Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

PUBLISHED ON : மார் 23, 2025


Google News
Latest Tamil News
சிவா, கல்லிடைக்குறிச்சி, நெல்லை: கேரள முதல்வர், கவர்னர் உடன் சேர்ந்து, நிதியமைச்சர் நிர்மலாவை சந்தித்து, நிதி உதவி கேட்டு இருப்பது குறித்து...

கவர்னர் சென்றது, 'புரோட்டாகால்' மீறப்பட்ட சமாசாரம் என்றாலும், முதல்வர் தன் மாநிலத்திற்கு தேவையானதை கேட்டுப் பெறுவது, மாநிலம் பிழைக்க உதவும்!

ந.மாலதி, துாத்துக்குடி: 'ஆண்களே, 90 சதவீதம் முதல்வராக உள்ளனர். பெண்களுக்கு சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்...' என, தி.மு.க., எம்.பி., கனிமொழி ஆதங்கப்பட்டுள்ளாரே...

ஆதங்கப்படுவதற்கு பதில், முதல்வர் பதவியில் அமர, முழுத் தகுதியையும் வளர்த்துக் கொள்வது இன்றியமையாதது. ஜெயலலிதாவின் திறமையைப் பார்த்து தான், அவருக்கு, 'மளமள'வென பதவிகள் வழங்கப்பட்டன!

ஆர்.அகிலா பாரதி கண்ணம்மா, கோவை: 'பார்லி.,யை முடக்கும், வெளிநடப்பு செய்யும் உறுப்பினர்களுக்கு சம்பளம் கிடையாது...' என, சட்டம் கொண்டு வந்தால் என்ன?

கண்டிப்பாக சட்டம் கொண்டு வர வேண்டும்; ஆனால், மத்தியில் ஆட்சியில் அமரும் எந்த கட்சியும் அதைச் செய்ய விடாமல் தடுத்து விடும்!

* மு.நாகூர், சுந்தரமுடையான், ராமநாதபுரம்: 'தமிழக ஆறுகளை பாதுகாக்கவும், பராமரித்துக் கண்காணிக்கவும், பொதுப்பணித் துறையினர் தவறி விட்டனர்...' என, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறி இருக்கிறதே...

பொதுப்பணித் துறையை வாழ்நாள் குத்தகைக்கு எடுத்திருக்கும் அந்த அமைச்சர், எந்த ஆறு, எந்த கால்வாய் எவ்வளவு கி.மீ., பாய்கிறது என்ற புள்ளி விபரத்தை, விரல் நுனியில் வைத்திருக்கிறாரே தவிர, அரசியல் காரணங்களுக்காக, அவற்றைப் பாதுகாப்பதில், ஆர்வம் காட்டுவதில்லை; தமிழகத்தின் சாபக்கேடு இது!

ஆர்,ஹரி கோபி, டில்லி: பின் விளைவுகள் ஆபத்தாக முடியும் என தெரிந்தும், தற்கால பெண்கள், சமூக வலைதளங்களில், தங்களது குடும்ப நிகழ்வுகளையும், புகைப்படங்களையும் அதிகமாக பதிவேற்றுவது ஏன்?

பெருமைக்காக, ஆபத்தை உணராமல் செய்கின்றனர்; விளைவுகளை சந்திப்பதற்கு முன், உணர்வது நல்லது!

* ச.மணிவண்ணன், கள்ளக்குறிச்சி: பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்ட, 23 பள்ளி ஆசிரியர்கள் மீதான, 'டிஸ்மிஸ்' நடவடிக்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தக்க தண்டனை இது. அவர்களின் சான்றிதழ்களையும் செல்லாததாக்கி இருப்பது, இதுபோன்று தவறிழைக்கத் துணிபவர்களுக்கு நல்ல பாடம்!

ஆர்.வள்ளிமயில், புதுக்கோட்டை:வாசகர்கள், உங்களை வீட்டுக்கு அழைத்தால் வருவீர்களா?

பல வாசகர்கள் வீட்டிற்குச் சென்றிருக்கிறேனே!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us