PUBLISHED ON : மார் 23, 2025

இவர்களுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது... இயலாமையில் கண்கள் கரித்தன, நர்மதாவுக்கு. 'உஷ்... கண்ணுல நீர் விட்டு, உன் பலவீனத்தை காண்பிக்காதே...' என, மனம் அவளை அதட்டியது.
'ஆமா நான் ஏன் அழணும்...' தவிப்பை அடக்கி கொண்டாள்.
''என்ன, எப்ப பார்த்தாலும் பெரிய வேலை, கெரியர்ன்னு சொல்லிக்கிட்டு. பொம்பளைங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னா, குடும்பம், புருஷன் தான் முக்கியம். மத்ததெல்லாம் இரண்டாம் பட்சம் தான்,'' என, சமையல் கட்டில் டீ போட்டுக் கொண்டிருக்கும் நர்மதாவின் காதில் விழட்டும் என்றே சத்தமாக பேசினார், மாமியார்.
'உன் விருப்பம் தான், எனக்கு முக்கியம்...' என, விழுந்து விழுந்து காதலித்து, திருமணத்திற்கு சம்மதம் வாங்க பெற்றோரிடம், இரண்டு ஆண்டுக்கு மேல் மல்லுக்கட்டி நின்று, வெற்றிகரமாக வாழ்க்கையில் இணைந்தவர்கள், நர்மதாவும் சுதாகரும்.
மூன்று ஆண்டுகளாக வீட்டிலேயே வேலை செய்யலாம் என்ற நிலை மாறி, சுதாகரின் வேலை தற்போது, மாதத்தில் நான்கு நாட்கள், புனேவில் உள்ள ஆபீசுக்கு போக வேண்டிய கட்டாயத்திற்கு வந்துள்ளது.
அதனால் புனேவிற்கு தன்னுடன், நர்மதாவும் உடனே வர வேண்டும் என, எதிர்பார்த்தான், சுதாகர்.
'இப்போது தான் என் ஆபீஸில் என்னை அங்கீகரித்து, 'பிரமோஷன்' தருவதாக உள்ளனர். எனவே, இரண்டு, மூன்று மாதங்கள் பொறுத்து, அது விபரம் தெரிந்த பின் யோசிக்கலாம்...' என்றாள், நர்மதா.
'யோசிக்கலாம்ன்னா, நீ, புனே வரப் போறதில்லையா...' என்றான், சுதாகர்.
'இல்ல, சுதா. மாசத்துல, நான்கு நாட்கள் தானே. நீ மட்டும் ரெண்டு, மூணு மாசத்துக்கு ஹோட்டல்ல தங்கி, ஆபீஸ் போயிட்டு வா...' என்ற, நர்மதாவை இடைமறித்து, 'என்ன விளையாடுறியா... ஹோட்டல் சார்ஜ், பிளைட் சார்ஜ் எல்லாம் எவன் தருவான். அடுத்தடுத்த மாதத்தில் வாரத்துல ரெண்டு நாட்கள் வரச் சொல்லிடுவாங்க. அப்ப என்ன செய்யறது...' என்றான், சுதாகர்.
கடந்த, 15 நாட்களாக, வீட்டில் இந்த பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கிறது.
தன் பெற்றோரிடம் இதுபற்றி, நர்மதா கூறியபோது, 'மாப்பிள்ளை சொல்றபடி செய்யேன்மா. எப்படியும் குழந்தை குட்டின்னு வந்தா, 'பிரேக்' எடுக்கத் தானே வேணும்...' என்றனர், இருவரும்.
நர்மதாவின் தங்கை, ஷாலினியின் திருமண வேலைகளில் பிசியாக இருப்பதால், அவர்களால் இதுபற்றி அதிகம் யோசிக்க முடியவில்லையோ என, தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாள், நர்மதா.
கல்லுாரி நாட்களில், 'பெண்கள் நன்கு படித்து, நிறைய சாதிக்க வேண்டும். ஒரு லட்சியத்தோடு வாழ வேண்டும். பெண்கள் நினைத்தால், சிறப்பான விஷயங்களை இந்த உலகத்துக்கு தர முடியும்...' என, வகுப்புக்கு வரும் அத்தனை ஆசிரியர்களும் கூறுவர்.
