Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/விண்ணையும் தொடுவேன்! (3)

விண்ணையும் தொடுவேன்! (3)

விண்ணையும் தொடுவேன்! (3)

விண்ணையும் தொடுவேன்! (3)

PUBLISHED ON : மார் 23, 2025


Google News
Latest Tamil News
முன்கதைச் சுருக்கம்: தம்பி கணேசன், ஊர் தலைவர் பெண்ணை இழுத்துக் கொண்டு ஓடிவிட்ட தகவலை, அம்மா சொல்ல கேட்டு, சென்னையிலிருந்து உடனே சொந்த ஊருக்கு திரும்பினாள், கயல்விழி. பஸ்சில் போகும்போது, கும்பல் ஒன்று வழிமறித்து, கயல்விழியை பஸ்சிலிருந்து இறக்கி, இழுத்துச் சென்றது. இதைப் பார்த்த பஸ்சின் கண்டக்டர், கலெக்டருக்கு போன் செய்து, தகவல் தெரிவித்தான்.

கிரேக்க தத்துவஞானி, சாக்ரடீஸின் சிஷ்யரான, பிளாட்டோ தான் முதல் முதலாக, 'ஸோல் மேட்' என்ற ஆத்ம துணை பற்றி பேசியவர். அதாவது, தன்னை முழுமையாக எதிர்பாலினரிடமும், அவரைத் தன்னிடமும் உணர்கிற அனுபவமே அது!

இது, உடம்பின் ஈர்ப்பைத் தாண்டிய, மனங்களின் பரஸ்பர ஈர்ப்பாகவே இருக்கும்.

மனதின் அழகை முழுமையாக உணர்வதன் மூலம், பிரபஞ்சத்தின் அழகை உணர்ந்து, அந்த அழகாகவே மாறிவிடுகிற அனுபவமே, ஆத்ம துணை நிகழ்த்துகிற மாயம்!

இந்த வரிகளை படித்தபின், மடிக்கணினியை மூடி வைத்தான், புகழேந்தி. அதற்கு மேல் படிக்க முடியவில்லை. மனசு கனத்துப் போயிற்று. நினைவுகள் பாரமாக அழுத்தின; கண்கள் கலங்கின.

இரண்டு ஆண்டுகளாக அவன், பட்டுக் கொண்டிருக்கிற இம்சை அது. வெளியில் சொல்ல முடியாத இம்சை. அந்த வலியும், வேதனையும் அனுபவிப்பவர்களுக்கும், அனுபவித்தவர்களுக்கும் மட்டுமே தெரியும்; அவர்களால் தான் புரிந்து கொள்ளவும் முடியும்.

தான் வாழ நினைத்த வாழ்க்கை, நெஞ்சில் நிழலாடியது. தன் கட்டுரைகளை வாசிப்பவளும், கதைகளை நேசிப்பவளும், தன்னையே கவிதையாக எண்ணி மகிழ்பவளுமே, வாழ்க்கைத் துணையாக வர வேண்டுமென காத்திருந்தான்.

கல்லுாரி காலத்திலிருந்தே அவனது எதிர்பார்ப்புகளும், எண்ணங்களும் வேறாக இருந்தன. அந்த வயதிலேயே வித்தியாசமான சிந்தனைகளுடன் வலம் வந்தான்.

குடியுரிமை தேர்வில், 15வது, 'ராங்க்' எடுத்து தேர்ச்சி பெற்றான். முதல், 'போஸ்டிங்' சென்னையில் அரசு துறையில், உயரதிகாரியாக வேலையில் சேர்ந்த அன்று, அப்பா கூறியது அவன் மனதில் ஆழப்பதிந்து போனது.

'இதோ பார், புகழேந்தி. நீ, ஐ.ஏ.எஸ்., எழுதிப் பாஸானதோ, அரசாங்கத்தில் உயரதிகாரியாக இருக்கப் போவதோ, பெரிய விஷயமில்லை. இதற்கு பின் எப்படி நடந்து கொள்ளப் போகிறாய் என்பது தான் விஷயம். உன்னால் அந்தப் பதவிக்கு பெருமை வர வேண்டுமே தவிர, அந்த பதவியால் நீ பெருமை அடையக் கூடாது. பதவி நாற்காலியின் உயரத்தில் சந்தோஷப்பட்டு விடாதே!

