Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

PUBLISHED ON : ஜன 28, 2024


Google News
Latest Tamil News
ரகசிய கேமரா எச்சரிக்கை!

தெரிந்த இளைஞர் ஒருவருக்கு, சமீபத்தில் திருமணம் நடந்தது. வீட்டில், மாமியார் மருமகளுக்குள், சிறு பூசல், பெரிய சண்டையாக மாறியது.

'நீ, வடநாட்டுக்காரங்ககிட்ட கை நீட்டுனவ தானே... கை தொட்ட அவன், உன்னை வேறு எங்கெல்லாம் தொட்டானோ... நீ, மெகந்தி போட்டது ஊருக்கே தெரியுது... அவன், உன் உடம்பை, தப்பு தப்பாய் விமர்சனம் செய்ததையும், சமூக வலைத்தளத்தில் அவன் போட்டிருப்பதை படித்தோம்.

'அந்த வீடியோவை, திருமணத்திற்கு முன் பார்த்திருந்தால், உன்னை திருமணம் செய்திருக்க மாட்டோம். இப்ப தான், என் சொந்தக்கார பொண்ணு அதை கொண்டு வந்து காண்பித்தாள்...' என, மெகந்தி போட்டதை, சண்டையில், தவறாக சித்தரித்து பேசினார், மாமியார்.

இதை, சற்றும் எதிர்பாராமல் அதிர்ந்து போனாள், அப்பெண். 'நடைபாதை ஓரம் போடப்பட்ட, 'டென்ட்'டில் அமர்ந்து, மெகந்தி போடும் வடநாட்டுக்கார நபர்கள், ரகசிய கேமரா வைத்து, என்னை படம் எடுத்து, 'யு - டியூப்'பில் பதிவு செய்தது, எனக்கு தெரியாது. வடநாட்டுக்காரர்களிடம் மெகந்தி போட்டதை, தவறாக பேசுகின்றனர்...' என்று, பக்கத்து வீட்டு பெண்ணிடம் கூறி, அழுதிருக்கிறார், அப்பெண்.

அதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். மெகந்தி போட்டதை மானக்கேடாக பேசுவது, அறிவிலித்தனம். இரண்டாவது, அனுமதி இல்லாமல் வீடியோ எடுத்து, அதை பொது வெளியில் பதிவிட்டோரை, தண்டிக்க வேண்டும். இப்படிப்பட்ட ஜென்மங்கள் மத்தியில், வாழ்வது கடினம்.

முடிந்தால், மெகந்தி போடுபவர்களை, வீட்டிற்கு வரவழைத்து, போட்டுக் கொள்வது நல்லது. இல்லையேல், பாதுகாப்பு எச்சரிக்கையோடு செயல்படுவது புத்திசாலித்தனம்!

- ப.சிதம்பரமணி, கோவை.

மெட்ரோ ரயில் பயணியரே... உஷார்!

தினமும், மெட்ரோ ரயிலில் பயணம் செய்து, அலுவலகம் செல்லும் வழக்கம் கொண்டவள், என் தோழி. மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய வேண்டுமானால், நம்மை முழுவதுமாக பரிசோதனை செய்த பின்னரே அனுமதிப்பர்.

அதன்படி ஒருநாள், பரிசோதனை முடிந்து தோழி, தன் 'ஹேண்ட் பேக்' எடுக்க முற்படும் போது, உணவு பை மட்டுமே இருந்துள்ளது. கூட்ட நெரிசலில், 'ஹேண்ட் பேகை' யாரோ எடுத்து சென்று விட்டார் என்று பதட்டமடைந்து, அங்கிருந்த, மெட்ரோ ரயில் ஊழியரிடம் சொல்லியிருக்கிறார். அங்கு, அனாதையாக ஒரு, 'ஹேண்ட் பேக்' இருக்க, 'அதுதானா?' என்று கேட்டுள்ளார்.

'இல்லை...' என்றதும், பையினுள் அந்த ஊழியர் ஆராய, நகை அடகு வைத்த ரசீது ஒன்று இருந்திருக்கிறது. அதிலிருந்த மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டு விபரம் கூற, எதிர்முனையில் பேசிய பெண், நிறம் ஒன்றாக இருந்ததால், அவசரத்தில் தவறுதலாக பையை மாற்றி எடுத்து வந்ததாக கூறியுள்ளார்.

அப்பெண்ணிடம், தன்னுடைய அலுவலக முகவரியை கொடுத்து, எடுத்து வந்து தருமாறும், மெட்ரோ ரயில் ஊழியரிடம் அவரது பையை பெற்றுக் கொள்ளும்படியும் கூறியிருக்கிறாள், தோழி. அன்று மதியமே, தோழியின், 'ஹேண்ட் பேக்' அவளிடம் வந்து சேர்ந்தது.

மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோர், தங்களது முகவரி மற்றும் மொபைல் எண்ணை ஒரு சீட்டில் எழுதி, பையில் வைத்திருப்பது நல்லது. பொருள் காணாமல் போனாலோ அல்லது ஏதாவது அசம்பாவிதம் நடந்தாலோ, மற்றவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், ரயில் நிலையத்திலேயே ஒரு நிமிடம் நின்று, தங்களது பொருள்தானா என்று சோதித்து எடுத்து செல்வது, டென்ஷனையும், கால விரயத்தையும் குறைக்கும்.

- ஆர்.கோகிலா, சென்னை.

குடியிருப்புவாசிகளின் நடைமுறை!

என்னுடன் பணிபுரியும் நண்பரை சந்திக்க, அவரின் குடியிருப்புக்கு சென்றிருந்தேன். இருநுாறுக்கும் மேற்பட்ட குடித்தனக்காரர்கள் வசிக்கும் குடியிருப்பு அது. அவருடன் பேசிக் கொண்டிருந்த போது, அவர் கூறிய தகவல், என்னை நெகிழ வைத்தது.

அக்குடியிருப்பில் வசிப்பவர்களில், பெரும்பாலான கணவன் - மனைவி இருவரும் பணிக்கு செல்பவர்களாக இருப்பதால், வீட்டு வேலைகளுக்கு, ஆட்களை நியமித்துள்ளனர். குடியிருப்பு நிர்வாகிகளின் அறிவுறுத்தலின்படி, குறிப்பிட்ட நிபந்தனையை விதித்து, அதற்கு ஒப்புக் கொள்கிறவர்களையே, பணியாட்களாக நியமித்து கொள்கின்றனர்.

அதாவது, பணியாளர்களுக்கு, மாதா மாதம் நிறைவான ஊதியம் வழங்குவதோடு, அதிலிருந்து சிறு தொகையை பிடித்தம் செய்து, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்புத் தொகையாக வங்கியிலோ, அஞ்சலகத்திலோ செலுத்தி, அந்த பத்திரங்களை வழங்கி விடுகின்றனர்.

பணியாளர்களின் குடும்பத்தில், புகை மற்றும் போதை பழக்கத்திற்கு ஆளானவர்களால், இவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் முழுதும் விரயமாவதை தடுக்கவும், எதிர்கால வாழ்க்கைக்கு சேமிப்பாக கிடைக்கவும், இதுபோன்ற நிபந்தனைகளை விதித்து, வேலை கொடுப்பதை, வழக்கமாக வைத்துள்ளனர். மற்ற குடியிருப்பிலும், இந்த பயனுள்ள நடைமுறையை பின்பற்றலாமே!

செ.விஜயன், சென்னை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us