ஆனால், யதார்த்த வாழ்க்கையில் அடிப்படையான சில விஷயங்களுக்கு கூட, போராட வேண்டியதாய் இருக்கிறது. நர்மதாவுக்கு மனம் வலித்தது. இங்கு, தனிமனித சுதந்திரம் பெண்களுக்கு மறுக்கப்பட்ட ஒன்று தான் போல என, நினைத்து கொண்டாள்.
அப்போது, ''கை நிறைய சம்பாதிக்கிற புருஷன், அன்பா பார்த்துக்கிறான். அருமையான குடும்பம். வாழ்க்கையில நல்லபடியா, 'செட்டில்' ஆகியாச்சு. இன்னும் எனக்கு சுதந்திரம் இல்லைன்னா, என்ன அர்த்தம்.
''இதுக்குத்தான் ரொம்ப படிச்ச பொண்ணு வேண்டாம்ன்னே. கேட்டானா, எல்லாம் படிச்ச திமிரு. சுதா, நீ, அவளுக்கு ரொம்ப இடம் கொடுக்காத. அப்புறம் கையில பிடிக்க முடியாது. நீ தாழ்ந்து போற மாதிரி ஆகிடும்,'' என, அவ்வப்போது துாபம் போட்டார், மாமியார்.
இந்த சூழலை எப்படி சமாளித்து, தன் வேலையை தக்க வைப்பது என, புரியவில்லை, நர்மதாவுக்கு.
அன்று, நர்மதாவின் பெற்றோர், அவள் தங்கையின் திருமணத்திற்கு பத்திரிகை வைக்க வீட்டுக்கு வந்தனர். அப்போது, சுதாகர் அவர்களிடம் அதிகமாக பேசவில்லை.
ஆனால், மாமியாரும், மாமனாரும், 'இது, நம்ம வீட்டு கல்யாணம். நாங்க முன்ன நின்னு நடத்துறோம். நர்மதாவையும், சுதாகரையும் முன்னாடியே வேணும்னாலும் அனுப்பி வைக்கிறோம்...' என, தேனொழுக பேசினர்.
நர்மதாவின் பெற்றோர் கிளம்பிச் சென்ற சற்று நேரத்தில், ''நர்மதா, என் ப்ரெண்ட் வீடு பார்த்து தரேன்னு சொல்லிட்டான். அம்மாவும் நல்ல நாள் பார்த்து குறிச்சு வச்சுட்டாங்க. நான் பிளைட் டிக்கெட் எல்லாம் கூட, 'புக்' பண்ணிட்டேன். உன் தங்கை, ஷாலினி கல்யாணம் முடிஞ்சதும் மறுநாளே நாம கிளம்பறோம்,'' என்றான் கண்டிப்புடன், சுதாகர்.
நர்மதாவுக்கு ஆத்திரம் தலைக்கேறியது.
''சுதா, நான் சொன்னது உனக்கு புரியலையா. இல்ல புரியாத மாதிரி நடிக்கிறியா,'' என, சற்று உரக்கவே கேட்டாள், நர்மதா.
''ஏய் என்ன குரல் உயருது,'' என உறுமினான், சுதாகர்.
''பின்ன எப்படி சொல்றது. பதினைந்து நாளா சொல்றேன். ஒரு மூணு மாசம் காத்திருக்கும் படி. அதை காதுலேயே வாங்காம வீடு பாத்தாச்சு, பிளைட் டிக்கெட் வாங்கியாச்சுன்னா, என்ன அர்த்தம்,'' என்றாள்.
''வேலையை, 'ரிசைன்' பண்ணிட்டு, என்னோட புனே வரேன்னு அர்த்தம்,'' என்றான் அதிகாரமாக.
''வேலையை, 'ரிசைன்' செய்யறதா, வாய்ப்பே இல்லை. நீ, புனே போய்க்கோ. நான், என் அம்மா வீட்டில் இருந்து ஆபீஸ் போய்க்கிறேன்,'' என்றாள்.
''இதுதான், இந்த பிடிவாதம் தான் கடுப்பேத்துது. ஆபீஸ் வேலைன்னு அலையறதுனால தான், நீ இன்னும் உண்டாகலேன்னு அம்மா கூட சொன்னாங்க. நீ, ஒரு பிரேக் எடுத்து குழந்தையை பெத்துட்டு, அப்புறமா வேலைக்கு போய்க்கலாம்,'' என்றான்.