'அந்த நாற்காலி, உன்னை உட்காரவும் வைக்கும். கீழே உருட்டி விடவும் செய்யும். எளிய மக்களின் நியாயமான தேவைகளை நிறைவேற்ற ஒரு போதும் தயங்காதே. ஐ.ஏ.எஸ்., பதவி சாதாரணமானது என்பதை மறக்காதே...' என்றார்.

அப்பா சொன்ன எதையும் மறக்கவே இல்லை. செதுக்கிச் செதுக்கி அவனை சிற்பமாக்கியது, அப்பா தான். வாழ்க்கை குறித்த பார்வையை விரிய வைத்தது, அப்பா. வீட்டின் மத்திய தர நிலையை மறக்காமல், மனதில் பதிய வைத்தது, அப்பா. அவன் வாசித்த புத்தகங்கள், எழுதுகிற எழுத்து, மனிதர்களிடம் பழக வேண்டிய தன்மை எல்லாம் கற்றுக் கொடுத்தது, அப்பா.

'எப்போதும் உன்னைக் காலி பாத்திரமாக வைத்துக் கொள், புகழ். அப்போது தான் மேலும் மேலும் நிரப்ப முடியும்...' என்பார்.

அப்படி ஊற்றி ஊற்றி தான், எண்ணங்களால், பிளாட்டோ அளவிற்கு தன்னை உயர்த்திக் கொண்டான். வெள்ளைக் கேன்வாசாக மனதை ஆக்கிக் கொண்டதால் தான் கதை, கவிதை, கட்டுரை என்று விதவிதமான ஓவியங்களை தீட்ட முடிந்தது.

புகழேந்தி, 25 வயது, அழகான இளைஞன். உயர் பதவியில் இருப்பவன். கதை, கவிதைகளில் தேர்ச்சி பெற்றவன். மக்கள் மத்தியில் பிரபலமானவன். அப்படிப்பட்டவனை யாருக்குத் தான் பிடிக்காது.

அவனது கதையோ, கட்டுரையோ பத்திரிகையில் வெளிவந்ததும், பத்திரிகை அலுவலகத்தில் நுாற்றுக்கணக்கான கடிதங்கள் குவியும்.

பத்திரிகை ஆசிரியரான பிரபாகர், புகழேந்தியின் ஆத்ம நண்பன். கல்லுாரியில் உடன் படித்தவன். ஒத்த அலைவரிசையில் இணைந்தவன். புகழேந்திக்கு வந்த கடிதங்களையெல்லாம் தன் பெரிய ஜோல்னாபையில் போட்டுக் கொண்டு, மாலை 5:--00 மணிக்கு மேல், அவனது அலுவலகம் போய் சந்திப்பான்.

அப்படி ஒரு முறை, வழக்கம்போல் கடிதங்களுடன், புகழேந்தியை சந்தித்தான், பிரபாகர்.

'இந்தா... உனக்கான பொக்கிஷங்கள்...' என, மொத்தக் கடிதங்களையும் மேஜை மீது கொட்டினான்.

'உன் கட்டுரைக்கான நிஜமான பாராட்டுக் கடிதங்கள், பத்து தான். மீதியெல்லாம் உன்னைப் பாராட்டி வந்த கடிதங்கள். மொத்தமும் கல்லுாரி மாணவியர் - இளம் பெண்கள்...' என்றான், பிரபாகர்.

'இப்படிப்பட்ட காகிதப் பூக்களும், கனகாம்பரங்களும் எனக்குத் தேவையில்லை...' என சிரித்தான், புகழேந்தி.

'நீ, தேடுகிற அந்த மல்லிகைப் பூ, எங்கே இருக்குன்னு தெரியலையே...'

'என் தேடுதலில் உண்மை இருந்தால், ஆத்மார்த்தமானதாக இருந்தால், நிச்சயம் என்னைத் தேடி வரும், அந்த மல்லிகை...'

'அடேயப்பா! எவ்வளவு நம்பிக்கை உனக்கு...' என, ஆழமாக அவனைப் பார்த்தான், பிரபாகர்.

'ஒத்த அலைவரிசைகள் ஒன்றிணைவது தான் பரவசம், பிரபா. நீயும், நானும் அப்படித்தானே இணைந்திருக்கிறோம்...'

