Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/பணமா, குணமா?

பணமா, குணமா?

பணமா, குணமா?

பணமா, குணமா?

PUBLISHED ON : மார் 23, 2025


Google News
Latest Tamil News
தன் மகள் நித்யாவை, படித்த, பெரிய பணக்கார வீட்டுப்பையன், இன்று பெண் பார்க்க வரப்போவதில் தலைகால் புரியவில்லை, சந்திரமதிக்கு.

அக்கம்பக்கமெல்லாம் தானே வலியப் போய், 'தெரியுமாடி கமலா. நித்யாவுக்கு தாய்லாந்து பையன் வரன் வந்திருக்கு. அதிர்ஷ்டக்காரிடி என் பொண்ணு...' என்றாள்.

'ஆமாமாம். படிப்பே சரியா வராம, பத்தாம் வகுப்போட நிறுத்தி, வீட்டோடு கிடக்கறவளுக்கு பாரின் மாப்பிள்ளையா! பலே பலே...' என்றாள், கிண்டலாக கமலா.

சந்திரமதியின் நாத்தனார் மகன், ரங்கன். அவனுடைய, 5 வயதில் மொட்டை அடிக்க பழனிக்கு போகும்போது, கார் விபத்தில் அவனைப் பெற்றவர்கள் இறந்து போயினர். ஒரு கால் ஊனமான நிலையில் உயிர் பிழைத்த ரங்கனை, தன் வீட்டில் வளர்க்க நினைத்தார், சந்திரமதியின் கணவர் சிதம்பரம்.

அப்போது தான் நித்யா பிறந்து ஓராண்டு ஆகி இருந்தது. ரங்கன், தங்கள் வீடு வருவதில் சந்திரமதிக்கு விருப்பம் இல்லை.

'அனாதை இல்லத்தில் சேர்க்கலாமே?' என, சிதம்பரத்திடம் கூற, பிடிவாதமாக மறுத்து விட்டார். ஊனக்காலோடு அவன் விந்தி விந்தி நடப்பதைப் பார்த்து முகம் சுளிப்பாள், சந்திரமதி. மகளை விட, அவன் அதிகம் படித்து விடக் கூடாது என்ற பொறாமையில், பத்தாம் வகுப்போடு, ரங்கனின் படிப்பை நிறுத்தி, வீட்டு வேலைகளுக்கு வைத்துக் கொண்டாள். அவனும் சற்று அசடாக வெகுளியாக இருந்தது, அவளுக்கு வசதியாக போனது.

சந்திரமதிக்கு மட்டுமல்லாமல், தெருவில் யார் அழைத்தாலும் அவர்களுக்காக சகல வேலைகளையும் சலிக்காமல் செய்வான், ரங்கன்.

இதைப் பார்த்து மனம் வேதனை அடைவார், சிதம்பரம். ரங்கனுக்காக பரிந்து பேசினால், அவனுக்கு சாப்பாடு போடாமல் சந்திரமதி விடுவாளோ என பயந்தார். தன்னை இளக்காரமாக பேசுவதையும், அடிமைபோல் நடத்துவதையும், சிதம்பரத்திடம் புகார் சொன்னதில்லை, ரங்கன்.

சற்று நேரத்தில் நித்யாவை பெண் பார்க்க, தாய்லாந்து பையனும், அவன் அம்மாவும் வரப் போவதாக போனில் தெரிவித்தார், தரகர்.

மகளை சிங்காரித்து விட்டு, சிதம்பரத்திடம், ''என்னங்க, பெண் பிடிச்சி போயிட்டா, உடனே நிச்சயதார்த்தம் வச்சிக்க சொல்வாங்களாம். தட்டு மாத்திக்க ரெடியா இருக்கணும்.

''வரதட்சணை எல்லாம் கேட்க மாட்டாங்க. ஆனால், தட்டில், கோட் சூட்டுக்கு, அஞ்சாயிரம் ரூபாயை கவரில் போட்டு வச்சாதான், பெண் வீட்டுக்கு மதிப்புன்னு தரகர் சொல்லி இருக்காருல்ல. வங்கிக்கு போய் பணம் எடுத்துட்டு வாங்க,'' என்றாள், சந்திரமதி.

வங்கிக்கு சென்ற சிதம்பரம் திரும்பி வருவதற்குள், மாப்பிள்ளையும், அம்மாவும் காரில் வந்து இறங்கி விட்டனர்.

