இந்த குணத்தை காட்டுவதால், பயந்து நடுங்குகிறான். அவரை கண்டாலே ஓடி ஒளிந்து கொள்கிறான். நானோ, அம்மாவோ இருந்தால், எங்களிடம் வந்து அடைக்கலமாகி விடுவான். இதே நிலை நீடித்தால், அவனது மனநிலை பாதிக்குமோ என்று பயப்படுகிறேன்.

கொஞ்ச நாட்களுக்கு தன்னுடன் வந்து தங்கும்படியும், அங்கிருந்தே அலுவலகம் செல்லலாம் என்கிறார், அம்மா.

'வேலையை விட்டு விட்டு, குழந்தையை பார்த்துக் கொள்கிறேன்...' என்றேன்.

'பொருளாதார நிலை சற்று முன்னேறட்டும், அதன்பின் பார்க்கலாம்...' என்கிறார், கணவர்.

அவரது பெற்றோரை வர சொன்னாலும், 'கிராமத்தை விட்டு வர விரும்பவில்லை. நீங்கள், கிராமத்துக்கு அருகில் உள்ள நகரத்துக்கு பணி மாற்றம் செய்து வாருங்கள்...' என்கின்றனர்.

கணவரிடம் எவ்வளவோ எடுத்துக் கூறியும், ஓரிரு நாள் இயல்பாக இருப்பார், மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறி விடும்.

இந்த பிரச்னையை எப்படி கையாள்வது என்று, ஆலோசனை கூறுங்கள் அம்மா.

— இப்படிக்கு,

உங்கள் மகள்.



அன்பு மகளுக்கு -

பிரச்னையும், தீர்வும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள். குழந்தையுடன் அம்மா வீட்டில் போய் தங்குவதோ, மாமனார், மாமியாரிடம் குழந்தை வளர்வதோ, கிராமத்துக்கு அருகிலான கணவரின் பணி மாற்றமோ, தீர்வை பரிசளிக்காது.

கணவரின் நடத்தை மாற்றத்தில் தான் தீர்வு இருக்கிறது.

உன் கடிதத்தையும், அதற்கான என் பதிலையும், கணவரிடம் படிக்கக் கொடு.

அன்பு மகனே! உன்னை பற்றி மனைவி புகார் கடிதம் எழுதியிருப்பதாக நினைத்து, அவளிடம் கோபப்பட்டு விடாதே. 20 சதவீதத்திலிருந்து 60 சதவீத மக்களின் கோபம் மரபியல் ரீதியானது.

நீ உடனடியாக முழு உடல் பரிசோதனை செய்து கொள். நீ ஊளைச்சதையுடன் இருந்தால் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, யோகா, தியானம் மூலம் எடையைக் குறை. குடிப்பழக்கமும், புகைபிடிக்கும் பழக்கமும் இருந்தால் படிப்படியாக குறைத்து, நிறுத்து.

உணவில் உப்பு, இனிப்பு மற்றும் எண்ணெயை பாதியாக குறை.

நீரிழிவு நோய், நீண்டகால வலி, டெஸ்ட்டோ ஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைவு, துாக்கமின்மை இருந்தால், தகுந்த மருத்துவம் மேற்கொள்.

பொருளாதார பிரச்னைகளை, குடும்ப மற்றும் நட்பு முறையிலான உறவு சிக்கல்களை, பணியிட பிரச்னைகளை வீட்டுக்குள் கொண்டு வராதே. பிரச்னைகளை வீட்டுக்கு வெளியே சமாளி.

மகனே! கோபமாய் வார்த்தைகளை துப்புவதற்கு முன் யோசி. சுயதணிக்கை மேற்கொள்.

நகைச்சுவை உணர்வை கையில் எடு. யாரையும் பழி சுமத்தாமல் பேசு. ஆழமாய் மூச்சுவிட்டு, உன்னுடைய இதயத்துடிப்பை நீ கட்டுப்படுத்து. பிறர் குற்றங்களை மன்னிக்க கற்றுக் கொள். நல்ல சங்கீதத்தை கேட்க பழகு.

கோபப்படும் சூழ்நிலையை தவிர். கோபமூட்டும் பிரச்னைகளுக்கான தீர்வை தீர்க்கமாக யோசி. எந்த விஷயம் கோபமூட்டுகிறது என, கண்டுபிடித்து விலகு. யார் மீதாவது கோபம் வந்தால், அவர்கள் செய்த நல்லவைகளை நினைத்துப் பார்.

இதுவரை எத்தனை முறை கோபப்பட்டிருப்பாய்? அதில், எத்தனை லாபங்கள், நஷ்டங்கள் என கணக்கெடு. நஷ்ட கணக்கு தான், 100 சதவீதம் இருக்கும். உன் கோபத்தால் மகனின் எதிர்காலம் நஷ்டப்பட வேண்டுமா என, யோசி.

கோபமில்லாத பெருவாழ்வு வாழ் மகனே!

கோபம், மகனுக்கும் தொற்றி விடாமல் பார்த்துக் கொள். வாழ்த்துகள்!

— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us