அம்மா லட்சுமி தந்த காபியை குடித்து முடித்துவிட்டு, டம்ளரை திருப்பித் தந்தாள், பூரணி. டம்ளரை வாங்கியும் அம்மா அங்கேயே நிற்பதைப் பார்த்ததும், கம்ப்யூட்டரில் இருந்து நிமிர்ந்து பார்த்தாள்.
''என்னம்மா?''
''காலையில மார்கெட்டுல மாப்பிள்ளையோட பெரியம்மா பொண்ணைப் பார்த்தேன்.''
''அது யாரு?''
''என்னடி இப்படி கேட்கிறே? ராணிப் பேட்டைக்காரி. ராங்கி பிடிச்சவ.''
பெயரைச் சொல்வதைவிட, இப்படி அடைமொழிகளை சொன்னால் சட்டென்று ஞாபகம் வந்து விடுகிறது. மேற்கொண்டு அம்மாவே சொல்லட்டும் என, அமைதியாக இருந்தாள், பூரணி.
''நீங்க என்ன முடிவு செய்திருக்கீங்க? இப்படியே போனால், உங்க பொண்ணை நீங்களே வச்சுக்க வேண்டியதுதான்னு, திமிரா பேசிட்டுப் போறா.''
''நீயும் பதிலுக்கு பேசிட்டு வரவேண்டியது தானேம்மா! நமக்கு மட்டும் வாய் குறைவா என்ன?'' என்றாள், சிரிப்பை அடக்கியபடி.
அம்மா முறைத்தாலும், பிறகு பேசிய வார்த்தைகளில் கவலை தெரிந்தது.
''இதெல்லாம் உனக்கு சிரிப்பாத் தெரியுது, பூரணி. ஆனால், ஒரு விஷயத்தை யோசிச்சுப் பார்த்தியா. இந்த ராணிப்பேட்டைக்காரி, உங்க வீட்டுக்கு வந்து போகிற விருந்தாளி.
''ஒரு விஷயத்துக்கு கருத்துச் சொல்லவோ, முடிவெடுக்கற இடத்துலயோ இல்லாதவங்க. அவங்க எல்லாம் இப்போ கருத்துச் சொல்லவும், கடிஞ்சு பேசவும் செய்றாங்கன்னா, எது சரியில்லாம இருக்குன்னு யோசி. அதது இருக்க வேண்டிய இடத்துல இருக்கணும்,'' என, அழுத்தமாகச் சொல்லிவிட்டு உள்ளே போய் விட்டாள், அம்மா.
'அம்மாக்கள் எல்லாம் இப்படித்தான்...' என, அலுத்து கொண்டாலும், அந்த வார்த்தைகளில் அத்தனை நிஜமிருந்தது புரிந்தது.
திருமணம் முடிந்து, இரண்டாண்டுகள் ஓடி விட்டன. 'இன்ட்டீரியர்' துறையில் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறாள். திருமணத்திற்கு முன்பே வேலையை தொடர்வது குறித்து, யுகேந்திரனிடம் பேசி விட்டாள்.
இப்போது இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. படிப்பு, வேலை, திருமணம், நல்ல இலக்கத்தில் சம்பளம் என்ற அவளுடைய, கிராப்ஷூட்டில் எந்த மாற்றமும் இல்லை.
திருமணம் முடிந்த கையோடு புரிதலுடன் யுகேந்திரனின் குடும்பத்தார் தனி குடித்தனம் வைத்து விட்டனர். பூரணிக்கு அது சவுகரியமாகப் போய்விட்டது.
நடு இரவு வரைக்கும் அமர்ந்து, 'டிசைனிங்' செய்து கொண்டிருப்பாள். நேரம் கழித்து படுத்து, நேரம் சென்றபின் எழுந்து, 'பிரட் டோஸ்ட்' செய்து சாப்பிட்டு, மதியத்துக்கு, 'ஆன்லைன் ஆர்டர்' போட்டு சாப்பிடுவாள்.
இரவுக்கு இருவரும் வெளியில், 'டின்னர்' சாப்பிடுவது என, வாழ்க்கையை அவளுக்கு தகுந்தது போல் வடிவமைத்து கொண்டாள். அதை யுகேந்திரனும் பெரிதாய் எதிர்க்காமல் ஏற்றுக் கொண்டான் அல்லது அதற்கு அவனுமே பழகிக் கொண்டான்.
