Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை - வெள்ளம் வரும் முன்...

கவிதைச்சோலை - வெள்ளம் வரும் முன்...

கவிதைச்சோலை - வெள்ளம் வரும் முன்...

கவிதைச்சோலை - வெள்ளம் வரும் முன்...

PUBLISHED ON : ஜன 28, 2024


Google News
Latest Tamil News
* மறக்க வேண்டியவற்றை

நினைவில் வைத்து வாடுகிறோம்

விலக்க வேண்டியவற்றை

சேர்த்துக் கொண்டு அவதியுறுகிறோம்!

* தொலைக்க வேண்டியவற்றை

பற்றிக் கொண்டு கிடக்கிறோம்

ஒழிக்க வேண்டியவற்றை

வளர்த்துக் கொண்டு இருக்கிறோம்!

* புறக்கணிக்க வேண்டியவற்றை

ஆதரித்து தவிக்கிறோம்

அழிக்க வேண்டியவற்றை

உரமிட்டு, நீரூற்றி வளர்க்கிறோம்!

* தவிர்க்க வேண்டியவற்றை

பின்பற்றி வருந்துகிறோம்

களையெடுக்க வேண்டியவற்றை

விட்டு வைத்து தொடர்கிறோம்!

* எரிக்க வேண்டியவற்றை

பாதுகாத்து வைக்கிறோம்

புதைக்க வேண்டியவற்றை

பின் தொடர செய்கிறோம்!

* கழிக்க வேண்டியவற்றை

கூட்டிக்கொண்டு செல்கிறோம்

ஒதுக்க வேண்டியவற்றை

பிணைத்தபடி அழுகிறோம்!

* முன்னெச்சரிக்கை உணர்வை

முற்றிலும் தொலைத்தோம்

விழிப்புணர்வு திறனை

பொறுப்பின்றி தவற விட்டோம்!

* வெள்ளம் வரும் முன் அணையிடும்

கடமையிலிருந்து தவறுகிறோம்

ஆயுள் முழுவதற்குள் வாழ்ந்திடும்

வாய்ப்பை கை நழுவ விடுகிறோம்!



- ஆர். ஜெயசங்கரன்,

வானூர், விழுப்புரம்






      Our Apps Available On




      Dinamalar

      Follow us