''இங்க பாரு, சுதா. குழந்தை பெத்துக்கறத பத்தி, நாம ரெண்டு பேரும் முடிவு செய்தால் போதும். மத்தவங்க யாரும் இதுல மூக்க நுழைக்க வேண்டாம்,'' என்ற, நர்மதாவை கோபத்துடன் பார்த்தான்.
''மத்தவங்களா, யூ ப்ளடி,'' என, கையை உயர்த்தி அவளை அறைய வந்தான், சுதாகர்.
ஒரு வினாடி அவனை உறுத்துப் பார்த்தவள், ''இத நான் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்,'' என்றாள், மிதமிஞ்சிய கோபத்துடன், நர்மதா.
''இதுக்கு தான் தல பாடா அடிச்சுக்கிட்டேன். அதிகம் படிச்ச பொண்ணே வேண்டாம்ன்னு, கேட்டானா இவன், இப்ப அனுபவிக்கிறான்,'' என்றபடியே, மாமியார், அவர்கள் அறையில் இருந்து வெளிவரவும், தன் அறைக்குள் நுழைந்து, கதவை அறைந்து சாத்தினாள், நர்மதா.
''பாருடா என் முகத்தில் அடிக்கிற மாதிரி கதவை சாத்தறா,'' என்றார், மாமியார்.
எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல், சுதாகருக்கு வெறுப்பானது. தலையை பிடித்தபடி, சோபாவில் அமர்ந்தான்.
''தம்பி தலை வலிக்குதா காப்பி போட்டு தரவா,'' என்றார், அம்மா.
''அம்மா ப்ளீஸ் கொஞ்ச நேரம் அமைதியாய் இரும்மா. இப்ப எதுவும் பேச வேண்டாம்,'' என்றான்.
சற்று நேரத்தில் ஒரு பெட்டியுடன் அறையிலிருந்து வெளிவந்த நர்மதா, ''என் உணர்வுகளை மதிக்காத வீட்டுல, நான் இருக்க விரும்பல. நான், எங்க வீட்டுக்கு போறேன்,'' என்றாள், பொங்கி வரும் கண்ணீரை அடக்கியபடி.
''இப்ப என்ன நடந்துடுச்சுன்னு, பொட்டியை துாக்கிட்டு கிளம்பிட்ட,'' என்றார், மாமியார்.
''அம்மா நீ பேசாம இரு. அவ போனா போகட்டும்,'' என்றவன், நர்மதாவிடம், ''போடி போ. நான் உன்னை அங்கு வந்து கூப்பிடுவேன்னு மட்டும் கனவுல கூட நினைக்காத,'' என்றான், சுதாகர்.
திருமணத்துக்கு இன்னும் நான்கு நாட்களே இருப்பதால், நெருங்கிய உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டியது. அனைவரும், ஷாலினியோடு சேர்த்து, நர்மதாவையும் கிண்டல் செய்தனர்.
''ஏய், நர்மதா, நீ விசேஷ செய்தியை சீக்கிரம் சொல்லுடி. இல்லேன்னா, ஷாலினி முந்திக்குவா,'' என்றாள், அத்தை மகள்.
''அவ பிளானிங்ல இருக்கிறா போல,'' என்றாள், சித்தி மகள்.
''அதெல்லாம் இல்லப்பா,'' எனக் கூறி அங்கிருந்து நகர்ந்த, நர்மதாவுக்கு திருமண நிகழ்ச்சிகள் எதிலும் முழு மனதோடு கலந்து கொள்ள முடியவில்லை.
கணவனுடன் சண்டை போட்டு, பிறந்த வீட்டுக்கு வந்தது, முள் போல் உறுத்தியது. இதுபற்றி அவள் வீட்டில் யாரிடமும் கூறவில்லை. எத்தனை முயற்சி செய்து நர்மதா மறைத்தாலும், அவ்வப்போது அவள் முகத்தில் ஓடிய கவலை ரேகைகள், உறவினர் மத்தியில் பேசும் பொருளானது. பெண் அழைப்புக்கு முதல் நாள் வரை, சுதாகர் மற்றும் அவன் வீட்டார் யாரும் வரவில்லை.
'என்ன, பெரிய சம்பந்தி இன்னும் வரக்காணோம். அவங்க உறவிலே ஏதாவது விசேஷமா...' என, நர்மதாவின் பெற்றோரிடமும், 'என்ன நர்மதா, மாப்பிள்ளைக்கு வேலை அதிகமோ...' என, ஜாடை மாடையாக கேட்கத் துவங்கினர், உறவினர்கள்.