'இவனுக்கு இவன் நினைக்கிற மாதிரி வாழ்க்கை அமைய வேண்டுமே. இல்லாவிட்டால் மென்மையும், இரக்கமும் கொண்ட இவன், உள்ளுக்குள் சுருண்டு போவான். அது, இவன் திறமையை முடக்கிப் போட்டு விடும். இவனைப் போன்ற உன்னதமான மனிதனுக்கு வாழ்க்கையில் உன்னதமானவைகளே கிடைக்க வேண்டும்...' என, நினைத்துக் கொண்டான், பிரபாகர்.

'என்ன, பிரபா, பேசாமல் இருக்க. என்ன யோசனை?'

சிரித்துக்கொண்டே, 'டீ, யோசனை தான். உன் பியூன் போடுகிற டீ நன்றாக இருக்கும். சாப்பிடுவோமா?' என்றான், பிரபாகர்.

பியூனை வரவழைத்து சொல்ல, சில நிமிடங்களில், இஞ்சி, ஏலக்காய் சேர்த்த டீ வந்தது. இருவரும் ருசித்து குடித்தனர்.

இருவரும் எழுந்து கொண்டனர்.

'வீட்டுக்கு வருகிறாயா?' என்றான், புகழேந்தி.

'இல்ல, புகழ். திரும்ப ஆபீஸ் போகணும். கடைசி பாரம் ஓடிக்கிட்டிருக்கு. நீ எழுதிய ஸோல் மேட் - ஆத்ம துணை மாதிரி, இன்னொரு கட்டுரை எழுதித் தாயேன்...'

'அவசியம் தரேன்! ஆனால், கொஞ்சம், 'டைம்' வேணும், பிரபா. இப்போ தான் ஜாயின் பண்ணியிருக்கேன். என்னை நிரூபித்து விட்டு, எழுத்தின் பக்கம் வரேன். அதுவரை காத்திருக்கணும்...' என்றான்.

'காத்திருப்பேன், புகழ்...'

இருவரும் அவரவர் வாகனங்களில் ஏறிப் பிரிந்தனர்.

வீட்டு வாசலில் ஜீப்பை விட்டு இறங்கியதும், திகைத்துப் போனான், புகழேந்தி. அந்தச் சிறிய வீட்டின் முன், ஒன்றன் பின் ஒன்றாக, வரிசையாக கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. முதலில் நிற்பது அமைச்சரின் கார் என தெரிந்தது. அவனைப் பார்த்ததும், வண்டியை விட்டு இறங்கி நின்றிருந்த ஓட்டுனர்கள், சல்யூட் அடித்தனர்.

'ஐயா வந்திருக்காருங்க...'

'அவரே வந்திருக்காரா?' என ஆச்சரியமாக கேட்டான், புகழேந்தி.

'ஆமாங்க சார். அவரே தான் வந்திருக்காரு...'

ஒன்றும் புரியாதவனாக உள்ளே போனான். அப்பாவும், அமைச்சரும் எதிரெதிர் பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர்.

'வாங்க தம்பி. உட்காருங்க...' என்றார், தன் கட்டைக்குரலில், அமைச்சர்.

'பரவாயில்லை சார். சொல்லுங்க...' என்றான், புகழேந்தி.

'நான் நேரா விஷயத்துக்கு வரேன். என் பொண்ணுக்கு உங்களை மாப்பிள்ளை கேட்டு வந்திருக்கேன்...' என்றார்.

'என்ன...' அதிர்ந்து போய் அப்பாவைப் பார்த்தான். அவர் அமைதியாக இருந்தார்.

'என்ன தம்பி பேசாம இருக்கீங்க? மவுனம் சம்மதம்ன்னு எடுத்துக்கலாமா?'

'அப்படி இல்லீங்க...' என, இடையில் குறுக்கிட்டார், அப்பா.

'கொஞ்சம் டைம் கொடுங்க. யோசிச்சு சொல்றோம்...' என்றான்.

'இதுல யோசிக்க என்ன இருக்கு, தம்பி. என் பொண்ணை நீங்க கூட பார்த்திருக்கீங்களாம்...'

'நானா?'

