Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!

திண்ணை!

PUBLISHED ON : மார் 23, 2025


Google News
Latest Tamil News
ஒருசமயம் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர், ஈ.வெ.ரா.,வும், நாவலர் நெடுஞ்செழியனும்.

ஒரு ரயில் நிலையத்தில் நின்றது, ரயில்.

இரண்டணாவை (ஒரு அணா, ஆறு நயா பைசா மதிப்பு.) எடுத்து, நெடுஞ்செழியனிடம் கொடுத்து, இரண்டு சாத்துக்குடி பழம் வாங்கி வரும் படி கூறினார், ஈ.வெ.ரா.,

கீழே இறங்கி பழக்கடைக்கு சென்று, 'ஒரு சாத்துக்குடி என்ன விலை?' என்றார், நெடுஞ்செழியன்.

'ஒரு பழம் மூன்றணா. இரண்டு பழம் ஆறணா. மூன்று பழமாக எடுத்துக் கொண்டால், எட்டணா...' என்றார், கடைக்காரர்.

சற்று யோசித்து, 'எட்டணாவுக்கு மூன்று பழம் கிடைக்கிறது. இரண்டு பழம் வாங்குவது, நஷ்டம் தான். ஆகவே, மூன்று பழமே வாங்கிக் கொள்ளலாம். நம் திறமையைக் கண்டு, ஈ.வெ.ரா.,வும் பாராட்டுவார்...' என முடிவு செய்து, பழங்களை வாங்கிக் கொண்டார். அவரிடம் கொடுத்து, அவற்றை வாங்கிய விபரத்தை கூறினார், நெடுஞ்செழியன்.

'என்ன காரியம் செய்தாய்? எனக்கு வேண்டியது இரண்டு பழம் தான். அவற்றின் விலை, ஆறணா. நீ, மூன்று பழங்களை வாங்கி எனக்கு, இரண்டணா நஷ்டத்தை உண்டாக்கி விட்டாயே...' என்றார், கோபத்துடன், ஈ.வெ.ரா.,

பாராட்டுக்கு பதில், திட்டு கிடைக்கிறதே என, அதிர்ந்து போனார், நெடுஞ்செழியன்.

ஒருமுறை, ஈ.வெ.ரா.வை சந்தித்து, 'ஐயா, பொது நலம் என்றால் என்ன?' என்றார், ஒருவர்.

அதற்கு, 'மழை பெய்கிறதே... அது பொதுநலம்...' என்றார், ஈ.வெ.ரா.,

'சுயநலம் என்றால் என்ன?' என்று மீண்டும் கேட்டார், அந்த நபர்.

அதற்கு, 'மழை பெய்யும் போது நீ, குடை பிடிக்கிறாயே. அது சுயநலம்...' என்றார், ஈ.வெ.ரா.,

*****

கடந்த 1897ல், அமெரிக்காவிலிருந்து சுவாமி விவேகானந்தர், தாய் நாட்டுக்கு திரும்பியதை அறிந்த இசை மேதை கெம்பே கவுடர், கோல்கட்டா சென்று சுவாமியை தரிசித்தார்.

கவுடரை பாடச் சொல்லி கேட்டு பரவசமடைந்தார், விவேகானந்தர். அவருக்கு வெகுமதி அளிக்க எதுவுமில்லை. எனவே, தான் அணிந்திருந்த மேல் அங்கியான காவித் துணியை வழங்கினார்.

சுவாமிஜியை சாஷ்டாங்கமாக வணங்கிய கவுடர், 'குருவாக இருந்து எனக்கு சந்நியாச தீட்சை அளிக்க வேண்டும்...' என்று வேண்டினார்.

'மகனே, இக்காவித் துணியே உன்னைப் பாதுகாக்கும்; உனக்கு சந்நியாசம் வேண்டாம். இசையின் மூலம் இறைவனையே இன்புற வைக்கும் திறமை, உன்னிடம் இருக்க, சந்நியாசம் எதற்கு?' என, அவருக்கு ஆசி கூறி, அனுப்பினார், விவேகானந்தர்.



ஒருநாள், இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலை பேட்டி எடுக்க, அவரது அறைக்குள் நுழைந்தார், பத்திரிகை நிருபர் ஒருவர்.

நிருபரை வரவேற்று, 'நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. நீங்கள் வருவதற்கு முன், ஒன்பது நிருபர்கள் என்னை சந்திக்க முயன்றனர். நான் மறுத்துவிட்டேன்...' என்றார், சர்ச்சில்.

உடனே, 'அது எனக்கும் தெரியும், சார். காரணம் ஒன்பது முறையும் முயன்றவன் நான் தானே...' என்றார், அந்த நிருபர்.

இதைக்கேட்டு அதிர்ந்து போனார், சர்ச்சில்.

*****

நடுத்தெரு நாராயணன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us