இடையில் மாமனார் - மாமியார் வருகிற நாளில், இந்த இயல்பை மாற்றிக் கொள்ள வெகுவாய் சிரமப்படுவாள்.
'என்ன யுகி இது? மூணு நேரமும் கடையில வாங்கிச் சாப்பிடுறீங்க. வீட்டு வேலை, வெளி வேலைன்னு அத்தனைக்கும் ஆட்களைப் போட்டுட்டு, வெள்ளி, செவ்வாய்னாக் கூட விளக்கு ஏத்தற சம்பிரதாயம் கூட இல்லாம, என்னடா வீடு இது?' மனசொடிந்து போய் தான் மகனிடம் கேட்பார், கோமதி.
'அவ வேலை அப்படிம்மா...' என்பான், சமாளிக்கும் விதமாக, யுகேந்திரன்.
'இதை நான் ஒத்துக்குவேன்னு நினைக்கிறியா? என்ன பொல்லாத, 'இன்ட்டீரியர்' பண்றாளாம். தன் வீட்டை துப்புரவு செய்து, குடும்பம் பண்ண முடியாதவ, அடுத்தவங்க, வீட்டு வரவேற்பறையும், படுக்கையறையும் இப்படி இப்படி இருக்குன்னு கற்பனையில வரையறாளாக்கும். சுதந்திரமா இருங்க. ஆனால், ஊதாரியா இருக்காதீங்க...'
பூரணியின் காதுபடவே சொல்லிவிட்டுப் போனதில் இருந்து, மாமியாருக்கும், மருமகளுக்கு மான பனிப்போரின் துவக்கம் ஆரம்பமானது.
கோமதி ஒன்றும், பழங்கால மாமியார் இல்லை தான். கேள்வி கேட்க ஆளில்லை என, சுதந்திரத்தின் அர்த்தம் புரியாமல் நடப்பதை, அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
இந்த நிலையில் தான், யுகேந்திரனுக்கு டில்லிக்கு வேலை மாற்றல், பதவி உயர்வோடு வந்தது. அந்தச் செய்தி, பூரணிக்கு பெரிதாக ருசிக்கவில்லை. அதற்கு காரணமும் இருந்தது. அவளுடைய அலுவலகத்தின் கிளை, டில்லியில் இருந்தது. ஆனால், சென்னை, பெங்களூரூ அளவுக்கு பெரியதாக கிடையாது. யுகேந்திரன் வீடு பார்த்திருக்கும் இடம், இருவருடைய அலுவலகத்துக்குமே துாரம் என்றாலும், அவன் அலுவலகம் செல்ல, 'கேப்' வசதி இருந்தது.
வேலை மாற்றமெல்லாம் செய்யாமல் விடுமுறை எடுத்து, யுகேந்திரனுடன் டில்லி சென்றவளால், மூன்று நாட்கள் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை.
அதீதமான மாசு, பழகாத ஊரில் புது ஆட்களை வேலைக்கு அமர்த்த முடியாமல், அத்தனை வேலைகளையும் அவளே செய்ய வேண்டிய கட்டாயம். காலையில், 8:00 மணிக்கே செல்ல வேண்டிய யுகேந்திரனுக்கு, உணவு தயாரித்தல் என, அவளுக்கு குளிர்காய்ச்சல் எடுக்க வைத்தது.
இத்தனையும் செய்து, தானும் வேலைக்கு செல்வது இயலாத காரியம் என்பதை உணர்ந்தவள், தன்னால் டில்லி வரமுடியாது என, உறுதியாக மறுத்து விட்டாள்.
சமதளத்தில் சென்ற பயணம், மெல்ல மெல்ல தள்ளாட ஆரம்பித்தது.
கடந்த, ஆறு மாதங்களாய் அம்மா வீட்டில் தான் வாழ்க்கை. அவளுடைய அன்றாடத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை. எப்போதும் போன்ற இயல்பான பழகிய நாட்கள். இன்னும் சொல்லப் போனால் இந்த ஆறு மாதத்தில் அவளுடைய நேர்த்தியான உழைப்பிற்காக, சம்பள உயர்வோடு, பதவி உயர்வும் கிடைத்து இருந்தது.
இந்த உயர்வை, சீரான ஓட்டத்தை விட்டுவிட்டு, புதிதாக எதை நோக்கியோ செல்வதை, சுத்தமாக வெறுத்தாள், பூரணி.