''அண்ணி, நர்மதா முகமே சரியில்ல, எதுவும் பிரச்னையா... அவளை விசாரிச்சீங்களா,'' என, கேட்டே விட்டாள், நர்மதாவின் அத்தை.
''என்ன ஆச்சடி. உங்க வீட்டு ஆளுங்களுக்கு, இன்னும் வராம இருக்காங்க,'' என, மகளிடம் எரிந்து விழுந்தாள், நர்மதாவின் அம்மா.
''நாளைக்கு காலையில கண்டிப்பா வந்துடுவாங்கம்மா. இவருக்கு ஆபீஸ்ல வேலை இருந்திருக்கும். சேர்ந்தே வந்துக்கலாம்ன்னு இருப்பாங்கம்மா,'' என, வாயில் வந்ததைக் கூறினாள், நர்மதா.
'நாளைக்கும் அவங்க வரலைன்னா என்ன சொல்லி எல்லாரையும் சமாளிப்பது...' என, மனதில் எழுந்த கேள்வி, பெரிய சவாலாக தோன்றியது, நர்மதாவுக்கு.
மாலை, திருமண மண்டபத்திற்கு செல்ல, தங்கையின் பெட்டியில் பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்த நர்மதாவிடம், ''கீழே உங்க வீட்டு ஆளுங்க எல்லாம் வந்தாச்சுடி. நீ போய் அவங்கள பாரு. நான் இதை பார்த்துக்கிறேன்,'' என்றாள், அங்கு வந்த, சித்தி மகள்.
நர்மதாவின் மனதில் எழுந்த நிம்மதி, முகத்தில் பளிச்சிட்டது. மாடிப்படிகளில் வேகமாக இறங்கியவளை, ''மெதுவாம்மா, போற வேகத்துல மாப்பிள்ளை மடியிலேயே விழுந்துடுவ போல,'' என, கேலி செய்தான், அத்தை மகன்.
கணவனையும், அவன் பெற்றோரையும் வரவேற்ற, நர்மதா, சுதாகரின் அக்காவும் டில்லியில் இருந்து திருமணத்துக்கு வந்திருப்பதை பார்த்து ஆச்சரியத்துடன், ''அண்ணி நீங்க வந்தது சர்ப்ரைஸ்,'' என மகிழ்ச்சியுடன், அவளை அணைத்துக் கொண்டாள்.
''இரண்டு பேரும் சேர்ந்து, என்னை வர வச்சிட்டீங்களே... மிச்சமெல்லாம் சுதா செல்வான்,'' என, கண்ணை சிமிட்டினாள், நர்மதாவின் நாத்தனார்.
கணவனை தன் அறைக்கு அழைத்து வந்து, ''இப்பவாவது என்ன புரிஞ்சுகிட்டு கல்யாணத்துக்கு வந்தீங்களே தேங்க்ஸ்,'' என்றவளின் கண்கள் பனித்தன.
''நன்றி எல்லாம், என் அக்காவுக்கு தான் சொல்லணும். ஒரே வார்த்தைல எங்க எல்லாருக்கும் உன் மனச புரிய வச்சிட்டா,'' என்றான், சுதாகர்.
''அப்படி என்ன சொன்னாங்க, அண்ணி,'' என, ஆவலாக கேட்டாள், நர்மதா.
''நர்மதா இடத்துல என்னை வச்சு பாருங்க. அப்ப உங்க மூணு பேருக்கும் புரியும்ன்னு சொன்னா. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி, அக்காவுக்கு டில்லியில் வேலை கிடைச்சதால, மாமாவும் டில்லிக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு போனாரு. விட்டுக் கொடுத்தா தான், வாழ்க்கை நல்லா இருக்கும்ன்னு, நானும் புரிஞ்சுக்கிட்டேன்,'' என்றான், கனிவாக சுதாகர்.
''நானும் தான்,'' என, சிரித்தவளை அணைத்துக் கொண்டான், சுதாகர்.
''இனி நமக்கும் கல்யாண வைபோகம் தான்,'' என்றான் குறும்பாக. அதைக் கேட்டு, வெட்கத்துடன் புன்னகைத்தாள், நர்மதா.
பவானி உமாசங்கர்