'ஆமாம், தம்பி. ஒருமுறை, அவ காலேஜ் விழாவுக்கு தலைமை தாங்க வந்தீங்களாம். உங்க கையால பரிசு வாங்கி இருக்காளாம்...' என்றார், அமைச்சர்.

'நான் எத்தனையோ கல்லுாரி விழாவிற்குத் தலைமை தாங்கியிருக்கேன். எத்தனையோ, மாணவ - மாணவியருக்கு பரிசு வழங்கி இருக்கிறேன். அதில், இவர் பெண் யாரென்று கண்டேன்...' என, நினைத்துக் கொண்டான்.

'சுபாங்கின்னு பேரு, தம்பி...'

'சுபாங்கி?' நினைவில் அப்பெண்ணை தேட முயன்றான்.

'உங்களுக்கு ஏத்த உயரமா, நிறமா அழகாயிருப்பா, தம்பி. எனக்கு ஒரே பொண்ணு தான். என் ஆஸ்தி மொத்தமும் அவளுக்குத் தான்...'

கடைசியாக அவர் சொன்னது, அவனுக்குள் எரிச்சலை ஏற்படுத்தியது. பேசாமலேயே நின்றான்.

'நீங்க சரின்னு ஒரு வார்த்தை சொன்னா போதும். நான் முதல்வருக்கு எவ்வளவு வேண்டியவன்னு உங்களுக்கே தெரியும். கல்யாணத்துக்கு முன்னாடியே உங்களை கலெக்டராக்கி விடுவேன். என் மகள், கலெக்டரை கல்யாணம் பண்ணிப்பா...'

சாதாரணமாகவே, அவனுக்கு கோபம் வராது. வந்தால், சுரீரென்று தான் வரும். நெருப்பாக வார்த்தைகள் சூடாக வெளிப்படும்.

அவன் என்ன சொல்வான் என்பதை அறிந்திருந்த, அப்பா, சட்டென்று முந்திக் கொண்டார்.

'இருக்கட்டுங்க. கலெக்டர் போஸ்டிங் தானாக வரும்போது வரட்டுங்க. நாங்க கலந்து பேசிட்டு சொல்றோம்ங்க...' என்றார்.

எழுந்து கொண்டார், அமைச்சர். கார் வரை சென்று வழியனுப்பி விட்டு வந்ததும், அப்பாவை ஏறிட்டான்.

'பதட்டப் படாதே, புகழ். இது முள்ளில் விழுந்த சேலை. கொஞ்சம் நிதானமாகத்தான் எடுக்கணும்...' என்றார்.

'இவர் சொன்ன மாதிரி, அப்படி கலெக்டர் ஆகறதுக்கா நான், ஐ.ஏ.எஸ்., படிச்சேன்?'

'அவரால அப்படித்தான் பேச முடியும். அப்படிப் பேசித்தான் அவங்க பழக்கப்பட்டிருக்காங்க...' என்றார், புகழின் அப்பா.

'வேணாம்ங்கிறதை எப்படி சொல்லலாம்ன்னு யோசிங்கப்பா...' என்றான், புகழேந்தி.

அன்றிரவு முழுவதும் அவனால் துாங்க முடியவில்லை. அமைச்சர் கடைசியாக சொல்லிவிட்டு போனது, நெஞ்சில் உப்புக் கரிப்பாகத் தங்கிப் போனது.

'இது என்ன பண்டம் மாற்று பொருளா? திருமணம், பதவிக்கான விலையா? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார், அவர்?'

அவனுக்குள்ளும் கலெக்டர் கனவு உண்டு.

கடைநிலை மக்கள் மீது, அவன் கொண்டிருந்த கருணையும், எளிய மனிதர்களிடம் வைத்த அன்பும், அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும் உருவான கனவு, அது.

நேர்மைக்கும், உண்மைக்கும் சார்பாக நிற்பது தான், அறம் என்று நினைத்தான்.

அன்பு எப்படி அறம் சார்ந்ததோ, அப்படித்தான் பணியும் அறம் சார்ந்தே இருக்க வேண்டும் என்ற ஆணித்தரமான சிந்தனையோடு இருக்கிறவனிடமா பேரம் பேசுவது?

தான் கலெக்டரானால் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்ற தீர்மானம், அவனிடமிருந்தது.

