Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள் - சிவாஜியுடன் ஒரு காலை விருந்து!

அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள் - சிவாஜியுடன் ஒரு காலை விருந்து!

அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள் - சிவாஜியுடன் ஒரு காலை விருந்து!

அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள் - சிவாஜியுடன் ஒரு காலை விருந்து!

PUBLISHED ON : மார் 23, 2025


Google News
Latest Tamil News
தமிழக முதல்வர், மு.க.ஸ்டாலின், என் மணி விழா நடந்த அரங்கிற்கு நேரில் வந்து, என் கரங்களை இறுகப் பற்றி, 'உங்களுக்கு மணி விழா என்றால், என்னால் நம்ப முடியவில்லை. உடலை நன்கு பராமரிக்கிறீர்கள். இந்த ஆரோக்கியம் என்றும் வேண்டும்...' என்றதும், மகிழ்ந்தேன்; நெளிந்தேன் என்றும் சொல்லலாம்.

உடன் வந்த, நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும், 'லேனா சார் எப்பவும் அப்படியே தான்...' என, உடன்பட்டார்.

அறிவாலயத்தில் அப்போது அறிவாலய செயலராக இருந்த துறைமுகம் காஜா, என் அடுத்த வீட்டுக்காரர். இவர் வழியே தான் நான், ஸ்டாலினை சந்திப்பதற்கான நேரத்தை பெற்றேன்.

குறித்த நேரத்திற்கு முன்னதாகவே, நான் ஆஜர். பார்த்தால், கட்சிக்காரர்களுள் முக்கிய பிரமுகர்கள், தமிழகத்தின் புகழ்மிகு கவிஞரின் குடும்பத்தினர் என, அந்த வரவேற்பரையில் பலரும் இருந்தனர்.

இதை அடுத்து இருந்தது, பெரிய அறை. இந்தப் பெரிய அறைக்கு முதல்வர் வந்ததும், வந்திருக்கும் ஒவ்வொருவரையும் வரிசைப்படி அழைப்பார் என நினைத்துக் கொண்டேன்.

'தலைவர் வந்தாச்சு...' என, இரண்டு, மூன்று குரல்கள் வர, முதலில் அழைக்கப்பட்டவன், நான். கவிஞர் குடும்பத்தை விட, கட்சிக்காரர்களை விட, நான் எவ்விதத்தில் வேண்டியவன்! நிச்சயமாக இல்லை. எனக்கு முன்னால் வந்து காத்திருந்தவர்களை அழைக்காமல் முதல் அழைப்பு எனக்கா! நம்ப முடியவில்லை.

அனைவரையும் நின்றபடி வரவேற்று, ஒரு சில வார்த்தைகள் பேசி, நாம் சொல்வதை கூர்மையாக கேட்டு, அதற்கு தக்க பதிலளிப்பார். பிறகு, புகைப்படம் எடுத்து முடிந்தது என்பதை, உறுதி செய்து கொண்டு, பார்வையை அவர் நுழைவாயிலை நோக்கி திருப்பினால், இனி நமக்கு அங்கு வேலையில்லை என பொருள். அவருக்கு இடப்பக்கம் ஒரு வாயில் உண்டு. அது, வெளியேறும் வழி.

என்னிடம் முதல்வருக்கு தனி அன்பு உண்டு என்பதை, மேலும் சில சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறேன். விடுவிடுவென நடக்கும் அவர், வழியில் நான் எங்கு நின்றாலும், அவரும் நின்று, ஒரு சில வினாடிகள் எனக்கென ஒதுக்காமல் போனதே இல்லை.

அடுத்த ஆளுமை, தமிழகத்திற்கு கிடைத்த மகத்தான கலையுலக இமயம். ஆம்! நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தான் இப்படிக் குறிப்பிடுகிறேன்.

இப்பேர்ப்பட்ட ஆளுமைகளுடன் பழகக் கிடைத்த வாய்ப்பு, நான், தமிழ்வாணனின் மகன் என்பதால் தான்.

என் எழுதுகோல், ஒரு துலாக்கோல் என, விமர்சனங்களுக்கு உள்ளானவர்கள் கூட, ஏற்றுக்கொண்ட நிலைப்பாட்டில் நான் நின்றது தான், அவர்கள் ஒதுக்காததற்கு காரணமாக இருக்கும் என்பது, என் ஊகம்.

நடிகர் திலகத்தை நான், மூன்று முறை சந்தித்திருக்கிறேன்.