காலை நொண்டி அடித்து அவர்களை வரவேற்ற ரங்கனை பார்த்து, பல்லை கடித்தாள், சந்திரமதி.

''யார் இந்தப் பிள்ளை. பார்க்க அப்பாவியா இருக்கானே. காரிலிருந்து நாங்க இறங்கினதும் பூ, பழம் கொண்ட எங்க பையை வாங்கி, எங்களை வீட்டு உள்ளே அழைச்சிட்டு வந்தானே?'' என்றாள், மாப்பிள்ளையின் அம்மா.

''அவன் எங்க வீட்டு எடுபிடி ஆள்,'' என்றாள், கூசாமல் சந்திரமதி.

மாப்பிள்ளை பையன், போனில் பேசிக் கொண்டே இருந்தான்.

''வீட்டுக்காரரு வங்கிக்கு போயிருக்காரு. இதோ வந்திடுவாரு,'' என்றாள், சந்திரமதி.

''அப்படியா... தரகர், முக்கிய வேலையா வெளியூர் போக வேண்டி வந்ததால், இங்க வரமுடியலேன்னு, போன் செய்தார். இவன் தான் என் மகன், பரத். 26 வயசு இப்போ. ஆனா, இவனுக்கு ஆறு வயசிருக்கிற போதே மாரடைப்பில், அவன் அப்பா போயிட்டார்.

''பரத், உன் வருங்கால மாமியாருக்கு வணக்கம் சொல்லேன். எப்ப பார்த்தாலும் ஆபீசு, வேலைன்னு போன்ல இருக்கலாமா?'' என, உரிமையுடன் கோபித்துக் கொண்டாள்.

''ஐயாம் ஸாரி,'' என, சந்திரமதியைப் பார்த்துக் கை குவித்தான், பரத்.

சந்திரமதிக்கு பெருமை பிடிபடவில்லை.

அறைக்குள் அலங்கார வல்லியாக, முறுக்கைக் கடித்து கொண்டிருந்த மகளின் கன்னத்தை தன் இரு உள்ளங்கைகளில் பற்றினாள்.

''மாப்பிள்ளை படிச்சு, பண்பானவரா தெரியறார். அவரு அம்மா சொன்னதும், போன்ல முக்கியமா பேசியதை நிறுத்தி எனக்கு வணக்கம் சொன்னாருடி. நீ அதிர்ஷ்டக்காரி,'' என, மகிழ்ந்து போனாள்.

''ஏம்மா. படிச்சவருங்கிற. பத்தாம் க்ளாஸ் பெயிலான என்னைக் கட்டிக்க சம்மதம் சொல்வாரா?''

''அடியே, ஒரு மாசம் முன்னாடி, உன் போட்டோ விபரம் எல்லாம் தரகர் கொடுத்ததும், 'எங்க குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு தான் வேணும்'ன்னு, பேசி முடிவு செஞ்சி தான் வந்திருக்காங்க,'' என்ற சந்திரமதி, மறுபடி கூடத்திற்கு வந்தாள்.

''எங்க ஊரு கிராமம் இல்ல, டவுனும் இல்ல. அதான் காலேஜ் இங்க இல்ல. வங்கியும் ஒண்ணுதான் இருக்கு. சிதம்பரம் மாமா இப்ப பணம் எடுக்கத்தான் வங்கிக்கு போயிருக்காரு, ஹிஹி,'' என, அங்கு பேசிக் கொண்டிருந்த ரங்கனை, சுட்டு விடுவது போலப் பார்த்தாள், சந்திரமதி.

வீடு திரும்பிய சிதம்பரம், ''மன்னிக்கணும். போன இடத்தில் தாமதமாகி விட்டது,'' எனச் சொல்லி கைகுவித்தார். பணக் கவரை, ரங்கனிடம் கொடுத்து, பீரோவில் வைக்கும்படி கூறினார்.

''ஒரு நிமிஷம்,'' என சொல்லிவிட்டு, போனைக் காதில் வைத்தபடியே, வாசல் பக்கம் போனான், பரத்.

''பெண்ணை வரச்சொல்லுங்க,'' என்றாள், பரத்தின் அம்மா.

சந்திரமதி உள்ளே போன போது, பணக் கவரோடு வாசல் பக்கம் போய் விட்டான், ரங்கன்.

நித்யாவை பார்த்ததும், ''படிப்பு இல்லைன்னாலும் பார்க்க லட்சணமாத்தான் இருக்கா,'' என்ற, பரத்தின் அம்மா, அருகில் மகனை காணாமல் திகைத்தாள்.

