Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

PUBLISHED ON : மார் 23, 2025


Google News
Latest Tamil News
பா - கே

'மணி... (செய்தியாளர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு) அவர் வரவில்லையா?' என்றார், உ.ஆசிரியர் ஒருவர்.

'டீ குடிக்க சென்றுள்ளார்...' என்றேன், நான்.

'டீ டைமுக்கு வந்து கேட்டால், எப்படி இங்கு இருப்பார். அவர் ஒரு டீ விரும்பி என, உமக்கு தெரியாதா?' என்றார், லென்ஸ் மாமா.

'ஆமாம்... மறந்துவிட்டது. ஒரு நாளைக்கு, 10 கப் டீ அருந்துபவர் ஆயிற்றே அவர்...' என்றார், உ.ஆ.,

'வெள்ளைக்காரன் கற்றுக் கொடுத்து சென்ற பழக்கம் இது. நம் ஆட்கள் இன்றும் அதை விடாமல் உள்ளனர்...' என்றார், அருகில் இருந்த, 'திண்ணை' நாராயணன்.

'ஓய் நாணா... தேநீரை கண்டுபிடித்தது சீனாக்காரன் என படித்துள்ளேன்...' என்றார், லென்ஸ் மாமா.

'தேயிலையிலிருந்து, தேநீர் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்தது, சீனாக்காரர்கள் தான். ஆனால், தேநீர் குடிக்கும் பழக்கத்தை உலகம் முழுவதும் பரப்பியதும், நம்மை டீ குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாக்கியதும் வெள்ளைக்காரர்கள் தான்...' என்றார், நாராயணன்.

'எப்படி சொல்றீங்க?' என்றேன், நான்.

கூற ஆரம்பித்தார், நாராயணன்:

கடந்த, 18-ம் நுாற்றாண்டு. கொல்கத்தாவில் உள்ள கிழக்கிந்திய கம்பெனியின் கிளை நிறுவனங்களாக, பல தொழிற்சாலைகள் இருந்தன. அதில், ஆயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் பணியாற்றினர்.

ஒருநாள், இரவு வேலை முடிந்து வந்தவர்களுக்கு அருந்த, சூடான ஒரு பானம் கொடுத்தனர். அதை இலவசமாக வேறு கொடுக்க, அது என்னவென்றே தெரியாமல், தொழிலாளர்களும் குடித்தனர். இரவு குளிருக்கு இதமாக இருந்தது, அந்த பானம்.

அதை தினமும் கொடுக்க, தொழிலாளர்களும் ஆர்வமாக குடித்தனர். குளிருக்கு இதமாகவும், புத்துணர்ச்சியாகவும் இருப்பதாக நம்பினர். நாளடைவில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியே வந்த உடன், அவர்களை அறியாமலேயே அந்த பானத்தை அருந்த ஓடினர். தொழிலாளர்கள் மட்டுமின்றி, ஏழைகளுக்கும் அந்த பானத்தை கொடுத்தனர்.

தினமும், வாரக்கணக்கில், மாதக்கணக்கில் அந்த பானம் இலவசமாக கொடுக்கப்பட்டது. தொழிலாளர்களும் வாங்கிக் குடித்து, அதன் சுவைக்கும், புத்துணர்வுக்கும் அடிமையாகி போயினர்.

திடீரென ஒருநாள், அந்த பானம் இலவசமாக கொடுப்பது நிறுத்தப்பட்டது. 'இனிமேல் இலவசம் கிடையாது. காசு கொடுத்து வாங்க வேண்டும்...' என்றனர்.

இத்தனை நாட்கள் இலவசமாக குடித்து பழகியவர்களுக்கு, அந்த பானத்தை குடிக்காமல் இருக்க முடியவில்லை. சரி, காசு கொடுத்தாலும் பரவாயில்லை என, காசு கொடுத்து வாங்கி குடிக்க துவங்கினர்.

நாளடைவில் அதுவும் நிறுத்தப்பட்டது. இது தான் அந்த பானம் தயாரிக்கும் இலை. தயாரிக்கும் முறையும் இது தான் என, விளக்கினர். இதை நீங்கள் வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம் என, அந்த இலை சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மக்களும் அதை வாங்கி, வீட்டில் தயாரித்து குடிக்க வேண்டிய அளவுக்கு அந்த சுவைக்கு அடிமையாகிப் போயினர். அந்த பானத்தை தயாரித்து, விற்கும் கடைகளும் திறக்கப்பட்டன.