வந்தனாவை, 'மாலில்' எதிர்ப்பார்க்கவில்லை, பூரணி. சந்தோஷ அதிர்வோடு எதிர்கொண்டு மென்மையாக அணைத்து விடுவித்துக் கொண்டனர்.
நீண்ட நாட்களாகிறது. இப்போதெல்லாம் நெருங்கிய உறவுமுறைகள் கூட, வழிப்போக்கர்களாய் சந்தித்துக் கொண்டால் தான் உண்டு.
''ஆன்ட்டியை அழைச்சிட்டு கண்டிப்பா வரணும்,'' என, மிரட்டல் கலந்த அன்பு அழைப்போடு கிளம்பினாள், வந்தனா.
அடுத்து வந்த ஞாயிறில், அம்மா லட்சுமியுடன், வந்தனாவின் வீட்டுக்கு சென்றாள், பூரணி.
''உன் அம்மாவும், நானும் அத்தை பொண்ணு, மாமா பொண்ணு. ஒரு காலத்துல அத்தனை நெருக்கமா இருந்தோம். இப்போ ஒருத்தருக்கு ஒருத்தர் இருக்கோமா இல்லையாங்கிற தகவல் கூடயில்லை,'' என, லட்சுமி வருத்தப்பட்டுச் சொன்னபோது, இரு பெண்களும் புன்னகைத்துக் கொண்டனர்.
''உலகம் விஸ்தீரணம் ஆயிடுச்சு. மனிதர்கள் சுருங்கிப் போயிட்டாங்க, ஆன்ட்டி. அவ்வளவு தான். இதெல்லாம் தவிர்க்க முடியாதது,'' என்ற வந்தனா, தன் அம்மாவை மொபைல் போனில் அழைத்து, லட்சுமியிடம் கொடுத்து, பேச சொன்னாள். இருவரும் வெகுநாள் கழித்து கண்ணீரும், மகிழ்ச்சியுமாய் பேசிக் கொண்டிருந்தனர்.
''நீதான் வந்தனாவுக்கு எடுத்துச் சொல்லணும். நல்ல படிப்பு, உத்யோகம்ன்னு எல்லாத்துக்கு பின்னாடியும் எதுக்கு ஓடறோம்? மிச்சமுள்ள வாழ்க்கையை நிம்மதியா வாழத்தானே! அது கிடைச்சும் தக்க வைக்காம, மரத்துக்கு மரம் தாவுற குரங்கு மாதிரி நிலையில்லாம சுத்திட்டு இருக்காங்க புருஷனும், பொண்டாட்டியும்.
''அந்தக் காலத்துல நாம எல்லாம் எப்படி வாழ்ந்தோம்? படிப்பு, வேலை, கல்யாணம், குழந்தைன்னு, நுால் பிடிச்ச மாதிரி நேர்கோட்டுல ஒரு வாழ்க்கை. ஒரு நல்ல வேலை கிடைச்சிட்டா அதை தக்க வச்சிட்டு நிலைச்சு நிற்கிறது தானே, பார்வைக்கு அழகு.
''நம்ம தாத்தா, கும்பகோணத்து ஜவுளிக்கடையில, 40 வருஷம் கணக்கரா இருந்தாராம். அதனால தான், அவர் வேலையை விட்டுட்டு போகையிலே அப்படியொரு மரியாதையோட அனுப்பி வச்சாங்களாம்.
''இவ என்னடான்னா, ஒரு வேலை, ஒரு ஊர்ன்னு தங்காம, ஓடிட்டே இருக்கா. பார்க்க நல்லாவா இருக்கு. நீ கொஞ்சம் புத்தி சொல்லிட்டு போ,'' என, லட்சுமியிடம் பொறுப்பைச் சாட்டிவிட்டு வைத்தார், வந்தனாவின் அம்மா.
வந்தனாவே பேசட்டும் என, தாயும், மகளும் முகம் பார்த்து அமர்ந்திருந்தனர்.
''சென்னையில நல்ல சம்பளத்தோட வேலை கிடைச்சிருக்கு. அதற்காகத்தான் இங்கே வந்திருக்கேன். அது, அம்மா பார்வையிலே தப்பா இருக்கு.
