Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

PUBLISHED ON : ஜன 26, 2025


Google News
Latest Tamil News
'டூ-வீலர்' திருடர்கள் ஜாக்கிரதை!

மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கி வெளியே வந்தபோது, எதிரே, 'டூ-வீலரை' தள்ளியபடியே வந்தான், இளைஞன் ஒருவன்.

வண்டியின் பின்புறம், 'ஹெல்மெட்'டை 'ரோப்' பூட்டால் பூட்டியிருந்தான். கரடு முரடான சாலையில், 'ஹெல்மெட்' வண்டியில் மோதி, கடமுட என சத்தம் எழுப்பியபடி இருந்தது.

அந்த இளைஞனிடம், 'ஏம்பா.. வண்டி, 'ரிப்பேர்'னா... 'ஹெல்மெட்'டை தலையில் மாட்டிக் கொள்ளலாமே... ஏன் இப்படி உடையும் படி, 'ஹெல்மெட்'டை தொங்க விட்டு செல்கிறாய்... இதனால், வண்டியும், 'ஸ்கிராச்' ஆகுமே...' என்றேன்.

பதில் கூறாமல் சென்றான், அந்த இளைஞன்.

ஏதேச்சையாக கவனிக்க, வண்டியில் சாவி இல்லை. எனவே, சாவியை தொலைத்து விட்டான் போலிருக்கு என, நினைத்து, அங்கிருந்து நகர்ந்தேன்.

சிறிது துாரம் சென்றதும், 'மார்க்கெட்டில் திருடர்கள் அதிகமாகி விட்டனர். மார்க்கெட்டுக்கு வந்த ஒருவரது வண்டியை, யாரோ திருடி சென்று விட்டனர்...' என்றார், நண்பர் ஒருவர்.

உடனே, சாவி இல்லாமல், வண்டியை இளைஞன் தள்ளி சென்றது, நினைவுக்கு வர, அதுபற்றி நண்பரிடம் கூறினேன்.

'நீங்கள் கூறுவதை பார்த்தால், நிச்சயம், 'டூ-வீலரை' அவன் தான் திருடி சென்றிருக்க வேண்டும். உடனே அவனை, 'பாலோ' செய்து, போலீசில் பிடித்து தருவோம். நாளை, நம் வண்டியும் இப்படி திருட்டு போக வாய்ப்பு இருக்கிறது...' என்றார், நண்பர்.

அதன்படி, அந்த இளைஞனை பிடிக்க, இருவரும் விரைந்தோம். அவன் அருகில் சென்று, 'இந்த வண்டியின் எண்ணை கூறு...' என்றோம். மறுகணமே சுதாரித்த அவன், வண்டியை போட்டு விட்டு, 'எஸ்கேப்' ஆனான்.

பின்னர், மார்கெட்டில், 'டூ -வீலரை' தேடியபடி வந்த நபரிடம் கூற, வண்டியை எடுத்து கொண்டு, எங்களுக்கு நன்றி கூறி சென்றார்.

நண்பர்களே... இது போன்று யாராவது வண்டியை நகர்த்தி சென்றால், சாவி பகுதியை சோதித்து பாருங்கள். சந்தேகம் இருப்பின், அருகில் இருக்கும் காவல் நிலையத்துக்கு தகவல் தாருங்கள்.

— பி.என்.பத்மநாபன், கோவை.

முயன்றால் முடியாததல்ல!

ஐ.டி., துறையில், நல்ல சம்பளத்தில் வேலை பார்த்த என் தோழிக்கு, இரட்டை குழந்தைகள் பிறந்ததும், வேலையிலிருந்து விலகி விட்டாள். பிள்ளைகள் சற்று வளர்ந்ததும் மீண்டும் வேலைக்கு செல்ல நினைத்த போது, வேலை கிடைக்காமல், மன உளைச்சலில் இருந்தாள், தோழி.

'வேலை கிடைக்கவில்லையே என, அதையே நினைத்து கொண்டிருக்காமல், வேறு ஏதேனும் முயற்சித்துப் பார்...' என்று அறிவுறுத்தினேன், நான்.

