Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

PUBLISHED ON : மார் 23, 2025


Google News
Latest Tamil News
தினம் ஒரு தகவல்!

ஓய்வு நேரத்தில், நுாலகம் சென்று படிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார், என் மனைவி. நுாலகத்திலிருந்து, சில பயனுள்ள குறிப்புகளை எழுதி வருவார். அவற்றை தினமும் காலையில் தன்னுடைய, 'வாட்ஸ்-ஆப், எக்ஸ்' மற்றும் முகநுால் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார்.

இதைப் பார்க்கும் இளைஞர்கள், அவரை தொடர்பு கொண்டு, பல சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறுவது வழக்கம். இதுகுறித்து என் மனைவியிடம் விசாரித்தேன்.

'தினமும் நுாலகத்தில் இருந்து மத்திய, மாநில அரசுகளில் உள்ள, புது புது வேலை வாய்ப்பு தகவல்கள் மற்றும் அதற்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தொழில்நுட்ப தகுதிகள் போன்ற விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்களை என்னுடைய சமூக வலைத்தளங்களில் பதிவிடுவேன். அதை பார்க்கும் இளைஞர்கள், சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்கின்றனர்...' என்றார்.

மேலும், அரசு தேர்வு எழுதுபவர்களுக்கு மாதிரி வினா விடைகள் தேர்வு செய்து தருவதாகவும் கூறினார். அன்று முதல் நானும், என் சமூக வலை பக்கங்களில் அவற்றை பகிர்ந்து வருகிறேன்.

எங்களது சிறு முயற்சியில் இதுவரை, மூன்று பேர், அரசு பணிக்கு தேர்வாகி உள்ளனர். தினமும் இதுபோன்ற செய்திகளை பகிரும் போது, அரசுப் பணியில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு உதவியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

— டி.கார்த்திகை செல்வம், சென்னை.

சபாஷ் அணுகுமுறை!

என் நெருங்கிய உறவினரின் மகன், கல்லுாரியில் படிக்கிறான். அவன், 10ம் வகுப்பை முடித்ததில் இருந்தே, தன் அப்பாவிடம், 'பைக்' வாங்கி தர கேட்டுக் கொண்டிருந்தான்.

'பைக் வாங்கி தரும் அளவுக்கு, என்னிடம் பணம் இல்லை. உன் அம்மாவும் இல்லத்தரசி. என்னுடைய சம்பளத்தை வைத்து மட்டுமே குடும்பத்தை நடத்தி வருகிறேன்...' எனக் கூறி, மறுத்துவிட்டார், அவனது அப்பா.

தற்போது, மீண்டும், 'பைக்' கேட்டுள்ளான். உடனே, தன் மகனை அழைத்துக் கொண்டு, அரசு மருத்துவமனை ஒன்றுக்கு சென்றுள்ளார், உறவினர். விபத்தால் கை, கால் மற்றும் பல்வேறு உறுப்புகளை இழந்து, கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் அங்கு ஏராளமானோர் இருந்துள்ளனர்.

போதிய பயிற்சி இன்றி, குடிபோதையில், மொபைல் போனில் பேசியபடி, போதிய துாக்கமின்றி மற்றும் உரிமம் இன்றி ஓட்டுவது என, பல்வேறு காரணங்களால் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மகனுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

'பைக் ஓட்டி யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்த மாட்டேன். நானும் விபத்துகளில் சிக்காமல் மிக கவனமாக ஓட்டுவேன் என, எனக்கு சத்தியம் செய். நான் உனக்கு, 'பைக்' வாங்கி தருகிறேன்...' என, மகனிடம் சொல்ல, அவனும் அப்படியே, சத்தியம் செய்துள்ளான்.

அதன்பின், தன் மகனை அழைத்து சென்று, 'பைக்' வாங்கி தந்துள்ளார்.

இந்த விஷயத்தை என்னிடம் கூறிய உறவினர், 'இப்போது என் மகன் மிக மிக கவனமாக, 'பைக்' ஓட்டுகிறான். எனக்கும் நிம்மதி...' என்றார்.

உறவினரின் இந்த சமூக பொறுப்பு மற்றும் புத்திசாலித்தனமான நடவடிக்கையை மனதார பாராட்டினேன்.

— பி.ஆனந்த், சென்னை.

'டூ- வீலர் மெக்கானிக்'கின், 'சைடு பிசினஸ்!'

'டூ-வீலர் மெக்கானிக்' கடை வைத்துள்ளார், நண்பரின் மகன்.

சமீபத்தில், என்னுடைய பைக்கை, அவரிடம் சர்வீசுக்கு விட சென்ற போது, ஏராளமான பழைய, 'டூ-வீலர்' பாகங்களை குவித்து வைத்திருந்ததைப் பார்த்தேன்.

அதுபற்றி, விசாரித்தேன்.

'சர்வீஸ் பண்ற வேலையோடு சேர்த்து, 'சைடு பிசினஸ்' செய்யலாம்ன்னு முடிவு செய்தேன். வழக்குகளில் சிக்கி, ஏலம் விடப்படும், 'டூ-வீலர்'களை, குறைந்த விலைக்கு வாங்கி வந்து, அதில் நல்ல நிலையில் இருக்கிற உதிரிபாகங்களை கழட்டி வைத்துக் கொள்வேன்; மற்றதை காயலான் கடையில் விற்று காசாக்கி விடுவேன்.

'கழட்டி வைத்த உதிரி பாகங்களை, நான் ஏற்கனவே சொல்லி வைத்திருக்கிற, சக, 'டூ-வீலர் மெக்கானிக்' நண்பர்கள் மூலமாக, தேவைப்படுகிற வாடிக்கையாளர்களுக்கு, நியாயமான விலையில் விற்று விடுவேன்.

'சில சமயம், உதிரி பாகங்கள் விற்கும் கடைக்காரர்கள் கூட, அவர்களிடம் இல்லாததை, என்னிடம் கிடைக்கும்ன்னு சொல்லி அனுப்புவாங்க...' என்றார்.

இதேபோல், அவரவர் தொழில் சார்ந்து, மாற்றி யோசித்தால், கூடுதல் வருமானம் சம்பாதித்து, குடும்ப பொருளாதாரத்தை வளமாக்கிக் கொள்ளலாமே. சிந்தியுங்கள்!

— மலர்மணி, திருச்செங்கோடு, நாமக்கல்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us