நடிகர் திலகத்துடன் பழக கிடைத்த சந்தர்ப்பங்களுக்கு, நான் 'குமுதம்' நிறுவனர், எஸ்.ஏ.பி.,யின் புதல்வர், டாக்டர் ஜவஹர் பழனியப்பனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

இவரது திருமணத்திற்கு திருப்பதிக்கே வந்திருந்தார், சிவாஜி கணேசன். 'பென்ஸ்' காரில் அவர் வந்திறங்கியது முதல், நானும், என் இளவல் ரவி தமிழ்வாணனும் நிழலாய் இருந்தோம்.

இத்தனைக்கும், சென்னையில் டாக்டர் ஜவஹரின் திருமண வரவேற்பு இருந்தது. திருப்பதிக்கே வரவேண்டும் என்பதில்லை. ஆனாலும், நேரமும், துாரமும் பாராமல், தன் மனைவி கமலாம்மாவுடன் வந்திருந்தார்.

இதோடு விட்டாரா? டாக்டர் ஜவஹர் தம்பதிக்கு, தன் அன்னை இல்லத்தில் வரவேற்பு விருந்து ஒன்றையும் கொடுத்தார். இளவல் ரவி, குடும்பத்துடன் வந்திருக்க, நானும் இணைந்து கொண்டேன்.

அன்னை இல்லம் பிரமாண்டமானது. கலைக்கூடமோ என எண்ணும்படி அவ்வளவு நேர்த்தி!

சிவாஜி, தம் பளீர் சிரிப்புடன் தனக்கே உரிய சிம்மக் குரலோடு எங்களை வரவேற்றார்.

அமெரிக்கா செல்லும் போதெல்லாம், டாக்டர் ஜவஹர் வீட்டில் தான் தங்குவார். எவர் வீட்டிலும் தங்கும் வழக்கம் இல்லாத சிவாஜி, டாக்டர் ஜவஹரிடம் மட்டும் தனிப்பிரியம். டாக்டர் ஜவஹரின் பேஷன்ட்டும் கூட.

டாக்டரின் திருமணம் நிச்சயமானதுமே, 'டாக்டர்! திருமணம் முடிந்த கையோடு, எனக்கு ஒருநாள் ஒதுக்கிடுங்க. எங்க வீட்ல உங்களுக்கு விருந்து வைப்பேன். கண்டிப்பா குடும்பத்தோட வரணும்...' என, அழுத்தமாகச் சொல்லி விட்டார்.

அன்னை இல்லத்தின் சாப்பாட்டு மேசை, வட்ட மேசை, மாநாட்டு மேசை போல அவ்வளவு பெரிதாக இருக்கும். உரையாட வேண்டும் என்றால், குரலை உயர்த்தி தான் பேச வேண்டும்.

நாங்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டோம். எல்லாரையும் ஒருமையில் அழைக்கும் உரிமை உள்ள சிவாஜி, எங்களை ஏனோ மரியாதை கலந்து விசாரித்தார். அப்போது, 'தமிழ்வாணன் பிள்ளைங்களுக்கு ஒரு செய்தி சொல்கிறேன். 1963, 'கல்கண்டு' தீபாவளி மலரில், 'சிவாஜியுடன் ஒருநாள்' என, கட்டுரை வெளியிட்டார், உங்க அப்பா. எங்க வீட்டிற்கு வந்தாரு. எல்லாருடனும் சாதாரணமாக பேசிக்கிட்டிருந்தாரு. கூட வந்த போட்டோகிராபர் எங்க எல்லாரையும் போட்டோ எடுத்தாரு. அப்ப, என் பிள்ளைகள் சாந்தி, ராம்குமார்லாம் சின்னப்பிள்ளைங்க.

'மலர் வெளியானதும், எனக்கு அனுப்பி இருந்தாரு. அசந்துட்டேன். அவ்வளவு சிறப்பாக எழுதியிருந்தார். வந்தாரு, எங்களோட பேசினாரு. புறப்பட்டுப் போயிட்டாரு. இதில கட்டுரையா எழுத என்ன இருக்குன்னு தான், நான் நெனைச்சேன். ஆனால், பிரமாதப்படுத்தி இருந்தார்.

'அவரை உடனே போனில் கூப்பிட்டு பாராட்டினேன். இதுக்கு முன் என்னைப் பத்தி இப்படி சிறப்பான ஒரு கட்டுரை வந்ததா எனக்கு நினைவில்லை...' என, பலவித முகபாவங்களோடு சிவாஜி பேசியதை மறக்க முடியாது.

'ஆனா...' என நிறுத்தி, தந்தை தமிழ்வாணன் பற்றி வெளிப்படையாகவும் ஒன்று சொன்னார்.

அது...



- தொடரும்.

லேனா தமிழ்வாணன்






      Our Apps Available On




      Dinamalar

      Follow us