Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/விசேஷம் இது வித்தியாசம் - இவ்வளவு தான் வாழ்க்கை!

விசேஷம் இது வித்தியாசம் - இவ்வளவு தான் வாழ்க்கை!

விசேஷம் இது வித்தியாசம் - இவ்வளவு தான் வாழ்க்கை!

விசேஷம் இது வித்தியாசம் - இவ்வளவு தான் வாழ்க்கை!

PUBLISHED ON : பிப் 23, 2025


Google News
Latest Tamil News
பிப்., 26 - சிவ ராத்திரி

உலகில் உயிர்கள் பிறக்கின்றன. பல இன்பங்களையும், துன்பங்களையும் அனுபவிக்கின்றன. இன்பம் வரும் போது உலகம் இனிக்கிறது. படைத்தவன் அப்போது மட்டும், நிலா போல், நம் கண்களுக்கு குளிர்ச்சியாகத் தெரிகிறான்.

கஷ்டம் வந்ததும், படைத்தவனை திட்டுகிறோம். அப்போது, நம் வாயில் வரும் முக்கிய சொற்றொடர், 'இதற்காகவா என்னைப் படைத்தாய்; இதற்கு என்ன அர்த்தம்; இவ்வளவு துன்பங்களையும் அனுபவித்து, நான் இங்கே வாழ விரும்பவில்லை...' என்பது தான்.

பிறந்தால் தானே கஷ்டம். பிறக்காமல் இருந்து விட்டால், பசிக்காது, பணம் தேவைப்படாது, நோய் வராது, நேரம் கெட்ட நேரத்தில் துாக்கம் வராது, உயிருக்குயிராக நேசிப்பவர்களை இழக்க வேண்டி வராது.

அப்போது, ஒரு ஆத்மாவின் நிலை எப்படி இருக்கும்? அது சிவத்துடன் ஒன்றி போயிருக்கும். 'இப்படி ஒரு நிலை எனக்கு வேண்டும், சிவனே... எனக்கு அழியா, நிலையான முக்தியைக் கொடு. உன்னோடு நான் இருந்து விட்டால், எனக்கு ஏது அழிவு?' என, கேட்பதாகும்.

இதற்காகத்தான், ஒரு குறிப்பிட்ட நாள் இரவில், விடிய விடிய கண்விழித்து, நம் பாவங்கள் கண்டு, சூடாய் இருக்கும், சிவனுக்கு அபிஷேகம் செய்து, 'என் பாவத்தை நிவர்த்தி செய்து, உன்னோடு இணைத்துக் கொள். இந்த பூமியில் வாழும் வரை, எனக்கு போதிய வசதி செய்து கொடு...' என, வேண்டுகிறோம். அந்த நாள், மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி; அந்த நாளே சிவராத்திரி.

எல்லா உயிர்களும் சிவத்துக்குள் அடக்கம் என்பதை விளக்க, புராணக்கதை உண்டு.

பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும், தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இந்த வழக்கு சிவனிடம் வந்தது. அவர்களிடம், 'நான் வானுக்கும், பூமிக்குமாக உயர்ந்து நிற்பேன். ஒருவர், என் முடியைக் கண்டு வர வேண்டும், இன்னொருவர், என் திருவடியை பார்த்து வர வேண்டும். யார் வெற்றி பெறுகிறாரோ, அவரே பெரியவர்...' என்றார், சிவன்.

அன்னப்பறவை வடிவெடுத்து, உயரே பறந்தார், பிரம்மா. வராக -பன்றி வடிவெடுத்து, பூமியை அகழ்ந்து சென்றார், விஷ்ணு. இருவராலும், வெல்ல முடியவில்லை. சிவனிடம், தன்னால் திருவடியைக் காண முடியாததை ஒப்புக்கொண்டார், விஷ்ணு. முடியைப் பார்த்து விட்டதாக பொய் சொன்னார், பிரம்மா.

பொய்யும், மெய்யும் சிவனை அடைய முடியாது. ஒருவர் இறந்து விட்டால், 'ஜீவன் போய் விட்டது...' என, சொல்வது உலக வழக்கம். அதாவது, அந்த உடல் பொய்யாகி விட்டது. இனி, அது எழாது என்று அர்த்தம். அந்தப் பொய்யே, பிரம்மனின் பாத்திரம்.

நாம், பிரம்மன்களாய் இருக்கிறோம். இந்த உலக வாழ்க்கை உண்மை என நம்பி, நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு, இறைவன் திருவடியை அடைய மறுக்கிறோம்.

விஷ்ணுவைப் போல உண்மையாக வாழ்ந்தாலும் கூட, இந்த உடல், உண்மை என நம்பி, மருந்துகளால் அதைக் குணப்படுத்த முயற்சிக்கிறோம். அது தற்காலிக தீர்வைத் தருமே தவிர, என்றேனும் ஒருநாள் உயிர் போய் விடும். எனவே, 'சிவனே! உன்னை நிரந்தரமாக அடைய எனக்கு நீ தான் வழிகாட்ட வேண்டும்...' என, வழிபடும் நாளே, சிவராத்திரி.

தி. செல்லப்பா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us