''திருச்சியில சொந்தமா வீடு இருக்கு. நிலம் இருக்கு. சொந்தம் உறவுன்னு எல்லாரும் சுற்றி இருக்காங்க. இதையெல்லாம் விட்டுட்டு போக வேண்டாம்ன்னு, அம்மா நிறைய சொன்னாங்க. அதைக் கேட்காம வந்ததாலே வந்த கோபம்,'' எனக் கூறி, மென்மையாக சிரித்தாள், வந்தனா.
''அவங்க சொல்றதுல எந்தத் தப்பும் இல்லையே, வந்தனா. இந்த உலகத்துல எல்லாருடைய ஓட்டமும் எதுக்காக? தன்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி கொள்றதுக்காக. சிலர் தங்களுடைய வாழ்நாள் முழுக்கவே கூட, அந்த வளையம் கிடைக்காம வாழ்ந்து முடிச்சிடறாங்க. ஆனால், கடவுள் கருணையால, உனக்கு அப்படியொரு வாழ்க்கை கிடைச்சு இருக்கு.
''திருச்சியில எவ்வளவு பெரிய வீடு, அதையெல்லாம் விட்டுட்டு இங்கே எதுக்கு வரணும்? சம்பளம் குறைவா இருந்தாலும், உன்னோட பாதுகாப்பு எல்லையை விட்டு நீ வந்திருக்க கூடாது, வந்தனா,'' என, பூரணியின் அம்மா அக்கறையாய் சொன்னதும், மென்மையாகச் சிரித்தாள்.
''சவுகரியமான இடத்துல போய் உட்கார்ந்துட்டு வேடிக்கை பார்க்க, நம் வாழ்க்கை கிரிக்கெட் மேட்ச் இல்லை, ஆன்ட்டி. தோல்விகள்ல எப்படி தேங்கி நிற்க கூடாதோ, அதே மாதிரித்தான் வெற்றிகளிலேயும் தேங்கி நிற்க கூடாது.
''தன்னுடைய சாதனையை தானே முறியடித்த விளையாட்டு வீரர்ன்னு படிச்சிருப்பீங்க. ஒரே வெற்றியில அவன் தேங்கி நின்றிருந்தால், தன்னைத் தானே வெற்றி கொள்ளும் மறுவாய்ப்பு எப்படி கிடைத்திருக்கும்?
''பெரிய வீட்டில் மட்டும் வாழ என் உடலையும், மனதையும் பழக்கப்படுத்திக்க விரும்பல, ஆன்ட்டி. இதோ இந்த மாதிரி சின்ன சின்ன சங்கடங்களுடனான வாழ்க்கையையும் வாழ முயற்சிக்க விரும்பறேன்.
''ஒரு பாதுகாப்பான வளையத்துக்குள் தங்களுடைய உடலையும், மனசையும் பழக்கப்படுத்தி கொள்பவர்களுக்கு வளர்ச்சியும் இருக்காது, முன்னேற்றமும் இருக்காது.
''ஓட்டப்பந்தயத்துல கூட, ஒருகால் முன்னே இருந்தால், மறுகால் பின்னே தான் இருக்கும். அப்படி முன்னே பின்னே இருக்கும் போது தான், வாழ்க்கையும் சுவாரஸ்யமா இருக்கும். வேற வாழ்க்கையை ஏற்க முடியாத நிலைங்கிறதும் ஒருவிதமான ஊனம்.
''பாதுகாப்பான வளையத்துக்குள் எப்படி அடுத்து தோல்வி வராதுங்கறது நிச்சயமோ... அதே அளவு நிச்சயம், அடுத்து வெற்றியும் கிடையாதுங்கறதும் தானே,'' என, புன்னகையுடன் வந்தனா கூறி முடிக்க, யாரோ தலையில் அடித்தது போல் இருந்தது, பூரணிக்கு.
வீடு திரும்பும்போது, போனை நோண்டிக் கொண்டே ஆட்டோவில் வந்த பூரணியை முறைத்தபடி வந்தாள், லட்சுமி.
அம்மாவின் பார்வை புரிந்தவளாக, ''உங்க மருமகனுக்குத் தான், 'மெசேஜ்' பண்ணிட்டு இருந்தேன். எப்போ என்னை வந்து கூட்டிட்டு போறதா உத்தேசம்ன்னு கேட்டு,'' என, புன்னகையுடன் கூறினாள், பூரணி.
கைகளை குவித்து மனசுக்குள், வந்தனாவுக்கு நன்றி கூறினாள், லட்சுமி.
எஸ். பர்வின் பானு