''ஹும் இப்படித்தான். இங்கே வந்தாலும் இவனை, 'ரெஸ்ட்' எடுக்கவிடாமல் போனில் சதா ஆபீசு வேலை பேச்சு தான்,'' என்றாள்.

''மாப்பிள்ளை இல்லேன்னா ஆபீசே ஓடாது போல இருக்கு,'' என, வியப்பில் விழிகளை விரித்தாள், சந்திரமதி.

உள்ளே வந்த பரத், ''ஸாரி,'' என்று சொல்லிவிட்டு, நித்யாவை பார்த்தான்.

பிறகு, ''எனக்கு பிடிச்சிருக்கு. சம்பிரதாயம் ஏதும் இப்போ வேண்டாம். நேரா கல்யாணத்துக்கு நாள் குறிச்சிடுங்க. அதுவும் நான், தாய்லாந்து திரும்புவதற்குள். 'லீவ்' அதிகமில்லை. கோவிலில் சிம்பிளா செய்தாலும் ஓ.கே., என்னம்மா சொல்றீங்க?'' என்றான்.

''ஆஹா, அதுக்கென்ன, நிச்சயதாம்பூலம் என்பதை இப்பல்லாம் கல்யாணத்துக்கு முதல் நாள் தான் வைக்கறாங்க. அப்படியே செய்வோம். சம்பந்தி, நீங்க முகூர்த்த நாள், நேரம் சீக்கிரமா பார்த்து பத்திரிகை அடிங்க,'' என சொல்லியபடி எழுந்தாள், பரத்தின் அம்மா.

''அம்மா ஆபீஸ்காரங்க ரெண்டு பேரை, இப்போ நான், ஈரோடுல அவசரமா சந்திக்கணும். அதனால், எனக்கு இப்ப ஒரு கார் வருது. அதில் நான் முன்னாடி கிளம்பறேன். நீங்க நாம வந்த காரிலேயே கோயமுத்துார் போயிடுங்க. நானும் ராத்திரி, 'லேட்' ஆனாலும் நம்ம வீடு வந்திடறேன்,'' என்றான், பரத்.

''சரிப்பா நீ கிளம்பு,'' என்றவள், ''இவன் இப்படித்தான் ஆபீசுக்காக ஓடாய் உழைப்பான்,'' என, மாப்பிள்ளையின் அம்மா பெருமையுடன் கூற, சந்திரமதியின் கால், நிலத்தில் தங்கவில்லை.

மாப்பிள்ளை மற்றும் அவனது அம்மா சென்றதும், அங்கு ரங்கன் இல்லாததை கவனித்து, ''ஆமா, ரங்கன் எங்கே?'' என்றார், சிதம்பரம்.

''அதானே. எங்க போனான். அந்த, லுாசுப்பயல், ரொம்ப நேரமாவே அவனைக் காணோம். அவன் கைல பணத்தை கொடுத்தீங்களே, அதோட கம்பி நீட்டிட்டானா?'' என, அலறினாள், சந்திரமதி.

''சேச்சே. அவனை அப்படி யெல்லாம் பேசாதடி.''

''நல்ல சமயம் பார்த்து நழுவிட்டான், திருடன். பணத்தோட ஓடிட்டான்.''

''வெறும் பத்தாயிரம் ரூபாய்க்காக, துரோகம் செய்யமாட்டான், ரங்கன்,'' என, சிதம்பரம் வாதிட்டாலும் அன்று இரவு வரை, ரங்கன் வீடு வராமல் போனதில், அவருக்கும் மனம் குழம்ப ஆரம்பித்தது.

'அப்பாவியாக, அசடாய் இத்தனை காலம் நடித்து விட்டானோ! ஏன் இப்படி சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போனான். ரங்கா... ரங்கா...' என, மனதுக்குள் விசும்பினார்.

நடு இரவு, கதவு தட்டப்படவும் குழப்பமாக கதவைத் திறந்தார், சிதம்பரம்.

வாசலில் போலீஸ்காரர் நின்று கொண்டிருந்தார். அவர் அருகில் தலை குனிந்தபடி நின்றிருந்தான், ரங்கன்.

துாக்க கலக்கத்தில் எழுந்து வந்தவள், ''நான் தான் சொன்னேனே. இப்ப பாருங்க, போலீஸ், அவனை வீட்டுக்கே கூட்டி வந்திருக்கு,'' என கத்தினாள், சந்திரமதி.