இரவு முழுவதும் துாங்காமல் உள்ளுக்குள் குமைந்து கொண்டே இருந்தான்.

மறுநாள் காலை, தன் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு, 'தென்னங்கீற்று' பத்திரிகை அலுவலகத்திற்கு சென்றான்.

'இன்னும் எடிட்டர் வரலை, சார். நீங்க உள்ளே உட்காருங்க. இதோ அவருக்கு போன் பண்றேன், சார்...' மிகவும் மரியாதையாகப் பேசிய துணையாசிரியர், உடன் வந்து, பிரபாகரின் அறையில், புகழேந்தியை உட்கார வைத்தார்.

'டீ சாப்பிடறீங்களா சார்?' என கேட்டார்.

'பிரபாகரும் வந்து விடட்டுமே...'

'இந்தாங்க சார். 'நெக்ஸ்ட் இஷ்யூ' தயாராயிடுச்சு. பார்த்துக்கிட்டே இருங்க. இதோ வந்திடுவாரு...' என்று சொல்லி முடிப்பதற்கும், பிரபாகர் உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது.

புகழேந்தியை பார்த்த முகம், பூவாக மலர்ந்தது.

'என்ன புகழ், போன் கூடப் பண்ணாம திடீர்ன்னு வந்திருக்க?'

'உன்கிட்ட கொஞ்சம் பேசணும். அதுக்கு முன்னால ஒரு டீ சாப்பிடலாமா...'

'சொல்லு புகழ்...'

முந்தின நாள் மாலை நடந்தது முழுவதும் சொன்னான். அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த, பிரபாகர், அவன் முகத்தை ஏறிட்டான்.

'சரி, இதுல எது உன்னை ரொம்ப பாதிச்சது? பொண்ணு கேட்க வந்ததா அல்லது உன்னை கலெக்டராக்குவதாக சொன்னதா?'

'ரெண்டாவது...'

'அவர் வேற மாதிரி சொல்லியிருந்தால் தான் ஆச்சரியம்...'

'அது என்னை ரொம்ப வருத்தப்படுத்திடுச்சு, பிரபா...'

'ஏன், வருத்தப்படுற? மீன் விக்கிறவங்க கிட்ட, மீன் வாசனை வராமல், பூ வாசனையா வரும்? வேணாம்ன்னே முடிவு பண்ணிட்டியா?'

'என்ன பிரபா, விளையாட்டுக்குக் கேட்கறியா? அந்தப் பெரிய இடமெல்லாம் நமக்கு எதுக்கு? எப்படி தட்டிக் கழிக்கலாம்ன்னுதான் யோசிக்கிறேன்...'

'நாலு நாளைக்கு பேசாமல் இரு. என்ன தான் ஆகுதுன்னு பார்ப்போம்...'

'அப்படியா சொல்ற?'

'ஆமாம், புகழ். இதையெல்லாம் மறந்துட்டு நிம்மதியாக எழுந்து போ. உன் வேலையை பாரு...' என்றான், பிரபா.

நான்கு நாட்கள் கடந்தன.

அமைச்சரிடமிருந்து, மொபைல் போன் அழைப்போ, நேரிலோ வராமல் போகவே, அப்பாடா... என்றிருந்தது, புகழேந்திக்கு.

அப்பாவும் அதைப்பற்றி ஒன்றும் பேசவில்லை. அம்மா மட்டும் ஓரிரு முறை கேட்டுவிட்டு பதில் வராமல் போகவே மவுனமானார்.

ஐந்தாம் நாள், காலை அலுவலகத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்த போது, 'உள்ளே வரலாமா?' என்ற குரல், வீணையை மீட்டினாற் போல் கேட்டது. திரும்பிப் பார்த்தவன், பிரமித்தான்.

அத்தனை அழகான பெண். சிறந்த நாட்டியத் தாரகையைப் போன்ற தோற்றம். மென்மையும், நளினமுமாக காற்றில் மிதந்து வருவதைப் போல் வந்தாள்.

'ஐ யம், சுபாங்கி...' என, கை கூப்பினாள்.

பதிலுக்குக் கை கூப்பிய போதும், உள்ளுக்குள் லேசாக தடுமாறினான், புகழேந்தி.

- தொடரும்இந்துமதி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us