Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/அரிய அளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள் - யார் இந்த தம்பி?

அரிய அளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள் - யார் இந்த தம்பி?

அரிய அளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள் - யார் இந்த தம்பி?

அரிய அளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள் - யார் இந்த தம்பி?

PUBLISHED ON : ஜன 26, 2025


Google News
Latest Tamil News
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி போன்ற மிக அரிதான ஆளுமைகளுடன் பழகக் கிடைத்த வாய்ப்பை எண்ணி, பலமுறை பெருமிதம் கொண்டிருக்கிறேன்.

'குமுதம்' இதழின் ஆண்டு விழா, சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்தது. அப்போது, முதல்வராக இருந்த, கருணாநிதி தான் தலைமை. பத்திரிகையாளர்களை மதிப்பதில் அவருக்கு இணை, அவரே தான். சில கருத்து வேறுபாடுகள் நிலவிய போதும், பெருந்தன்மையுடன் வந்து கலந்து கொண்டார்.

வைரமுத்து மற்றும் பல தமிழக ஆளுமைகள் கலந்து கொண்ட, மிகப் பிரமாண்டமான விழா.

'குமுதம்' ஆசிரியர் குழுவினர், மேடை ஏறுவதை தவிர்த்தனர். 'குமுதம்' இதழின் சகோதரப் பத்திரிகையான, 'கல்கண்டு' இதழின் பொறுப்பில், நான் இருந்ததால், நான் தான் வரவேற்புரை நல்க வேண்டும் என, முடிவு செய்தது, 'குமுதம்' நிர்வாகம்.

'சம்மதம் தானே...' என்றனர்.

கரும்பு தின்னக் கூலி கொடுத்தால் மறுக்கிற ஆளா, நான்?

'முத்தமிழ் அறிஞர் கருணாநிதி முன்னிலையில் பேசப் போகிறீர்கள், முடியும்ல...' என, எச்சரிக்கை மணி அடித்தனர், சிலர்.

நா குழற, தொண்டையில் பஞ்சு அடைக்க, வியர்த்துக் கொட்ட, தொடை நடுங்க மேடையில் பேசப் போகிறேன் என, பலர் கணித்திருக்க, பட்டாசை கொளுத்திப் போட்டேன், நான்.

வரவேற்புரையில் கைதட்டல் பெறுவது சுலபம் என்றா நினைக்கிறீர்கள்! ஆனால், நான் பெற்றேன்.

மேடையில் வைரமுத்துவுடன் பேசிக் கொண்டிருந்தவர், விழா களைகட்ட ஆரம்பித்ததும், என்னை நோக்கித் திரும்பினார், மு.கருணாநிதி.

ஓரக் கண்ணால் இதைக் கவனித்த எனக்கு, மேலும் உற்சாகம் ஊற்றெடுத்தது. என் பேச்சு எடுபட்டதா, இல்லையா என்ற ஐயப்பாடு, எனக்கு எழவே இல்லை.

ஒரு மாணவன் தேர்வை எழுதி முடித்து, வெளியே வந்ததும், அவனுக்கு நன்றாகவே தெரியும், தான் சிறப்பான மதிப்பெண் பெறுவோம் என்று!

அதன் பின் பேச வந்த, மு.கருணாநிதி, தன் பேச்சில், என் வரவேற்புரை குறித்து, என் பெயரைக் குறிப்பிட்டு, நல்ல வார்த்தை ஒன்றைப் பயன்படுத்தி (ஐயோ! நினைவுக்கு வரமாட்டேங்குதே!) பேச, சபை, தன் தீர்ப்பை உறுதி செய்து கொண்டது.

விஷயம் இனிமேல் தான் ஆரம்பிக்கிறது.

மு.கருணாநிதியின் சொல்லாற்றலையும், பேச்சுத் திறனையும் சொல்லவும் வேண்டுமா? சபையை, தம் செம்மாந்த தமிழால் கட்டிப் போடுவதில், அவருக்கு இணை எவர் என்கிறீர்கள்? பிச்சுப்புட்டார் போங்க!

மறுநாள், கவிஞர் வைரமுத்து, என்னைத் தொலைபேசியில் அழைத்தார்.

திரைத்துறை சாராத சிலரிடம் அவருக்கு நெருக்கம் உண்டென்றால், அவர்களுள் நானும் ஒருவன். இதற்கு காரணங்கள் இரண்டு. ஒன்று, என் தந்தையை மதிப்பவர். இரண்டு, பச்சையப்பன் கல்லுாரியில் நாங்கள் இருவரும் ஒன்றாக படித்தவர்கள்.

தொலைபேசியில் அழைத்து, எனக்கு மிக மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்தார், வைரமுத்து.

ஆம்!

'விழாவில், வரவேற்புரையின் போது, 'யார் இந்த தம்பி? நல்லாப் பேசுறாரே...' என்று, மு.கருணாநிதி, உங்களைப் பற்றி விசாரித்தார்...' என்றார்.

'என்ன சொல்றீங்க... அப்படியா கேட்டார். திரும்ப அவர் கேட்டதை அப்படியே சொல்லுங்க!' என்றேன், நான்.

தனிப்பட்ட உரையாடல்களில் மட்டும், தனிச் சிரிப்பு சிரிப்பார், வைரமுத்து. அதே இலக்கணப்படி சிரித்தார்.

உற்சாகத்தின் உச்சத்திற்கே போன நான், மீண்டும் மீண்டும் வைரமுத்துவிடம் கேட்டு மகிழ்ந்தேன்.

'ஏன் லேனா இப்படி இருக்கீங்க? முதல்வரோட தொடர்பு வச்சுக்குங்க! தமிழ்வாணன் மகன் இப்படியா இருப்பீங்க?' என்றார், வைரமுத்து.

'எதற்கும், யாரிடமும் போய் நிற்கும் பழக்கமில்லை. அப்படி நெருக்கம் ஏற்படுத்திக் கொண்டால், பிறகு விமர்சிக்க முடியாது இல்ல. அதான்...' என்று தயங்கினேன்.

'கொள்கை வேறு; நட்பு வேறு. ஏதோ ஒரு வகையில் தொடர்புல இருக்கணும்ல?' என்றார்.

அப்படி ஒரு வாய்ப்பும் வந்தது. இலக்கிய அணிச் செயலராக இருந்த எங்கள் ஊர்க்காரரான, (தேவகோட்டை) கயல் தினகரனை தொடர்பு கொண்டு, 'கருணாநிதியிடம் நேரம் வாங்கித் தாருங்கள். சந்திக்க வேண்டும்...' என்றேன்.

கருணாநிதியை சந்தித்த அந்த அனுபவம் மிகச் சுவையானது.

சொல்கிறேனே!



தொடரும்.

லேனா தமிழ்வாணன்






      Our Apps Available On




      Dinamalar

      Follow us