''ஆமாம்மா, ரங்கனை டவுன் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வண்டில இங்க கூட்டிட்டு வந்தேன். பார்க்க அப்பாவி போல இருந்தாலும், இவன் என்ன காரியம் செய்திருக்கிறான் தெரியுமா?'' என்ற போலீஸ்காரர், ரங்கனைப் பார்த்தார்.

''மாமா, மாமி... என்னை மன்னிச்சிடுங்க. உங்ககிட்ட சொல்லாம ஓடிப் போய்ட்டேன். பெண் பார்க்க வந்த அந்தப் பையன் பரத், வாசலில் போனில் பேசினதை தற்செயலா ஒட்டு கேட்டேன். அவன் தாய்லாந்தில் எப்பேர்ப்பட்ட வேலை பார்க்கிறான் என்பது, அவன் பேச்சுல தெரிஞ்சிது.

''அதனால், போன்ல அவன் குறிப்பிட்ட இடத்துக்கு, அவனைத் தொடர்ந்து நம்ம ஊர் கணேசன் ஆட்டோல ஏறிப் போனேன். ஈரோட்டுல, ஒருமாடி வீட்டுல, அவன் ஏறினான். ஆட்டோவை அனுப்பிட்டு அக்கம்பக்கம் பார்த்து, உஷாரா நானும் ரோட்ல கிடந்த துடைப்பத்தை எடுத்திட்டு பெருக்கப் போற மாதிரி பின்னாடி போனேன்.

''மாடிப்படில ஏறி மேல போனதும், மூடி இருந்த அறையில நடக்கறதை, கதவு சாவி துவாரம் வழியேப் பார்த்து, ஆடிப் போயிட்டேன். அங்க நாலைஞ்சி பொண்ணுங்களை கை கால் கட்டி வச்சிருந்தாங்க.

''எனக்கு ஏற்கனவே, பரத் போனில் பேசினப்பவே உண்டான சந்தேகம் ஊர்ஜிதமானதால உடனே கீழே இறங்கி வந்து, போலீசுக்கு என் போன்ல விவரம் சொன்னேன்,'' என, நெகிழ்ந்த குரலில் கூறினான், ரங்கன்.

போலீஸ்காரர் தொடர்ந்தார்...

''ஆமாம், அந்த அயோக்கியன், பரத், இந்தியாவிலிருந்து தாய்லாந்துக்கு பெண்களை கடத்தி வியாபாரம் செய்கிற கோஷ்டில இருக்கிறான். நல்லவேளை, ரங்கனுக்கு சந்தேகம் வந்து, பின் தொடர்ந்து போய் எங்களுக்கு சொன்னான்.

''நாங்க சுத்தி வளைச்சி அந்த கும்பலை பிடிச்சி, போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு வந்தோம். பரத், பல காலமா இந்த வேலை செய்வது தெரிஞ்சுது. எல்லாம் முடிய இவ்வளவு நேரமாச்சி. ரங்கனுக்கு நன்றி சொல்லி, அவரை பாதுகாப்பா வீட்டுல விட்டு வரச்சொல்லி, நடந்த எல்லாத்தையும் உங்ககிட்ட தெரிவிக்கணும்ன்னு, என்னை இவரோட அனுப்பி வைச்சார், இன்ஸ்பெக்டர். அப்ப நான் வரேன்,'' என, விடை பெற்று கொண்டார், போலீஸ்காரர்.

''அய்யோ, அந்த அயோக்கியன் நம்ம நித்யாவை கல்யாணம் செய்திருந்தா என்ன ஆகிறது,'' என, வீறிட்டாள், சந்திரமதி.

''ஆமாம் அப்படி நடக்காம நம்மைக் காப்பாத்திட்டான், ரங்கன்,'' என, நா தழுதழுத்தார், சிதம்பரம்.

''மாமா... அவசரத்துல, பணத்தையும் எடுத்து போயிட்டேன், மாமா. இந்தாங்க,'' என, கவரை, அவரிடம் நீட்டினான், ரங்கன்.

''பணம் என்னடா பணம்? உன் குணம் இப்பவாவது சில அல்பங்களுக்கு தெரியட்டும்,'' எனக்கூறி அவனை இறுக தழுவிக் கொண்டார், சிதம்பரம்.

ஷைலஜா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us