சில நாட்களுக்கு பின், தோழியிடம் பேசியபோது, மிகுந்த உற்சாகத்துடன், 'குழந்தைகளை பார்த்துக் கொள்ளும், 'க்ரீச்' ஒன்று, சிறிய அளவில் ஆரம்பித்திருக்கிறேன்...' என்றாள்.

'ஐ.டி.,யில் வேலை பார்த்துவிட்டு, தற்போது ஆயா வேலை செய்கிறாயா?' என்று கிண்டலாக கேட்டேன்.

அதற்கு அவள், வேலை கிடைக்காமல் மிகுந்த மனவருத்தத்தில் இருந்ததை, இன்னொரு தோழியிடம் கூறியுள்ளாள். குழந்தையை பார்த்துக் கொள்ள பொறுப்பான ஆள் இல்லாததால், வேலையை விடப்போவதாக வருத்தம் தெரிவித்திருக்கிறாள், அந்த தோழி.

'நான் சும்மா தானே இருக்கிறேன். வேண்டுமானால் என் வீட்டில் விட்டு செல்...' எனக் கூற, இவளிடம் குழந்தையை விட்டு செல்ல ஆரம்பித்திருக்கிறாள், அவளது தோழி. குழந்தையை பொறுப்பாக பார்த்துக் கொள்வதால், நிம்மதியாக வேலைக்கு செல்வதாக அவளது தோழி சொல்லி, மற்ற, 'க்ரீச்'களில் வாங்கும் தொகையை வாங்கிக் கொள்ளும்படி கூறி இருக்கிறாள்.

மேலும், தோழி சம்மதம் தெரிவித்தால், அவளது  அலுவலகத்தில் வேறு சில பெண்களின் குழந்தை களையும் பார்த்துக் கொள்ளுமாறும், அதற்கு தகுந்த ஊதியத்தை பெற்றுக் கொள்ளும்படியும் யோசனை கூறியுள்ளாள்.

அதன்படி, இப்போது, இரண்டு பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி, 15 குழந்தைகளை கவனித்து வருகிறாள்.

வாடகை மற்றும் வேலையாட்களுக்கு சம்பளம் போக, மாதம், 1.5 லட்சம் ரூபாய் வரை கிடைக்கிறது.

ஐ.டி., வேலையில் கிடைக்கும் சம்பளத்தை விட, வீட்டிலேயே நல்ல வருமானத்தை ஈட்டி வரும் தோழியை மனதார பாராட்டினேன்.

— ஆ.பூங்குழலி, சென்னை.

குரங்கு கையில் மொபைல் போன் சிக்கினால்!

எங்கள் பகுதியில் குரங்குகள் நடமாட்டம் அதிகம்.

எங்கள் வீட்டுக்கு பக்கத்தில், கட்டட வேலை நடந்து கொண்டிருந்தது. அதில், வேலை பார்த்துக் கொண்டிருந்த கொத்தனார், அவருடைய மொபைல் போனை ஒரு ஓரமாக வைத்துவிட்டு, சிமென்ட் கலவை தயார் செய்து கொண்டிருந்தார்.

திடீரென்று தாவி வந்த குரங்கு, அவருடைய மொபைல் போனை துாக்கிக் கொண்டு, மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டது.

எல்லாரும் திகைத்துப் போயினர். ஆனால், மின்னல் வேகத்தில் பக்கத்தில் இருந்தவரின் மொபைல்போனை வாங்கி, தன்னுடைய மொபைல் எண்ணுக்கு அழைத்தார், கொத்தனார். அவரது மொபைலில், 'ரிங்டோன்' சத்தம் கேட்டு பயந்த அந்த குரங்கு, மொபைலை கீழே போட, அதை அவர் சரியாக பிடித்துக் கொண்டார்.

எல்லாரையும் போல பதட்டப்படாமல், சமயோசிதமாக யோசித்து செயல்பட்டது கண்டு அனைவரும் அவரை பாராட்டினோம்.

- சு.பிரபாகர், மதுரை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us