அந்த பானம் தான் இன்று, இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் தவிர்க்க முடியாததாகி போன தேநீர். அந்த இலை தான் தேயிலை.

- என்று கூறி முடித்தார், நாராயணன்.

'இலவசம், ஏமாற்றுபவனின் ஆயுதம் என, இதைத்தான் கூறினரோ? இந்தியர்களை அடிமைப்படுத்த, என்னென்ன குறுக்கு வழிகளை எல்லாம் பிரிட்டிஷார் செய்தனரோ, அதையெல்லாம், இப்ப நம்ம அரசியல்வாதிகள் செய்து வருகின்றனர். சொந்த நாட்டு மக்களையே இலவசத்துக்கு அடிமையாக்கி விட்டனர்.

'பிரிட்டிஷாரை நாட்டை விட்டு விரட்ட, 300 ஆண்டுகள் ஆயின. இந்த அரசியல்வாதிகளை விரட்ட எவ்வளவு காலம் ஆகுமோ?' என, நினைத்துக் கொண்டேன், நான்.





கிளிகள் பேசுமா என்றால், இல்லை என்பது தான், பதில். கிளி, மைனா, கரிச்சான் குருவி, இரட்டை வால் குருவி, ஆள்காட்டி பறவை மற்றும் அக்கா குருவி என, சிலவற்றை, பேசும் பறவைகள் என, நினைத்து கொண்டிருக்கின்றனர், மக்கள்.

உண்மையில் இந்த பறவைகள் பேசுவதில்லை. மனிதர்கள் எழுப்பும் சில ஒலிகளை அப்படியே திரும்ப ஒலிக்கக் கூடியவை.

ஆனால், கிளிகளின் மூளையில் உள்ள வித்தியாசமான கட்டமைப்பு தான், மனிதன் பேசுவதை உள்வாங்கி, பின் அதே போல் ஒலி எழுப்ப வைக்கிறது. மற்ற பறவைகளுக்கு இல்லாத இந்த விசேஷமான தன்மை, கிளிகளுக்கு மட்டுமே உள்ளது. அவை, நான்கு வயது குழந்தைக்கு சமமான, ஐ.க்யூ.,வை கொண்டிருப்பதாக கூறுகின்றனர், விஞ்ஞானிகள்.

பொதுவாக, எல்லா வகையான கிளிகளும் பறப்பதில்லை. உலகின் மிகப்பெரிய இனமான, ககாபோ என்ற கிளிகளால் பறக்கவே முடியாது. இருப்பினும், ககாபோ கிளி குதித்து செல்லும்; மரங்களில் ஏறும் திறனும் கொண்டது. 4 கிலோ எடை இருக்கும். 2 அடி நீளம் வளரக்கூடியது. துரதிர்ஷ்டவசமாக இன்று, மிகவும் அரிதான பறவைகளில் ஒன்றாக உள்ளது, ககாபோ.

கிளிகள் மட்டுமே தங்கள் கால்களால், உணவை எடுத்து உண்ணும் திறன் கொண்டது. ஏனெனில் கிளிகளுக்கு, 'ஜிகோடாக்டைல்' வகை பாதங்கள் உள்ளன. அதாவது, ஒவ்வொரு காலிலும், நான்கு விரல்கள் உள்ளன. இரண்டு முன்னோக்கியும், இரண்டு பின்னோக்கியும் இருக்கின்றன. மனிதர்கள் தங்கள் கைகளால் எப்படி உணவை எடுத்து சாப்பிடுகின்றனரோ, அதைப் போன்றே கிளிகளும், கால்களால் உணவு பொருட்களை எடுத்து வாயில் வைத்து சாப்பிடும்.

கிளிகளுக்கு மூச்சுக்குழாய், நுரையீரலுக்குள் பிரியும் இடத்தில், சிரின்க்ஸ் என்ற உறுப்பு உள்ளது. அதன் மீது பாயும் காற்று எதிரொலித்து, ஒலிகளை உருவாக்கும். இது, கிளிகள் பேசுவது போல் கேட்கும். காக்கைகள் மற்றும் மைனா கூட, மனிதர்களின் பேச்சைப் பிரதிபலிக்கின்றன. மேலும், டால்பின்களும் அதே போல செய்கின்றன.

எனவே, கிளிகளால் மட்டுமல்ல, எந்த பறவை மற்றும் விலங்குகளாலும் மனிதர்களை போல பேச முடியாது.

- எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us